தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பெற்றோருக்கே தெரிவதில்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பெற்றோருக்கே தெரிவதில்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பெற்றோருக்கே தெரிவதில்லை!


PUBLISHED ON : ஜன 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் பருமனோடு வரும், 10 குழந்தைகளில், இரண்டு குழந்தைகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது, பெற்றோருக்கே தெரிவதில்லை. உயரத்திற்கு ஏற்ற, எடையை சுமக்கும் வலு மட்டுமே எலும்புகளுக்கு இருக்கும். அதிகபட்ச உடல் எடை இருந்தால், குழந்தைகளுக்கு, எலும்பு வளைந்து விடும். அதிக உடல் பருமனால், துாங்கும் போது, குறட்டைச் சத்தம் வரும்.

கடந்த, 10 ஆண்டுகளில், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளே இல்லை. உடல் பருமன் உள்ள குழந்தைகள் அதிகம். பொருளாதார வசதி உள்ள குழந்தைகளே, உடல் பருமனுடன் இருப்பர் என்று நினைப்பதும் தவறு. நடுத்தர, வறுமைக் கோட்டில் உள்ள குழந்தைகளும் உடல் பருமனோடு இருக்கின்றனர்.

காரணம், பெப்சி, கோக், கேக், பிஸ்கட், லேஸ், குர்குரே போன்ற அதிக கலோரி உள்ளவை, மிகக் குறைந்த விலையில் பெட்டிக் கடைகளிலும் கிடைப்பது தான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒல்லியாக, ஊட்டச் சத்து குறைபாடுடன் குழந்தைகளை அழைத்து வருவர். அவர்களுக்கு, புரத சத்து மிக்க உணவு, பானங்களை சிபாரிசு செய்வோம். ஏழ்மையான குடும்பம் என்றால், சத்தான உணவை, வீட்டிலேயே தயார் செய்வது பற்றி, சொல்லித் தருவோம்.

இன்று, உடல் பருமனைக் குறைக்க, நாங்கள் தரும் அறிவுரையை பின்பற்றுபவர்கள் மிக அரிது. 'குழந்தை வளர, வளர, சரியாகி விடும்' என்ற தவறான அபிப்ராயம் உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், குழந்தை அதிக எடையுடன் இருக்கிறது என்பதே, பெற்றோருக்குத் தெரியாது. உடல் பிரச்னைக்கு அழைத்து வரும் குழந்தைக்கு, உயரமும் எடையும் சரியாக இருக்கிறதா, என்று பார்த்து, 'குழந்தை உடல் பருமனோடு உள்ளது' என்று சொன்னால், பெற்றோர் புரிந்து கொள்வதில்லை.

உடல் பிரச்னைகளுக்காக அழைத்து வரும்போது, இது உடல் பருமனால் வந்த பிரச்னை என்று சொன்னால், பிரச்னையை மட்டும் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர, உடல் பருமனை குறைக்க சொல்லும், ஆலோசனைகளை கேட்பதில்லை. இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி புரிய வைப்பது சிரமம். பெற்றோர் தான் செய்து காட்ட வேண்டும். உடல் பருமன் ஒரே நாளில் வராது. அதே போல, ஒரே நாளில் பிரச்னையை தீர்த்து விடவும் முடியாது. தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளால் மட்டுமே, குழந்தை ஆரோக்கியமாக மாற முடியும்.

புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்கள் என்று அனைத்து சத்துக்களும் சேர்ந்த, சமச்சீரான உணவைத் தர வேண்டும். அதைவிடுத்து, ஏதோ குறிப்பிட்ட ஒரு உணவை குழந்தை விரும்பி சாப்பிடுகிறது என்பதற்காக, அதை மட்டும் தருவது தவறு. நம் பாரம்பரிய உணவு எதுவாக இருந்தாலும், அதில், சமச்சீராக அனைத்து சத்துக்களும் இருக்கும். அனுபவ அறிவினாலேயே, தினசரி உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கிய உணவை, நம் முன்னோர்கள் தயார் செய்தனர்.

பாரம்பரிய உணவு, திண்பண்டங்களை சாப்பிடப் பழக்கினாலே உடல் பருமன் பிரச்னையை வெகுவாகக் குறைத்து விட முடியும்.

டாக்டர் ஏ.கண்ணன்

குழந்தைகள் நல தலைமை மருத்துவர்,

மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை.

0452 - 4263000, 0452 - 2543000

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us