
கனகா, மதுரை: வயிற்றில் பூச்சியை கட்டுப்படுத்த மருந்து சாப்பிட வேண்டுமா?
சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, மோசமான குடிநீர் காரணமாக உடலில் கிருமித்தொற்று ஏற்படுகிறது. இதைத் தான் வயிற்றில் பூச்சி உள்ளது என்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அதற்காக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். தேவைப்படும் போது 'டீவார்மிங்' மருந்து எடுத்தால் போதும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே ஒரே நாளில் மருந்து எடுப்பது குறித்து டாக்டரின் ஆலோசனை பெறலாம். குழந்தைகள் மலத்தில் புழுக்கள் இருப்பது, ஆசனவாயில் அரிப்பு இருந்தால் மருந்து எடுத்துக் கொள்ளலாம். குடலின் மேற்பரப்பில் பரந்திருக்கின்ற பாக்டீரியா கிருமிகள் தான் இன்னொரு ஆபத்து. சிறுகுடலில் பாதகம் தரும் கிருமிகள் அதிகமாகி, நல்லது செய்யும் கிருமிகள் குறைந்தால் 'புரோபயாடிக்' மருந்துகளை டாக்டர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் பி. ராஜேஷ்பிரபு, வயிறு, இரைப்பை, கல்லீரல் நோய்கள் சிறப்பு நிபுணர், மதுரை
வ.தெய்வானை, சின்னாளபட்டி: கோடை கால வெப்பநிலை மாறுபாட்டால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருமா. 3 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு சளி தொந்தரவு ஏற்படாமல், உடல் சூடு பராமரிக்க (குளிர்ச்சியூட்ட) வழி கூறுங்கள்?
பருவநிலை மாற்றங்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 3 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு உடல் எதிர்ப்பு சக்தி போன்றவை வளர்குழந்தை நிலையில் இருப்பதால் எளிதில் பாதிப்பு ஏற்படும். தினமும் குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.
எலுமிச்சை சாறு, தயிர், தர்பூசணி, தண்ணீர் போன்ற இயற்கை பானங்கள் சிறந்தவை. குளிர்சாதனப்பெட்டியில் அதிக நேரம் பராமரிப்பது சளியை ஏற்படுத்தும். பருத்தி ஆடைகள் பயன்படுத்துவதால் வெப்பத்தை ஒடுக்கி உடலை சுவாசிக்க வைக்க உதவும். கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவுவது, சளி, தும்மல் உள்ள பிறரின் அருகில் செல்லாமல் இருப்பது போன்ற தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும். தினமும் 9 முதல் 11 மணி நேர சீரான துக்கம், பழங்கள், காய்கறிகள், சிறிதளவு தயிர் போன்றவையும் வெப்பத்தை கட்டுப்படுத்தும். சுக்கு, திப்பிலி, துளசி போன்ற இயற்கை மூலிகை கசாயம் கொடுத்தால், சளி காய்ச்சல் வருவதை தடுக்கலாம். அடிக்கடி பாதிப்பு ஏற்படும் சூழலில் டாக்டரை அணுகுவது அவசியம்.
- டாக்டர் ஜெ.காமராஜ்அரசு மருத்துவக் கல்லுாரிகரூர்
தினேஷ், தேனி: குழந்தைகளுக்கு பற்கள் சொத்தை ஏற்படாமல் தடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கு தினமும் காலை, இரவு பல் துலக்குவதை பழக்கப்படுத்த வேண்டும். சாக்லேட், இனிப்புகள் சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது. இனிப்புகள் பற்களுக்கு இடையே சிக்கிக்கொண்டால் சுத்தம் செய்ய வேண்டும். இது பற்சொத்தை ஏற்படுவதை தடுக்கும். குழந்தைகளுக்கு 6 வயதிற்கு மேல் பற்கள் விழுந்து முளைக்கும். அந்த காலகட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தால் பல் வரிசை சீராக வளரும்.
- டாக்டர் பாஸ்கரன்பல் மருத்துவர் அரண்மனை புதுார், தேனி
எம். ராஜேஷ், ராமநாதபுரம்: எனது உடலில் அரிப்பு ஏற்பட்டு தழும்புகள் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன?
கோடை காலங்களில் பூஞ்சை தொற்று பாதிப்பு(படர் தாமரை) அதிகமாக இருக்கும். குளத்தில் குளிப்பவர்களுக்கு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படும்.பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகள், உடைகள், உள்ளாடைகளை மற்றவர்கள் பயன்படுத்தும் போது இந்த அவர்களுக்கும் பரவும். வியர்வை, ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது பூஞ்சை தொற்று ஏற்படும். இது போன்ற நேரங்களில் உடலில் அரிப்பு ஏற்பட்டு, தழும்புகள் போன்று காணப்படும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள தோல் நோய் டாக்டர்களை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். நோய் பரவாமல் தடுக்க கோடை காலங்களில் காலை, இரவு என இரு நேரங்களிலும் குளிக்க வேண்டும். பூஞ்சை தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பிறர் பயன்படுத்தக்கூடாது. ஆடைகளை வெயிலில் உலர வைக்க வேண்டும். குறிப்பாக உள்ளாடைகளை வெயிலில் உலர வைத்து பிறகே பயன்படுத்த வேண்டும்.
-டாக்டர் பி.ராமசுப்பிரமணியன்தோல் நோய் சிகிச்சை நிபுணர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
ச.சவுந்தர்யா, சிவகங்கை: கோடை வெப்பத்தில் இருந்து தற்காப்பது எப்படி?
மனித உடல் சாதாரணமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்க முயல்கிறது. வெப்பமான சூழலில் உடல் வியர்த்து தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செலுத்தி வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனை வெப்பநிலை கட்டுப்பாடு என்று அழைக்கிறோம். ஆனால் வெப்பம் அதிகமாகும் போது இக்கட்டுப்பாடு செயலிழக்க தொடங்குகிறது. அதிக வியர்வை காரணமாக தண்ணீர் மற்றும் உப்புசத்து குறைகிறது. இதனால் அதிக தாகம், வாய் வறட்சி, சிறுநீர் குறைதல், உடல் பலவீனம் ஏற்படும். தசைகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படும். சில நேரங்களில் அதிக வெப்பத்தால் வெப்பக்காய்ச்சல் (ஹீட் ஸ்டோர்க்) ஏற்படும். இதனால் அதிகம் முதியவர்கள், குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதய நோயாளிகள் பாதிக்கப்படுவர். இவற்றை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். வெப்பத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமுள்ள உடைகளை அணிய வேண்டும். குளிர்சாதன பொருட்கள், குளிர்ச்சியூட்டும் நீர் ஆகாரங்கள், ஓ.ஆர்.எஸ்., கரைசல் உட்கொள்ளவேண்டும்.
- டாக்டர் மு.வித்யாஸ்ரீஉதவி பேராசிரியைஅரசு மருத்துவக் கல்லுாரிசிவகங்கை
ஜீவன், அருப்புக்கோட்டை: என் வயது 26. நான் சென்னையில் ஐடி., நிறுவனத்தில் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறேன். எனது கண்களில் நீர் வடிதல், எரிச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கின்றன. அடிக்கடி இவ்வாறு உள்ளது. இதற்கு தீர்வு என்ன?
எல்சிடி, யிலிருந்து எல்இடி, மானிட்டருக்கு மாறுங்கள். மானிட்டர் டிஸ்பிளே செட்டிங்கை நமது சுற்று சூழலின் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு மாற்றுங்கள். கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் அவசியம். மானிட்டரின் திரை நமது கண் அளவை விட சிறிது கீழே இருக்க வேண்டும்.
20:-20:-20 என்ற எளிய பயிற்சியை செய்யுங்கள். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 முறை கண் இமைத்து பார்க்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு அவசியம். வேலை தவிர மற்ற நேரங்களில் அலைபேசி, கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிருங்கள். ஆண்டிற்கு ஒரு முறை கண் பரிசோதனை அவசியம்.
-டாக்டர் லட்சுமி மலால் நாகராஜன்கண் மருத்துவர் அருப்புக்கோட்டை