தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - இம்பூரல் சாப்பிட்டால் இருமல் வராது!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - இம்பூரல் சாப்பிட்டால் இருமல் வராது!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - இம்பூரல் சாப்பிட்டால் இருமல் வராது!


PUBLISHED ON : அக் 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக் காலம் துவங்கி விட்டது. கூடவே, காய்ச்சல், சளி, மூக்கில் நீர் வடிவது, இருமல், தும்மல் என, தினமும் ஏதாவது கோளாறுகள் எட்டிப் பார்க்கும்.

உடனே, அருகில் உள்ள மருந்துக் கடையில், 'எனக்கு நாலு நாளா காய்ச்சல்... மருந்து கொடுங்க...' என்று சுயமாகவே மருந்து வாங்கி சாப்பிடுவதும் வாடிக்கையாகி விட்டது.

பல நேரங்களில், நாம் சொல்லும் அறிகுறிகளை வைத்து, பாக்டீரியா தொற்றுக்கு தரப்படும், ஆன்டி - பயாடிக் மருந்துகளை தருகின்றனர். நாமும் தொடர்ந்து இவற்றை பயன்படுத்துகிறோம்.

ஆன்டி - பயாடிக் என்பது, உலகத்தை பயமுறுத்தி வரும் பெரிய பிரச்னை. எடுத்தவுடன் இது போல, ஆன்டி - பயாடிக் மருந்துகளை சாப்பிட வேண்டியதில்லை.

சித்த மருத்துவராக எனக்கு இருக்கும் ஆதங்கம், மருத்துவ அறிவு இல்லாத, பொதுமக்கள் யாரைக் கேட்டாலும், பொதுவான பிரச்னைகளுக்கு தரப்படும், ஆங்கில மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் தெரியும். ஆனால், அவர்களிடம் நான்கு தமிழ் மருந்துகளின் பெயர்களைக் கேட்டால், சொல்லத் தெரியாது.

வீட்டிற்கு வீடு, அடிப்படையான, 10 சித்த மருந்துகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டால், அவர்களின் பொதுவான ஆரோக்கியம், பல மடங்கு மேம்படும்; மருத்துவ செலவுகள் குறையும். சுயமாக மருந்துகள் சாப்பிடுவதிலும், பாதுகாப்பான அளவிற்கே பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக வரும் சளி தும்மல், அயர்ச்சி, வாயுத் தொல்லை, இருமல் போன்ற சாதாரண பிரச்னைகளுக்கு வேண்டுமானால், சுயமாக மருந்து சாப்பிடலாம். பிரச்னை எப்போது நம்மை அதிகமாக தொந்தரவு செய்கிறதோ, அப்போது, சுய மருத்துவம் செய்யவே கூடாது.

என்ன செய்யலாம்?

சுய மருத்துவம் செய்வதை விட, துளசி கஷாயம், கற்பூரவல்லி கஷாயம், உணவு முறையாகவே கற்பூரவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடுவது சிறந்தது.

எதுவும் கிடைக்காத பட்சத்தில், வெற்றிலை காம்பை கிள்ளி விட்டு, அதில், இரண்டு மிளகு, சிறிது தேன் சேர்த்து, மென்று சாப்பிட்டால், சளி பிடிக்காது; பூண்டு ரசம் சாப்பிடலாம். மழை நேரத்தில், சூடாக காபி, டீ குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.

காபி, டீக்கு பதிலாக, சுக்கு, மல்லி காபி, இஞ்சி டீ, ஏலக்காய் டீ என குடிக்கலாம். இந்த பொருட்கள் எல்லாம், உடம்பிற்கு உஷ்ணம் தரக் கூடியது. வெளியில், பருவநிலை குளிராக இருக்கும் போது, உடல் உள் வெப்பத்தை சற்று அதிகப்படுத்த முடியும்.

இருமல் மருந்திற்கு பதிலாக, ஆடாதோடை இலையை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அதில் தேன் கலந்து செய்யப்படும், 'ஆடாதோடை மணப்பாகு' அரசு சித்த மருத்துவமனைகளிலும், மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இலை கிடைத்தால், வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.

தேன் கலந்திருப்பதால், சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், இருமலுக்கு, 'தாளிசாதி சூரணம்' எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு மருந்துகளையும், பிரச்னை வந்தால் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. மழை காலத்தில், வாரம் இரண்டு, மூன்று முறை குடிக்கலாம்.

இம்பூரல் என்ற செடி, சென்னையிலேயே எல்லா இடத்திலும் இருக்கும். இதை, கஷாயம் வைத்து குடிக்கலாம். மாத்திரையாகவும் கடைகளில் கிடைக்கிறது. காலையில் எழுந்ததும், சிலருக்கு தும்மல் வரும்.

இவர்கள் முதல் நாள் இரவு, மஞ்சள், மிளகு, ஏலக்காய், தலா, கால் டீ ஸ்பூன் எடுத்து, பாலில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால், காலையில் தும்மல் பிரச்னை வராது.

சுக்கு - மல்லி காபி

சுக்கு - 50 கிராம், மல்லி - 100 கிராம், சீரகம் - 50 கிராம், ஏலக்காய் - 20. தனித்தனியாக, வெறும் வாணலியில் வறுத்து, மொத்தமாக பொடித்து வைத்துக் கொள்ளலாம். தனியாக காபி போட்டும் சாப்பிடலாம்; பாலில் போட்டும் குடிக்கலாம்.

டாக்டர் மூலிகைமணி அபிராமி,

சித்தா சிறப்பு மருத்துவர், சென்னை. 96000 10696


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us