தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனசே, மனசே குழப்பம் என்ன! - நிறங்களால் நிரம்பிய உணவு தட்டு வேண்டும்!

மனசே, மனசே குழப்பம் என்ன! - நிறங்களால் நிரம்பிய உணவு தட்டு வேண்டும்!

மனசே, மனசே குழப்பம் என்ன! - நிறங்களால் நிரம்பிய உணவு தட்டு வேண்டும்!


PUBLISHED ON : அக் 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினசரி நாம் சாப்பிடும் உணவில், குறைந்தது ஐந்து விதமான நிறங்களாவது இருக்க வேண்டும். சாப்பாட்டு தட்டில், ஒரே நிறத்தில் உணவு இருக்கக் கூடாது. பச்சை நிறத்தில் ஒன்று, ஆரஞ்சு நிறத்தில் இன்னொன்று, மஞ்சள் வண்ணத்தில் ஒன்று என, கலர் கலராக உணவு பரிமாறப்பட வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிடுகிறோம் என்றால், நம் சாப்பாட்டுத் தட்டு, வண்ணங்கள் நிரம்பிய உணவுகளால் நிரம்பியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறத்திலும் ஒரு விட்டமின் சத்து இருக்கிறது. மஞ்சள் வண்ணத்தில் விட்டமின் - ஏ அதிகமாக இருக்கும்; ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில், விட்டமின் - சி சத்து அதிகம்; பச்சை காய்கறிகள், இரும்புச் சத்து மிகுந்ததாக இருக்கிறது. இப்படி, எல்லா விதமான நிறங்களிலும், குழந்தைப் பருவத்தில் இருந்தே உணவு சாப்பிடப் பழகிவிட்டால், ஊட்டச்சத்துக் குறைபாடு வராது.

இயற்கையில் கிடைக்கும் அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடுவது மட்டுமே, எல்லா சத்துக்களும் கிடைப்பதற்கான வழி. இவற்றில் உள்ள, 'பி காம்ப்லெக்ஸ்' போன்ற சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்பவை.

அனைத்து உணவுகளையும், காய்கறி, பழங்களையும் இரண்டு வயதிற்குள் பழகாமல், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே பழகியிருப்பதால், வளர்ந்த பின், 'எனக்கு, கேரட் மட்டும் தான் பிடிக்கும்; உருளைக் கிழங்கு தான் விருப்பம்; பழத்தில், வாழைப் பழம் தவிர வேறு எதையும் தொட மாட்டேன்' என, சொல்கிறோம்.

அதேபோல, சிப்ஸ், அப்பளம், வடகம், மிக்சர் போன்ற பொரித்த, வறுத்த உணவுகளை மட்டுமே பழகியிருந்தால், அவைகள் மட்டுமே விருப்ப உணவு பட்டியலில் இருக்கும்.

முழு பழத்தை நன்கு கழுவி, முழுதாக சாப்பிடப் பழக்குவது, சமைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து, இரண்டு, மூன்று நாட்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு, அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது நல்லது.

வீட்டில் இருக்கும் அனைவரும், ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் தான், குழந்தைகளும் சாப்பிடும். ஆறு மாதங்களில் இருந்தே, அம்மா சாப்பிடுவதை குழந்தை ஆர்வமாகப் பார்க்கும். தனக்கென்று தனியாக கிண்ணத்தில் போட்டு ஊட்டுவதை விட, அம்மாவின் தட்டில் இருந்து சாப்பிடுவதையே குழந்தை விரும்பும். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன சாப்பிடுகின்றனரோ, அதையே தான் குழந்தை சாப்பிட விரும்பும். அந்த உணவையே பார்த்துப் பழகினால், அதுவே, குழந்தையின் விருப்ப உணவாகி விடும்.

எல்லா வயதினருக்கும் விட்டமின் டி சத்து குறைவாக உள்ளது. இந்தக் குறைபாடு உள்ள, 10 குழந்தைகளையாவது தினமும் பார்க்க முடிகிறது. விட்டமின் டி குறைபாடு இருந்தால், நோய்த் தொற்று, அலர்ஜி எளிதில் தொற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது. சூரிய ஒளியில் விளையாடாதது ஒரு காரணம். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர்; தாத்தா, பாட்டி அல்லது வேறு யாருடைய கண்காணிப்பிலாவது குழந்தை வளர்கிறது. குழந்தையின் பின்னால் ஓட முடியவில்லை என, மொபைல் போனை கொடுத்து உட்கார வைத்து விடுகின்றனர்.

தடுப்பூசி

பெரும்பாலான தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளிலேயே போடுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் போடுபவர்கள், விலை அதிகம் என்று போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர்.

நிமோனியா, மூளைக்காய்ச்சல், ஹெபடைடிஸ் ஏ, பி, டெங்கு, சிக்குன் குனியா என்று நிறைய தடுப்பூசிகள் வந்து விட்டன. 1.5 வயது வரை, ஒவ்வொரு மாதமும் டாக்டரிடம் காட்டி, பல தடுப்பூசிகளைப் போட வேண்டியுள்ளது. 6 - 10 ஆயிரம் வரை செலவாகிறது, என்பதால் தயங்குகின்றனர்.

தற்போதைய கால கட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நோய்க்கு, தடுப்பூசி போட்டால் முழு பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரிந்தால், அதைப் போட்டுக் கொள்வதே நல்லது.

டாக்டர் தீபா ஹரிஹரன்,

பச்சிளங் குழந்தைகள்

சிறப்பு மருத்துவர், சென்னை.

98410 71435

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us