கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! இதயமே... இதயமே!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! இதயமே... இதயமே!
PUBLISHED ON : ஏப் 08, 2018

ரஷ்ய சிறுவன், ரோமன் வயது, 8; தமிழகத்தைச் சேர்ந்த, ஸ்ரீ சுப்ரியா, வயது, 12. இருவருக்கும் சமீபத்தில் எங்கள் மருத்துவக் குழு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தது. தானமாகப் பெற்ற பெரியவர்களின் இதயத்தை, இக்குழந்தைகளுக்கு பொருத்துவது சவாலான விஷயம்; காரணம், அவர்களின் வயது மற்றும் பொருத்தமான இதயங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.
இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில், உடனடியாக, மாற்று இதயம் பொருத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
அதிலும், இதய தசைகள் சுருங்கி, விரியும் தன்மை இல்லாமல், மிக ஆபத்தான நிலையில் இருந்தான், ரோமன். இதனால், இதயத்தின் கீழறைகளான, 'வென்ட்ரிக்கிளு'க்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்பட்டது.
மாற்று இதயம் பொருத்தி, ரோமனை காப்பாற்றி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில், இதயம் செயலிழக்க ஆரம்பித்தது; உடனடியாக, இதய - நுரையீரல் இயக்க மீட்பு கருவியான, சி.பி.ஆர்., பொருத்தினோம்.
மாரடைப்பு ஏற்பட்டால், தேவையான முதலுதவியை செய்த, 10 நிமிடங்களில், இதயம் செயல்பட துவங்க வேண்டும்; 45 நிமிடங்கள் வரை செயல்படவில்லை எனில், அதன்பின், செயல்பட வைப்பது கடினம். ஆனால், சி.பி.ஆர்., உதவியுடன், 45 நிமிடங்கள் செயலிழந்த இதயத்தை, செயல்பட வைக்க, 70 சதவீதம் சாத்தியம் உள்ளது.
ரோமனுக்கு, 15 நாட்கள் கழித்து, மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, இரண்டு வாரங்கள், இதய - நுரையீரல் செயல்பாட்டு செயற்கை கருவியான, 'எக்மோ' உதவியுடன், மீண்டும் இதயம் இயல்பாக செயல்படத் துவங்கியது.
மாற்று இதயம் பெறும் போது, தானமாகப் பெற்ற இதயத்தில், நோய் தொற்று, ரத்தக் குழாய்களில் அடைப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், இதயத்தை பொருத்தி, செயல்படத் துவங்கிய பின் தான் கண்டறிய முடியும்; எனவே, இது போன்ற பிரச்னைகள் தவிர்க்க முடியாது. நவீன மருத்துவக் கருவிகளின் உதவியுடன், எந்தப் பிரச்னையையும் சமாளிக்க இயலும்.
மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை விட, இதய மாற்று அறுவை சிகிச்சையில், பல சவால்கள் உள்ளன.
உதாரணமாக, சிறுநீரகம் தானம் பெற்ற ஒருவர், அறுவை சிகிச்சை வெற்றி பெறாத பட்சத்தில், திரும்பவும், 'டயாலிசிஸ்' செய்து, உயிர் வாழ முடியும்.
ஆனால், இதய மாற்று அறுவை சிகிச்சையில், அப்படி செய்ய இயலாது. மூளை சாவு அடைந்தவரின் இதயத்தை, பெற்ற நான்கு மணி நேரத்தில், நோயாளிக்கு பொருத்திவிட வேண்டும்.
இந்தியாவில், முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை, 1996ல் நடந்தது; அதன்பின், 2012 வரை, தமிழகத்தில், 30க்கும் அதிகமான, இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
மிகக் குறைவான எண்ணிக்கையில், இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு, அதிக செலவு மட்டும் காரணம் இல்லை; மாற்று இதயம் இருக்கும் விஷயத்தை தெரிவித்தாலும், நோயாளியும், அவரின் குடும்பத்தினரும், அவ்வளவு எளிதாக, இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதிப்பதில்லை.
நவீன வசதிகள் உள்ள மருத்துவ மையங்களிலும், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய, இதய சிறப்பு மருத்துவர்களே ஆர்வம் காட்டுவதில்லை. இதயம் தேவைப் படுவோரைவிடவும், தானம் தருவோரின் எண்ணிக்கை அதிகம். சில மாநிலங்களில், தானமாகப் பெற்ற, 80 சதவீத இதயங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
டாக்டர் சுரேஷ் ராவ்
இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
sureshraokg@gmail.com

