தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: உணவோடு காற்றும் சேர்ந்தால், உபாதை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: உணவோடு காற்றும் சேர்ந்தால், உபாதை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: உணவோடு காற்றும் சேர்ந்தால், உபாதை!


PUBLISHED ON : டிச 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னை என்னிடம் வரும் வெளிநோளிகளில், 70 சதவீத்திற்கு மேல். வயிறு தொடர்பான பிரச்னைகளுக்காக வருகின்றனர். சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் எதுக்களிப்பு, நெஞ்செரிச்சல், படுத்தால் உணவு மேல் நோக்கி வருகிறது என்று சொல்கின்றனர்.

இன்னும் அதிகமானோருக்கு, வாயுத் தொல்லை, சாப்பிட்டவுன், வயிறு உப்புசமாக உள்ளது; வாயு அடைத்துக் கொண்டு, ஏப்பம் வருவதில்லை, ஏப்பம் வந்தவுடன் சரியாகி விடுகிறது என்று சொல்கின்றனர்.

இவையெல்லாமே, வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்பட்ட பிரச்னைகள். நாங்கள் பயிற்சி மருத்துவ மாணவர்களாக இருந்த காலத்தில், 30 - 40 ஆண்டுகளுக்கு முன், வெளி நோயாளிகள் பிரிவில், இது போன்ற பிரச்னைகளுடன் வருபவர்கள் மிகவும் அபூர்வம். இதற்கு மிக முக்கிய காரணம், உணவு.

இதற்கு முன்னும் காரம், மசாலா எல்லாம் சாப்பிட்டோம். ஆனால், தற்போது உணவு தயாரிப்பில், பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இத்துடன் உணவு சாப்பிடும் நேரமும் மாறிவிட்டது.

தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி செய்பவர்கள், இரவில் தாமதமாகச் சாப்பிட்டு, உடனே படுத்து விடுகின்றனர். முன்பெல்லாம், அலுவலகம் செல்பவர்கள், அதிகாலையில் எழுந்து, தயாராகி, நிதானமாக செல்வர். இப்போது, தாமதமாகத் துாங்கி எழுந்து, அவசர அவசரமாக, தயாராகி, நடுவில் முடிந்தால், இரண்டு வாய் பெயருக்கு சாப்பிட்டு விட்டு, போகிற வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விடுகிறோம். சமயங்களில், காலை உணவே சாப்பிடுவதில்லை.

அவசர அவசரமாக சாப்பிடுவதில், இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஒன்று, நன்கு மென்று நிதானமாக சாப்பிட்டால் மட்டுமே, உமிழ் நீர் சுரந்து, உணவுடன் கலந்து, வயிற்றுக்குள் செல்லும்; செரிமானம் நன்றாக இருக்கும்.

இரண்டாவது, அவசரமாக சாப்பிடும் போது, உணவுடன் சேர்த்து, வாயுவையும் விழுங்குவோம். இன்னொன்று, நேர்காணல், மருத்துவமனை என்று சற்று பதட்டத்துடன் முக்கியமான வேலைக்காக காத்திருக்கும் சமயங்களில், நம்மையும் அறியாமல் எச்சிலை அடிக்கடி விழுங்குவோம்.

ஒவ்வொரு முறை எச்சிலை விழுங்கும் போதும், நமக்கே தெரியாமல், காற்றையும் சிறிது விழுங்குகிறோம்.

இந்தக் காற்று, வயிற்றில் தங்கிவிடும். வயிற்றில் வாயு பெரிதாக உற்பத்தி ஆகாது. குடல், பெருங்குடலில் மட்டுமே வாயு உற்பத்தி ஆகும். வயிற்றில் இருப்பது, நம்மையும் அறியாமல், நாம் விழுங்கும் வாயு தான்.

இது ஏப்பமாக வந்து விட்டால், பிரச்னை இல்லை. வெளியில் வராமல் தங்கி விட்டால், வயிறு உப்புசம் ஆகும். சோப்பு நுரை போல, குமிழ்களாக வயிற்றில் சேர்ந்து விடும். வெளியில் வருவது சிரமம். இந்த நிலையில், மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருக்கும்.

இதைத் தவிர்க்க, பிரச்னை ஏன் வருகிறது என்பதைப் சரியாக புரிந்து கொண்டாலே போதும். உணவு சாப்பிடுவதற்கு தனியாக, 15 - 20 நிமிடங்கள் ஒதுக்கி, பொறுமையாக, நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும் என்பதோடு, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம். குழந்தைப் பருவத்தில் துவங்கி, அடுத்த, 20 - 25 ஆண்டுகளுக்கு, காலை, மதியம், இரவு என்று குறிப்பிட்ட வேளையில் உணவு சாப்பிட்டு பழகியிருப்போம்.

வேலைக்குப் போக துவங்கியவுடன், வேலை நேரம், எப்படி அமைகிறதோ அதற்கு ஏற்றபடி, எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.

காலை உணவைத் தவிர்த்து, மதிய உணவு, 3.00 அல்லது 4.00 மணிக்கு சாப்பிடுவது, வெகு தாமதமாக இரவு சாப்பிடுவது என்று பழக்கம் மாறியவுடன், நம் உடல் அமைப்பு, இந்த புதிய பழக்கத்திற்கு சிரமப்படும். வழக்கத்திற்கு மாறான விஷயம் நடந்தால், முதலில் முழு உத்வேகத்துடன் அதை நிராகரிக்கவே, நம் உடம்பு முயற்சி செய்யும்.

எந்த நேரத்தில், சாப்பிட்டு பழகியிருக்கிறோமோ, அந்த நேரம், உணவை எதிர்பார்த்து, நம் இரைப்பை, அமிலத்தை சுரக்கத் துவங்கும்.

உணவு போனால், அமிலம் உணவுடன் சேர்ந்து, செரிமான வேலையைச் செய்யும். இல்லாவிட்டால், பக்கத்தில் என்ன இருக்கிறதோ, அதை அரித்து அல்சர், வாயு என்று பிரச்னைகள் வரும்.

அடுத்து, என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். வெளியில் சாப்பிடும் பழக்கம், தற்போது அதிகரித்து விட்டது. உணவகங்களின் குறிக்கோள், ஒருமுறை வந்தவர், மீண்டும் மீண்டும் தங்களிடம் வர வேண்டும் என்பது மட்டுமே.

அதற்கு, ருசி வேண்டும். மணம், ருசிக்காக, எண்ணெய், உப்பு; கவர்ச்சியான நிறங்களுக்கு, வேதிப் பொருட்கள் சேர்க்கின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி ஆன அஜினமோட்டோ, அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

காலம் காலமாக பயன்படுத்துவதால், சீனர்களுக்கு இதனால் பிரச்னை கிடையாது. நமக்கு நிச்சயம் ஒத்துக் கொள்ளாது. எண்ணெயில் ஆலிவ்தான் சிறந்தது என்கின்றனர். விலை கூடுதலாகவும் இருப்பதால், சிறந்ததாகவே இருக்கும் என்று வழக்கம் போல நாமும் நம்புகிறோம்.

ஐரோப்பியர்கள், ஆலிவ் எண்ணெய்யை, தலைமுறைகளாக பயன்படுத்துவதால், அவர்களுக்கு பொருந்தும். நம் முன்னோர், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்தினர்.

தேங்காய் எண்ணெய் கெடுதல் என்று சொல்லி, பெரும்பாலும் தவிர்த்து விட்டோம். வர்த்தகத்திற்காக, நம்மை மூளைச் சலவை செய்வதை நம்பி, நாமும் பழக்கதை மாற்றிக் கொண்டோம்.

டாக்டர் ஆர்.சுரேந்திரன்,

ஜீரண மண்டல மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை, சென்னை.

தொலைபேசி: 044 2829 6449


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us