தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - விழித்திரை பற்றிய விழிப்புணர்வு இல்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - விழித்திரை பற்றிய விழிப்புணர்வு இல்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - விழித்திரை பற்றிய விழிப்புணர்வு இல்லை!


PUBLISHED ON : பிப் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழித்திரை, தொடர்பான பிரச்னைகள், பிறந்த குழந்தையிலிருந்து எல்லா வயதினரையும் பாதிக்கும். ஆனால், 'கார்னியா' எனப்படும் கருவிழியில் ஏற்படும் கோளாறுகளைப் போல, விழித்திரை கோளாறுகளை கண்டறிவது எளிதல்ல.

விழித்திரை கோளாறுகளாலேயே பார்வை இழப்பு பெரும்பாலும் ஏற்படுகிறது. மங்கலான மற்றும் நிழல் படிந்த பார்வை, உருவங்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாத நிலை மற்றும் இரவு நேரங்களில் குறைவான பார்வைத்திறன் ஆகியவை, பார்வைத் திறனிழப்பின் அடிப்படை அறிகுறிகளாகும்.

மிதவைகள், ஒளிக்கீறல்கள், உருவங்களில் சிதைவு, மங்கலான பார்வை மற்றும் திடீர் பார்வையிழப்பு ஆகியவை, விழித்திரை நோய்களின் ஆரம்ப நிலை அறிகுறிகள்.

பிறந்த குழந்தைக்கு கருவிழியில் பிரச்னை இருந்தால், கருவிழி வெண்மையாக இருக்கும்; எந்த பரிசோதனையும் இல்லாமல், கண்களைப் பார்த்தவுடன் கோளாறு இருக்கிறது என, டாக்டரால் தெரிந்து கொள்ள முடியும்.

பிறந்த குழந்தையின் கண்களில், டார்ச் லைட் அடித்துப் பார்த்தால், கருவிழியின் உள் பாகம் வெண்மையாகத் தெரிந்தால், பிரச்னை இருக்கலாம்.

குழந்தையின் கண்களைப் பார்த்து பேசும் போது, குழந்தை, பேசுபவரின் கண்களைப் பார்க்காமல், கை அசைப்பது போன்ற உடல் மொழிகளை கவனிக்காமல் இருப்பது; விழித்திரை கோளாறுக்கான பிரதான அறிகுறி. உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

விழித்திரை என்பது பார்வை நரம்புகளால் ஆனது; மூளையுடன் நேரடியாகத் தொடர்புடையது. இதில் உள்ள நரம்புகள் பாதித்தால், அல்லது அழிந்து இருந்தால், அதை சரி செய்ய முடியாது.

ஆனால், பிரச்னை மேலும் மோசமாகாமல், குறைந்தபட்சம், நன்றாக இருக்கும் நரம்புகளை பாதுகாக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், சில நேரங்களில், பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, முழுமையாக சரி செய்யவும் முடியும்.

விழித்திரை கோளாறுகளுக்கு, நிறைய காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம், சர்க்கரை கோளாறு. உடலில் வேறு பாகத்தில் சர்க்கரை பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள, அதற்கான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். ஆனால், விழித் திரையில் சர்க்கரை பாதிப்பு இருப்பதை பார்த்தவுடன் சொல்லி விடலாம்.

பாதிப்பு ஏற்பட்டவுடன் விழித்திரையில் வீக்கம் வரும்; பலவீனமான, புதிய ரத்த நாளங்கள் உருவாகும்; ரத்த நாள சுவர்களில் கசிவு இருக்கும்; புதிய ரத்த நாளங்கள் வழியே கண்களுக்கு ரத்தம் வரும்; பார்வை முழுவதுமாக போய்விடும். அறுவை சிகிச்சையில், புதிய ரத்த நாளங்களை சுத்தம் செய்து, விழித்திரையில் லேசர் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

விழித்திரை, நரம்புகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் விழித்திரை, கண்களின் சுவர்களில் ஒட்டாமல் தனியாக இருப்பதும் பொதுவான முக்கிய பிரச்னைகள். இவற்றிலும் பார்வை இழப்பு ஏற்படலாம். மரபியல் காரணங்களாலும் விழித்திரையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், இவற்றை முழுமையாக சரி செய்ய முடியாது.

கருவிழிப் கோளாறுகளைப் போல விழித்திரையில் வரும் பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. இதனால், பிரச்னை பெரிதான பின்பே, மருத்துவ ஆலோசனைக்கு வருகின்றனர்.

இதனால், பல நேரங்களில் பார்வை இழப்பை தடுக்க முடிவதில்லை.

டாக்டர் அஷார் அகர்வால், மருத்துவ சேவைகள் துறை தலைவர்

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை.

மொபைல்: 94449 93108

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us