கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நிமிர்ந்து நோக்கும் நேரம் இது!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நிமிர்ந்து நோக்கும் நேரம் இது!
PUBLISHED ON : மே 05, 2019

தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்துடனேயே, ஒவ்வொரு நிமிடமும் வாழ்வதால், கழுத்து, முதுகு வலி, இருபது வயதிலேயே வந்து விட்டது.
20 - 30 வயதிற்குட்பட்டவர்கள், தினமும், 100 -115 முறை, இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்; இவர்களில், 60 சதவீதம் பேர், 5 - 6 மணி நேரம் இணையதளத்தை பார்க்கின்றனர், 40 சதவீதம் பேர், 9 -11 மணி நேரம், பயன்படுத்துகின்றனர்.
வயதானவர்கள், ஒரு நாளில் ஆறு முறை, தங்களின் ஸ்மார்ட் போனை பார்க்கின்றனர். இது சமீபத்திய ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள்.
மொபைல் போன், லேப் - டாப், போன்ற மின் தொடர்பு சாதனங்களை, அதீத ஈடுபாட்டுடன் பயன்படுத்தும் போது, கழுத்து முன் பக்கமாக குனிந்தே இருக்கிறது.
இதனால், கழுத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள தசை இறுக்கமாக மாறி விடுகிறது; கழுத்தின் கீழ் உள்ள எலும்பு இணைப்புகளில், தேய்மானம் ஏற்பட்டு, கழுத்துப் பகுதியில், தண்டுவட முடக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்தப் பிரச்னைக்கு, 'டெக் - நெக்' அல்லது 'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்' என்று பெயர்.
கழுத்து நேராக இருக்கும் நிலையில், தலையின் எடை, 5 கிலோவாக இருக்கும். முன்பக்கமாக, 30 டிகிரி கோணத்தில் குனிந்தால், தலையின் எடை, 18 கிலோவாக அதிகரிக்கும்.
இதுவே, 60 டிகிரி குனிந்தால், தலையின் பாரம், 27 கிலோ; குழந்தையை துாக்கி தோளில் வைத்துக் கொண்டால் இருக்கும் கனம் இது.
தொடர்ந்து, பல மணி நேரம் உட்கார்ந்தே இருப்பது, முதுகுத் தண்டில், அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது நமக்குப் புரிவதில்லை. இதோடு, கழுத்தும் முன்பக்கமாக குனிந்தே இருப்பதால், பிரச்னை இன்னும் அதிகமாகிறது. இது தவிர, தோள்பட்டை வலி, விரல்கள் மரத்துப் போவது, தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
கழுத்து, முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி உட்கார்ந்து, கண்களுக்கு நேர்கோட்டில், மின் தொடர்பு சாதனங்களை வைத்து பயன்படுத்த வேண்டும். கழுத்திற்கான பிரத்யேக பயிற்சிகளை தினமும் செய்வது, பிரச்னைகளை பெரிதாக்காமல் பாதுகாக்கும்.
டாக்டர் கே.நரேஷ் குமார், எலும்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,
பார்வதி மருத்துவமனை, சென்னை. மொபைல்: 98845 45000
