தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: சுக்கை போல மருந்தில்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: சுக்கை போல மருந்தில்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: சுக்கை போல மருந்தில்லை!


PUBLISHED ON : டிச 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



ஆயுதம் எனத் தெரியாமலேயே, பல பொருட்களை தவிர்க்கிறோம். அதில் ஒன்று, சுக்கு!

சுக்கில் இயற்கையாக இருக்கும் மருத்துவ குணம் குறித்து, சமீபகாலமாக, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன. அதில் ஒன்று, கேன்சரை, சுக்கு எப்படி குணமாக்குகிறது என்பது!

பெண்களை அதிகம் பாதிக்கும் கேன்சர்கள், மார்பக புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய்.

ஆண்களை அதிகம் பாதிப்பது, நுரையீரல், வாய் புற்றுநோய். கேன்சர் வருவதற்கான காரணம், வாழ்க்கை முறை மாற்றம், புகை, மது, மரபியல் காரணங்கள் என, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஆனால், கேன்சர் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள், மிகவும் மோசமானவை. சிகிச்சையின் போது, தலைமுடி கொட்டுவது, பசியின்மை, துாக்கமின்மை போன்ற பக்கவிளைவுகள் ஏன் வருகிறது என்றால், கேன்சர் செல்களை அழிக்க தரப்படும் மருந்துகள், ஆரோக்கியமான செல்களையும் சேர்த்தே அழிப்பதால்...

கேன்சர் சிகிச்சையில் இருப்பவர்கள், சிகிச்சை முடித்தவர்கள், பசியின்மை, வாந்தி, குமட்டல், பேதி, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுடன் வருகின்றனர்.

கேன்சர் சிகிச்சை மருந்து களின் பக்கவிளைவுகளால், முதலில் பாதிக்கப்படுவது, தலைமுடி, தோல். அடுத்தது, 'கொழகொழ' என இருக்கும், ஜீரண மண்டலத்தின் மியூக்கஸ் சவ்வு. இன்னொரு பெரிய பிரச்னை, உடல் எடை குறைவது... திடீரென, 10, 12 கிலோ எடை குறைந்து விடும். சரி, இப்போது, சுக்கு பாலிற்கு வருவோம். டீ, காபி என்பது, நம் உணவு கலாசாரத்தில் கிடையாது. மழைக் காலத்தில், சூடாக சுக்கு, மல்லி பாலும், வெயில் காலத்தில், ராகி கூழும்

குடிப்பது, மக்கள் வழக்கம். சுக்கு, உடம்பில் உள்ள கெட்ட திசுக்களை தேடி அழிக்கும் திறன் கொண்டது. நாம் சாப்பிடும் உணவு, மருந்து எதுவானாலும், பொதுவாக, 100 சதவீதம் அதை கிரகிக்கும் தன்மை, நம் உடம்பிற்கு இருக்க வேண்டும். இதற்கு, 'பயோ அவைலபிலிட்டி' என, பெயர். பொதுவாக, 'கீமோ' மருந்தை கிரகிக்கும் தன்மை, நம் உடம்பிற்கு அதிகபட்சம், 80 சதவீதம் தான் இருக்கிறது. சிகிச்சையின் போது, தினமும் சுக்கு பால் அருந்தினால், மருந்தை, 100 சதவீதம் கிரகிக்கும் தன்மையை உடல் பெறும். காரணம், சுக்கு, சிறந்த, உயிரி திறன் கூட்டி (பயோ என்ஹேன்சர்). சுக்கில், '6 - ஷோ கோல்' என்ற முதன்மையான வேதிப்பொருள் இயற்கையிலேயே உள்ளது. இந்த வேதிப்பொருளை செயற்கையாக தயாரித்து பயன்படுத்துவதை விட, சுக்கில் இயற்கையாகவே இருப்பதால், தேவையற்ற செல்களை அழிக்கும் திறன், பல மடங்கு அதிகம். 'சைட்டோ டாக்சிசிட்டி' எனப்படும், அழிக்கக் கூடிய திறன் கொண்ட பொருள் இது.

சுக்கு பால் தயாரிக்கும் முறை:

தனியா - 100 கிராம்

சுக்கு - 50 கிராம்

ஏலக்காய் - 20

மேற்கூறிய இந்த மூன்றையும், வெறும் கடாயில் போட்டு வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 150 மில்லி நீரில், ஒரு ஸ்பூன் இந்த பவுடரை போட்டு, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து, காலை, மாலை இரு வேளையும் குடிக்கலாம்.

சர்க்கரைக்கு பதில், தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். சுக்கு பால் அருந்தும் போது, வயிறு தொடர்பான எந்த பிரச்னையும் இல்லாமல் இருப்பதோடு, சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை, முழுமையாக கிரகிக்கும் தன்மையும் வரும்.

என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வருவோரிடம், காலை ஒரு வேளையாவது, சுக்கு பாலை, வெறும் வயிற்றில் குடிக்க சொல்வேன். கேன்சர் சிகிச்சையின் போதும், சிகிச்சை முடிந்த பின்னும், தினமும் இரு வேளை சுக்கு பால் குடிப்பது நல்லது.

டாக்டர் க.வே.அபிராமி

சித்தா சிறப்பு மருத்துவர், சென்னை. consultantabirami@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us