கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெற்றோர் தான் குற்றவாளிகள்!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெற்றோர் தான் குற்றவாளிகள்!
PUBLISHED ON : ஜன 06, 2019

குழந்தை பிறந்ததில் இருந்து, முதல் ஆறு மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் தர வேண்டும் என்று சொல்வதற்கு காரணம், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்; நோய்த் தொற்று ஏற்படாது என்பது மட்டுமல்ல, உடல் பருமனாவதை தாய்ப்பால் தடுக்கும்.
தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளின் உடல் எடை, புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளின் உடல் எடையை காட்டிலும், சீராக அதிகரிக்கும். ஆறு மாதங்களில், ஆறு கிலோ இருக்க வேண்டும் என்றால், எட்டு, ஒன்பது கிலோ இருக்கும்.
ஆனால், இணை உணவு கொடுக்க துவங்கியவுடன், சரியான உடல் எடைக்கு வந்து விடுவர். இது போன்ற குழந்தைகள், பின்னாளில், உடல் பருமனோடு இருக்க மாட்டார்கள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளில், இத்தனை சதவீதம் பேர், பிற்காலத்தில் உடல் பருமன் இல்லாமல் இருப்பர் என்று சொல்ல முடியா விட்டாலும், தாய்ப்பால் உடல் பருமனைத் தடுக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
இணை உணவை ஆறு மாதங்களுக்கு பின், ஆரம்பியுங்கள் என்று சொன்னவுடன், 'செர்லாக் கொடுக்கவா, நெஸ்டம் கொடுக்கவா' என்று தான் கேட்கின்றனர். 'வீட்டில் செய்து தரலாமா?' என்று கேட்பதே இல்லை. பதப்படுத்தப்பட்ட உணவில் இருக்கும் பிரச்னையே, சர்க்கரை தான். இந்த சுவைக்கு குழந்தை பழகிவிட்டால், வீட்டில் தயாரிக்கும் உணவு, குழந்தைக்குப் பிடிக்காமல் போகும்.
வீட்டு உணவை குழந்தைக்கு பழக்கும்போது, அரிசி, ராகி, கோதுமை, ஓட்ஸ் என்று ஏதாவது ஒரு தானியத்தில் செய்த கஞ்சியை கொடுக்க துவங்க வேண்டும்.
தானியம் ஒத்துக் கொள்கிறது என்றால், அதன்பின், அதில் புரத உணவுகளான, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக் கடலை என்று ஏதாவது ஒன்றை சேர்த்து ஒரு தானியம், ஒரு பருப்பு என்று தர வேண்டும்.
இணை உணவை ஆரம்பிக்கும் போது, ஒரு வேளை அரிசிக் கஞ்சி, அடுத்த வேளை ராகி கஞ்சி என்று வேளைக்கு ஒரு கஞ்சி, அடுத்த வேளை வாழைப் பழம், ஆப்பிள் என்று ஏதாவது ஒரு பழம் அல்லது நல்ல நிறமுள்ள பூசணி காய், கேரட், பீட்ரூட்டை வேக வைத்துத் தரலாம்.
முதல் மாதம் இரண்டு வேளை கொடுத்தால், அடுத்த மாதம் மூன்று வேளை தர வேண்டும். இடையிடையே தாய்ப்பால் தருவதும் அவசியம். காலையில் எழுந்தவுடன் தாய்ப்பால், மூன்று மணி நேரம் கழித்து, இணை உணவு, மாலை ஆறு மணிக்கு மேல் தாய்ப்பால் என்று, கொடுக்க வேண்டும்.
முதல் ஒன்பது மாதங்கள், எந்த மாதிரியான உணவுப் பழக்கத்திற்கு குழந்தையை பழக்குகிறோமோ, அந்த உணவின் தன்மை, மூளையில் பதிந்திருக்கும். வளர்ந்த பின், அந்த பழக்கத்தை பின்பற்றுவது எளிது.
'வெள்ளை சர்க்கரைக்கு பதில், வெல்லம், கருப்பட்டி கொடுங்கள்' என்று சொல்கிறோம். எள், வேர்கடலை உருண்டை, போன்ற நம் பாரம்பரிய உணவுகளை பழக்கி விட்டால், கேக், பிட்சா, சாக்லெட் வேண்டும் என்று எந்த குழந்தையும் கேட்காது.
குழந்தையின் மேல், தவறு எதுவும் இல்லை. தவறான உணவை பழக்கும் பெற்றோர் தான் குற்றவாளிகள்.
உங்கள் குழந்தை வளர்ந்த பின், எதையெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு சாப்பிடக் கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதையெல்லாம், குழந்தைப் பருவத்தில் கொடுக்காதீர்கள்.
இரண்டு வயதில் என்ன உயரம் இருக்கிறதோ, அது தான் அதனுடைய எதிர்காலம். நான்கு வயது வரை, 'கொழுக் மொழுக்' என்று இருக்கும் குழந்தை, அதன்பின், மெலியத் துவங்கும்.
அது தான் இயல்பு, 'ஐயோ, குழந்தை மெலிந்து விட்டதே... என்று கண்டதையும் வாயில் திணித்து உருண்டையாக்கி விட்டால், அதன்பின், உடல் பருமனுக்கு சிகிச்சையே செய்ய முடியாது.
சித்ரா ராமன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சென்னை.
94901 47601
