தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - கோடை கால தொற்றே!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - கோடை கால தொற்றே!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - கோடை கால தொற்றே!


PUBLISHED ON : ஏப் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாய் வழியாக பரவும் தொற்றுகள், கோடைக் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அடிக்கடி வெளியில் உணவு வாங்கி தருவது, பள்ளி விடுமுறை, வெயில் இரண்டையும் காரணம் காட்டி, ஐஸ்கிரீம் சாப்பிடுவது, தொற்றுக்கான வழிகள்.

தொண்டையில் சளி, இருமல், புண் வந்தால், குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் வந்தது என்று நினைக்கிறோம். இது, 'ஜில்'லென்ற ஐஸ்கிரீமால் வந்தது கிடையாது.

ஐஸ்கிரீம் தயாரிக்க உபயோகித்த நீர், கிரீம் செய்ய பயன்படுத்திய பால் ஆகியவற்றில் கிருமிகள் இருந்திருக்கலாம். சமயங்களில், கெட்டு போன பாலில், கிரீம் தயாரித்து இருக்கலாம்.

தொண்டையில் ஏற்பட்ட சளி, பல நேரங்களில் சுவாச மண்டலத்தை பாதித்து, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

கோடைக் காலத்தில், உணவு விரைந்து கெட்டு விடும் வாய்ப்பு உள்ளது. வெளியிடங்களில் இருந்து, நாம் சாப்பிடும் அதே உணவையே, குழந்தைக்கும் தருவோம். நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

குழந்தைக்கு, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்றில் வலி வரலாம். காரணம், முந்தின நாள் தயார் செய்த உணவை, சரியான முறையில் பாதுகாக்காமல் இருந்திருக்கலாம்.

சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட நீரில் கிருமிகள் இருப்பது போன்றவை, குழந்தைகளுக்கு எதிர்ப்பு திறன் குறைவு என்பதால், அவர்களை எளிதாக தொற்றி விடும்.

டைபாய்டு: தண்ணீர் தட்டுப்பாடு, கோடையில் அதிகம். கிடைத்த நீரை பயன்படுத்துவதால் வரும் பிரச்னை இது.

சின்னம்மை, தட்டம்மை: இரண்டும், காற்றின் மூலம் பரவும் வைரஸ் தொற்றுகள். சின்னம்மை ஏற்பட்டால், இரண்டு நாட்கள் காய்ச்சல், அடுத்த நாள், மார்பில் அல்லது முதுகில் சிறிய நீர் குமிழி போன்ற கொப்புளங்கள் வந்து, உடல் முழுவதும் பரவும்.

தட்டம்மையில், மூன்று, நான்கு நாட்கள் கண்கள் சிவந்து இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியும். இருமல், காய்ச்சல் வந்து, ஐந்தாறு நாட்களில், வியர்க்குரு போல தடிப்புகள் ஏற்படும். முகத்தில் துவங்கி, கால் வரை வரும். தடிப்புகள் உருவானதும், காய்ச்சல் சரியாகி விடும்.

தடுப்பூசி: டைபாய்டுக்கு, ஆறு மாத குழந்தையில் இருந்தே போடலாம். ஒரு முறை போட்டால் போதும், நிரந்தர பாதுகாப்பு தரும். அம்மைக்கும் தடுப்பூசி உள்ளது. 15 மாதத்தில் ஒரு தடுப்பூசி, அதன் பின், நான்கரை வயதில், ஒரு, 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டும். இது, 95 சதவீதம் பாதுகாப்பானது.

அம்மைக்கென்று பிரத்யேக சிகிச்சை இல்லை. எளிதில் செரிக்கும் நல்ல சத்தான உணவுடன், நீர் சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், இளநீர், மோர் தர வேண்டும்.

நல்ல ஓய்வும் தேவை. தானாகவே சரியாகி விடும். தடிப்புகள் வந்தவுடன் காய்ச்சல் குறைந்து, படிப்படியாக நிலைமை சீராகும்.

எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, இரண்டாம் நிலை தொற்று வரலாம். இவர்களுக்கு, ஒரு வாரத்திற்கு பின், மீண்டும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்படலாம்; நிமோனியாவும் வரலாம்.

இந்நிலையில், மருத்துவ உதவி அவசியம் பெற வேண்டும். அம்மை தவிர, வேறு பிரச்னைகளிலும், காய்ச்சலுடன் தடிப்புகள் தோன்றலாம். எனவே, அம்மை தானா என்பதை, டாக்டரிடம் உறுதி செய்வது நல்லது.

கோடையில், நீச்சல் பயிற் சிக்கு செல்லும் குழந்தைக்கு, காதுகளில் தொற்று ஏற்படுவதும் உண்டு.

டாக்டர் ஏ.சோமசுந்தரம்,

குழந்தைகள் நல மருத்துவர், சபரி சைல்டு கேர் கிளினிக், சென்னை.

மொபைல்: 98414 23925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us