கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - சுவாசமே... சுவாசமே!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - சுவாசமே... சுவாசமே!
PUBLISHED ON : நவ 24, 2019

சுவாசமும், இதய துடிப்பும் உயிர் வாழ முக்கியமானவை. இரட்டை மாடுகள் வண்டியை இழுப்பது போல, சுவாச வேலையை நுரையீரலும்; ரத்தத்தை, 'பம்பிங்' செய்யும் வேலையை இதயமும், ஓய்வின்றி செய்கின்றன.
இதில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும், மற்றது இயங்காது.
இதில், ஏதாவது ஒன்று செயலிழக்கும் போது, மீண்டும் செயல்பட வைக்க தரப்படுவதே, தீவிர சிகிச்சை பிரிவின் வேலை. ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளியின் உயிர் காக்க, பல நவீன மருத்துவ கருவிகள் வந்து விட்டன.
பல்ஸ் ஆக்ஸி மீட்டர்
சுவாசக் கோளாறுகளை கண்டுபிடிக்க உதவும் எளிமையான வழி இது. இதை, விரல் நுனியில் மாட்டி, பிராணவாயுவின் அளவு, இதயத் துடிப்பு இரண்டையும் அறியலாம்.
மூச்சிரைப்பு, படபடப்பு இருக்கும் போது, இக்கருவியின் உதவியுடன், நோயின் தன்மையை அறிந்து, மேற்கொண்டு தேவையான சிகிச்சையை தொடரலாம்.
பிராணவாயுவின் நிலை, 95 - 98 சதவீதம் இருப்பது, சாதாரண நிலை. இது, 80 - 90 சதவீதம் என குறைந்தால், 'ரெஸ்பிரேட்டரி பெயிலியர்' என்று சொல்லப்படும், சுவாச கோளாறு இருக்கிறது என்ற பொருள்.
மூக்கு வழியாக, 'மாஸ்க்' வைத்து, பிராணவாயுவை செலுத்த வேண்டும். இது எளிமையான முறை.
ஊடுருவல் பிராணவாயு முறை
இதில் வாய் வழியாக சுவாசக் குழாயில், பிளாஸ்டிக் குழாய் பொருத்தி, வென்டிலேட்டர் இணைத்து விடுவர். இதை, செயற்கை சுவாச வென்டிலேஷன் என்பர்.
இதில், நுரையீரல் கோளாறுகளை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க முடியும். நுரையீரல் தன்னிச்சையாக இயங்க துவங்க, இதயமும் நன்றாக செயல்பட்டால், இந்த கருவியை எடுத்து விடலாம்.
இன்ட்ரா அயோடிக் பலுான் பம்ப்
இதயத்தின் இயக்கம், அதாவது, 'பம்பிங்' செய்வது குறைந்து, ரத்த அழுத்தமும் குறைந்தால், ரத்த அழுத்தத்தை சீராக்க பயன்படும் கருவி இது.
இந்த கருவியை, இதயத்தின் மகாதமனியில் பலுான் வடிவில் செலுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தின் செயல்பாட்டை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்ஸிஜினேசன் - எக்மோ
இக்கருவி, பம்ப் ஆக்சிஜெனேடரில் இருந்து வேறுபடுகிறது. இவை இரண்டும், செயற்கை நுரையீரல் மற்றும் இதயத்தின் வேலையை செய்கின்றன.
இதய அறுவை சிகிச்சையின் போது, இதயத்தை தற்காலிகமாக செயலிழக்கச் செய்து, இதயம் மற்றும் நுரையீரலின் வேலையை இக்கருவி செய்யும். இதனால், இதற்கு, 'ஹார்ட்- லங்க் மிஷின்' என்று பெயர்.
கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு இந்த கருவியை தவிர்த்து, இதயத் துடிப்பின் அளவை குறைத்து, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு, 'ஆப் பம்ப்' என்று பெயர்.
வால்வு மாற்ற அறுவை சிகிச்சைக்கும், இந்த மிஷின் பயன்படுகிறது. தற்போது, உடலில் எளிதாக பொருத்தக் கூடிய அளவிற்கு, 'எக்மோ' கருவி, சிறியதாக வந்துள்ளது.
இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், இக்கருவியை உடலில் பொருத்தி, பழுதடைந்த இதயம், நுரையீரலை அகற்றி, தானமாகப் பெற்ற உறுப்புகளை பொருத்திய பின், கருவியை அகற்றி விடுவர்.
இதற்கு சராசரியாக, 25 லட்சம் ரூபாய் வரை செலவு பிடிக்கும்.
லெப்ட் வென்டிகுலர் அசிஸ்ட் டிவைஸ்
இந்த நவீன கருவி, இதயத்தின் இடது கீழறை செயலிழந்து, இதயத்தின் துடிப்பு, 'பம்பிங்' குறைந்தால், அதை இறுதி நிலை இதய செயலிழப்பு என்கிறோம்.
இந்த நிலையில், இதயத்தின் இடது கீழறையில் இருந்து, மகாதமனிக்கு ரத்தத்தை, 'பம்ப்' செய்து அனுப்பும் வேலையை இந்த கருவி செய்யும்.
இதயத்தின் இடது கீழறை முழுவதுமாக செயலிழந்தவர்களுக்கு, இக்கருவியின்
உதவி உடனடியாக தேவைப்படும்.
கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு, இதய தசை கோளாறுகளால் அல்லது 'மயோகார்டைடிஸ்' என்ற நோயால், இடது புற இதயம் பழுதடைந்து இருக்கும்.
உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எல்லாம் சீராக இருக்கும் நிலையில், இதயம் மற்றும் நுரையிரல் பாதிப்பை சரி செய்ய, 'வெஸ்ட் வென்டிகுலர் அசிஸ்ட் டிவைஸ்' உதவுகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள், மாற்று இதயம் கிடைக்கும் வரை, 500 கிராம் எடையுள்ள இக்கருவியை, இடுப்பில் பெல்ட் போல கட்டி விடுவர்.
இதற்கு, 'பிரிஜ்ட்' தெரபி என்று பெயர்.
இம்ப்பெல்லா
கொண்டை ஊசியை போல இருக்கும் சிறிய கருவி இது. திடீர் மாரடைப்பு, இதயம் செயலிழப்பு, இதய துடிப்பு குறைவது, 'பம்பிங்' செய்வது குறைவது போன்றவற்றிற்கு கரோனரி ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாகிறது.
இதயத்திற்கு ரத்தம் கிடைக்க, கரோனரி ரத்த குழாய் அடைப்பை பலுான் போட்டு நீக்கி, 'ஸ்டென்ட்' வைக்க வேண்டும்.
இதயத்திற்கு சீராக ரத்தம் கிடைக்க, 'இம்பெல்லா' என்ற கருவியை, இதயத்திற்குள் செலுத்தி, ரத்த ஓட்டம் சீராக கிடைக்க செய்ய வேண்டும்.
இந்த கருவியின் ஒரு பகுதி, இதயத்தின் இடது கீழறையிலும், மற்றொரு பகுதி மகாதமனியிலும் இருக்க வேண்டும்.
'இம்பெல்லா'வில் உள்ள சிறிய மைக்ரோ மோட்டார், இதயத்தின் கீழறையில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி, மகாதமனியின் மேல் பகுதியில் விடும். இதனால், மகாதமனியில் உள்ள கரோனரி, ரத்த நாளத்திற்கு அதிக ரத்தம் சென்று, இதயம், 'பம்பிங்' வேலையை சீராக செய்கிறது.
சிகிச்சைக்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு, 1 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். தினமும் மருந்துகள், பரிசோதனைகள் என்று பலவிதங்களிலும் செலவுகள் இருக்கும்.
குறிப்பாக, இந்த நோயாளிகளுக்கு தொற்று கள், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை, 'மெட்டபாலிசம்' எனப்படும், உடல் உள் செயல்பாடுகளில் மாற்றம் போன்ற கோளாறுகள் ஏற்பட்டால், அதை சரி செய்வது எளிதல்ல.
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்காவிட்டால், உயிர் காக்கும் கருவிகளால் பலன் இல்லை.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், உயிர்ப்புடன் பழைய நிலைக்கு திரும்பினால் தான், நோயாளியை காப்பாற்ற முடியும்.
டாக்டர் சு.அர்த்தநாரி,
இதய நோய் நிபுணர், சென்னை.
044 2811 0323. 98401 60433
