PUBLISHED ON : மே 11, 2025

எல்லா நேரமும் ஏதோ ஒரு சத்தம் நம் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.
இதனை போன்று தொடர்ச்சியாக ஏற்படும் அதிக சத்தத்தின் காரணமாக, நம் உள்காதில் உள்ள மென்மையான உறுப்புகள் சேதமடைந்து, நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கச் செய்யலாம். இதன் விளைவாக, இளம் வயதிலேயே 'ஹியரிங் எய்ட்' பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 50 டெசிபல் ஒலிக்கு மேல் கேட்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
நம்மை சுற்றி ஏற்படும் சத்தத்தின் அளவை கண்காணிப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லை. இருப்பினும், நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களின் ஒலி அளவை 50 - 60 சதவீதம் வரை மட்டுமே வைத்து கேட்பதால், 50 டெசிபல் என்ற அளவை கடைப்பிடிக்க முடியும். சத்த அளவை குறைவாக அளிக்கும் ஹெட்போன்களையும் நாம் பயன்படுத்தலாம். இது, சுற்றுச்சூழலில் ஏற்படும் சத்தங்களை குறைக்க உதவும். குழந்தைகள் பல்வேறு விதமான மின் சாதனங்களுக்கு அடிமையாக உள்ளனர். அவர்கள் பார்க்கும் வீடியோக்களும், விளையாட்டுகளும் அதிக சத்தம் நிறைந்தவையாக உள்ளன. இவை, குழந்தைகளின் காதுகளை வெகுவாக பாதிக்கின்றன. இவற்றை தவிர்க்க, தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பொது நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் ஒலிபெருக்கி அருகே ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பது, நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்தும். செவித்திறன் பாதிப்பை, 'பியூரிடோன் ஆடியோகிராம்' எனப்படும் எளிய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். அதிக ஒலி, செவித்திறனை மட்டும் பாதிக்காது; மற்றவர்கள் பேசும் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதிலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
டாக்டர் ஆண்ட்ரூ தாமஸ் குரியன்,
காது, தொண்டை நிபுணர்,
கிளெனீகல்ஸ் மருத்துவமனை, சென்னை79967 89196info@gleneeaglesglobalhospitals.com