தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!


PUBLISHED ON : நவ 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டுதோறும், இந்தப் பருவத்தில் தவறாமல் வருவது, டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல். வைரஸ் தொற்றினால் ஏற்படும் இந்த காய்ச்சல்களின் அறிகுறிகள் நமக்குத் தெரியும். அப்படியும், ஏன் இறப்பு எண்ணிக்கை கூடுகிறது... இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

டெங்கு

இது சாதாரணமாக வரும் வைரஸ் காய்ச்சலை போலத் தான் இருக்கும். மருந்து சாப்பிட்டாலும், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அதன்பின், குறைந்து விடும்.

ஐந்தாவது நாள் காய்ச்சல் நின்ற பிறகே, டெங்குவின் பாதிப்பு துவங்கும். பல நேரங்களில், காய்ச்சல் விட்டு விட்டது என, நாம் அலட்சியமாக இருந்து விடுகிறோம். இது தவறு.

குளிருடன், 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், உடல் நடுக்கம் போன்றவை டெங்குவின் அறிகுறிகள். டெங்குவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, காய்ச்சல் இல்லாமல், குளிர், நடுக்கம் மட்டும் வரலாம்.

காய்ச்சல் வந்த நான்காவது நாளில் இருந்து, 10வது நாளிற்குள், இரண்டு விஷயங்கள் நடக்கலாம். ஒன்று, ரத்த தட்டணுக்கள் குறைந்து, ரத்தக் கசிவு ஏற்படலாம் அல்லது ரத்த அழுத்தம் குறையலாம். இந்த இரண்டும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்.

காய்ச்சல் சரியாகி விட்டது என்று கவனக் குறைவாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும். எல்லா நோயாளியும், நான்கைந்து நாட்கள் வரை, டாக்டரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது.

பல் தேய்க்கும் போது ரத்தம் வருவது, உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படுவது, மாதவிடாய் இருக்கும் சமயம் என்றால், வழக்கத்தை விடவும் அதிகமாக ரத்தப் போக்கு இருப்பது, ரத்த அழுத்தம் குறைவதால் மயக்கம் வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல், டாக்டரிடம் செல்ல வேண்டும். டெங்கு பரவும் பருவத்தில், காய்ச்சல் வந்த முதல் நாளே, அதற்கான பரிசோதனை செய்து உறுதி செய்ய முடியும். அது தான் பாதுகாப்பானது.

பன்றிக் காய்ச்சல்

எல்லா, 'ப்ளு' காய்ச்சலைப் போலவே, இதுவும் வைரஸ் காய்ச்சல் தான். பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்கு, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். எச்1.என்1, எச்1.என்2, எச்2.என்3, எச்3.என்2 என, நான்கு வகையான பன்றிக் காய்ச்சலுக்கும் சேர்த்து, ஒரு தடுப்பூசி இருக்கிறது. காய்ச்சல் இல்லாத நேரத்தில், இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பின், தடுப்பூசி போடுவதால் பலன் இல்லை.

இந்த வகை வைரஸ், சுவாசப் பாதையை பிரதானமாக பாதிக்கும். வைரஸ் கிருமி, உடல் முழுவதும் பரவ, மூன்று நாட்கள் ஆகலாம். அதன்பின், சளி, இருமல், தொண்டைவலி என, சாதாரண வைரஸ் காய்ச்சல் போலவே அறிகுறிகள் தோன்றும். காய்ச்சலால் ஏற்பட்ட அறிகுறிகள் இவை என்று அலட்சியமாக இருந்தால், சுவாசப் பாதையை பாதித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டும், வைரஸ் வீரியம் பெற்று வருகிறது;

அதனால், மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை, என்பதெல்லாம் உண்மை இல்லை. டெங்கு, பன்றிக் காய்ச்சல் இரண்டிற்கும் நல்ல மருந்துகள் உள்ளன. நம்முடைய அலட்சியத்தால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சாதாரண காய்ச்சலாகவே இருந்தாலும், இந்தப் பருவத்தில், டெங்கு, பன்றிக் காயச்சலாக இருக்கலாமோ என்ற கூடுதல் கவனத்துடன், இருப்பதே பாதுகாப்பானது.



டாக்டர் ஜி.கதிரவன்,

அவசர சிகிச்சை ஆலோசகர், சென்னை.

Dr_kathiravan@parvathyhospital.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us