PUBLISHED ON : ஜூலை 10, 2022

பெருங்குடல் கேன்சருக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தான, 'டோஸ்டார்லிமாப், டார்கெட்டெட் தெரபி' வகையைச் சேர்ந்தது. எந்த வகையான கேன்சராக இருந்தாலும், அந்த செல்களை அழிக்க மருந்து கொடுக்கும் போது, பல சமயங்களில் வேகமாக வளரும்
ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடும். அதனால் தான், 'கீமோ தெரபி' சிகிச்சையின் போது தலைமுடி முழுதும் உதிர்ந்து விடுகிறது. அப்படி இல்லாமல், கேன்சர் செல்களை மட்டும் இலக்காக வைத்து அழிக்கும் சிகிச்சை முறை டார்கெட்டெட் தெரபி. கடந்த பல ஆண்டுகளாக, கேன்சர் சிகிச்சையில் இது நல்ல பலனை தருகிறது.
இந்த சிகிச்சையில் பெருங்குடல், மலக்குடல் கேன்சருக்கு, சமீபத்தில் டோஸ்டார்லிமாப் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை கேன்சரால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு, ஆறு மாதங்கள் சிகிச்சை அளித்ததில், அவர்கள் அனைவருக்கும் கேன்சர் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டது. இது மிகப் பெரிய ஆரம்பம்.
கேன்சர் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும், மரபியல் காரணியும் முக்கியமானதாக உள்ளது. பி.ஆர்.சி.ஏ., என்ற மரபணுவில் மாற்றம் ஏற்பட்டால், மார்பக கேன்சர் வரலாம். இந்த மரபணு மாற்றத்தால் மார்பக கேன்சர் பாதிப்பு வந்தால், 'ஹெர்செப்டின்' என்ற டார்கெட்டெட் தெரபி மருந்து தருவதால் முற்றிலும் குணம் பெறுகின்றனர். வேறு எந்த சிகிச்சையும் தேவைப்படாது.
குறிப்பிட்ட மரபணு மாற்றத்தை இது டார்கெட் செய்கிறது. வேறு காரணத்தால் மார்பக கேன்சர் வந்தால், இந்த மருந்து முழுமையாக பலன் தருவதில்லை. அதே போன்று, 100 பேருக்கு மலக்குடல் கேன்சர் இருந்தால், அதில் 10 பேருக்கு எம்.எம்.ஆர்., எனப்படும், 'மிஸ் மேட்ச் ரிப்பேர்' மரபணு மாற்றத்தால் கேன்சர் வரும். இவர்களுக்கு, டோஸ்டார்லிமாப் மருந்தை தரும் போது முழுமையாக பலன் தருகிறது.
- நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆப் மெடிசின்
