கனவு தவிர்... நிஜமாய் நில்! தண்ணீரால் தொற்று நீங்கும்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! தண்ணீரால் தொற்று நீங்கும்!
PUBLISHED ON : ஏப் 08, 2018

பெண்கள், கோடை காலத்தில், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். காரணம், கோடை காலத்தில் சிறுநீர் தொற்று பிரச்னையால் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.
இயற்கையிலேயே, பெண்களின், 'யூரினரி டிராக்' எனப்படும், சிறுநீர் பாதை, ஆண்களை ஒப்பிடும் போது, அளவில் குறுகலாக, நீளம் குறைவாக இருக்கும்; இதனால், அதிக நேரம் சிறுநீரை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.
இதற்கு பயந்தே, நிறைய பெண்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால், சிறுநீர் பாதையில் இருக்கும் தசைகள், சரியாக செயல்படாமல் இருக்கும். குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீர் வெளியேறாமல், அப்படியே தேங்கி நிற்கும்; விளைவு, சிறுநீர்ப் பாதையில், கிருமி தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது நல்லதல்ல. போதுமான அளவு சிறுநீர் வெளியேறாமல், குறைந்த அளவு வெளியேறும் போது, வலி மற்றும் எரிச்சல் அதிகமாக இருக்கும். நன்றாக தண்ணீர் குடித்து, சிறுநீர் சுலபமாக வெளியேறினால், இப்பாதையில் உள்ள கிருமிகள், அத்துடன் சேர்ந்து வெளியேறி விடும்; தவிர, எரிச்சல், வலியும் இருக்க வாய்ப்பில்லை.
கோடை காலத்தில், வியர்வையாக பெருமளவு நீர் வெளியேறும்; எனவே, குறைந்தது, மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கோடை காலத்தில் சுய சுகாதாரத்தில், மிக கவனமாக இருப்பது அவசியம். இதற்கென இருக்கும், திரவ சோப்புகளை பயன்படுத்தி, மூன்று வேளையும் சுத்தப்படுத்த வேண்டியது முக்கியம்.
முடிந்தவரை, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உள்ளாடைகள் கண்டிப்பாக பருத்தியால் ஆனதாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களை கடைபிடித்தும், வலி, எரிச்சல் இருந்தால், தாமதிக்காமல் டாக்டரின் ஆலோசனயை பெற வேண்டும்.
டாக்டர் என்.எஸ்.கனிமொழி
பொது மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர், சென்னை
drmozhi18@gmail.com

