தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - குழந்தைகளுக்கு '3டி' பார்வை வேண்டும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - குழந்தைகளுக்கு '3டி' பார்வை வேண்டும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - குழந்தைகளுக்கு '3டி' பார்வை வேண்டும்!


PUBLISHED ON : அக் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை, ஒரு வயதிற்குள்ளேயே, மனிதர்களை, பொருட்களை பார்க்கிறதா, கூப்பிடும் திசையில் உடனடியாக திரும்பி பார்க்கிறதா என்பதை, பெரும்பாலும் கவனித்து, சந்தேகம் இருந்தால் டாக்டரிடம் காட்டுகிறோம்.

பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் எழுதும் போது, படிக்கும் நேரத்தில் புத்தகத்தை கண்களின் அருகில் வைத்துப் பார்த்தால், டாக்டரிடம் காட்டி, கிட்டப் பார்வை, துாரப் பார்வையை பரிசோதித்து, கண்ணாடி போடுகிறோம்; ஆனால், குழந்தையின், '3டி' எனப்படும், 'பைனாகுலர்' பார்வை சரியாக உள்ளதா என பரிசோதிப்பதே இல்லை.

வழக்கமான கண் பரிசோதனை யில், பார்வைக் கோளாறு, விழித்திரை, கருவிழி, நரம்புகள் என்று மட்டும் பரிசோதிக்கிறோம்; ஆனால், குழந்தை இரண்டு கண்களையும் சேர்த்து பயன்படுத்துகிறதா என்பதை பரிசோதிப்பது இல்லை.

இரண்டு கண்களையும் சேர்த்து பயன்படுத்தும் திறன் தான், 'பைனாகுலர்' பார்வை.

மாறுகண் குறைபாடு, ஒரு கண்ணில், 'பவர்' அதிகம், மற்றதில் குறைவு போன்ற கோளாறுகள் இருந்தால், 'பைனாகுலர்' பார்வை இருக்காது.

விளையாட்டில், செயல்களில் குழந்தையால் தடுமாற்றம் இல்லாமல் சரியாக செய்ய முடியாது; பந்து எறிந்தால், சரியாக கணித்து பிடிக்க முடியாது; சாதாரண குழந்தை, படிகளில், 'விடுவிடு'வென்று இறங்குவதைப் போல, 'பைனாகுலர்' பார்வை இல்லாத குழந்தையால் இறங்க முடியாது; மேடு, பள்ளம் தெரியாது; சம தளத்தில் நடக்கும் போது, வழியில் பள்ளம் இருந்தால், அதுவும் சம தளமாகவே தெரியும். சம தளத்தில் வைப்பது போலவே, பள்ளத்தின் உள்ளே காலை வைப்பர்.

இவையெல்லாம், 'பைனாகுலர்' பார்வை இல்லை என்பதற்கான அறிகுறிகள்.

பரிசோதனையில், மாறு கண்ணா, பார்வைக் கோளாறால் இந்தப் பிரச்னையா என்பதை முடிவு செய்ய முடியும்.

மூன்று வயதில், எல்லாக் குழந்தைகளுக்கும், 'பைனாகுலர்' பார்வை உள்ளதா என்பதை, கண்டிப்பாக பரிசோதித்து, உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

தற்போது, பள்ளிகளில் கண் பரிசோதனை செய்கின்றனர்; ஆனால், வெறுமனே பார்வை குறைபாடு உள்ளதா என்பதை மட்டுமே பரிசோதிக்கின்றனர்.

குழந்தைககள் நல கண் மருத்துவரிடம் காட்டினால் மட்டுமே, 'பைனாகுலர்' பார்வை எப்படி உள்ளது என்பதை தெளிவாக பரிசோதிக்க முடியும். பார்வைக் கோளாறு, மாறு கண் இவைகள், 'பைனாகுலர்' பார்வை கோளாறுக்கான காரணம் என்றால், அதை சரி செய்யும் போது, இதுவும் சரியாகி விடாதா என்று கேட்டால், பிரச்னை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இது தீர்வு கிடையாது.

கிட்டப் பார்வை அல்லது துாரப் பார்வை உள்ளது; அவசியமான, 'பவர்' கண்ணாடி போடுகிறோம். ஆனால், இரண்டு கண்களிலும், 'பவர்' வித்தியாசம், 'மைனஸ் 6'க்கு அதிகமாக இருந்தால், எந்தக் கண்ணில், 'பவர்' குறைவாக, இயல்பாகவே பார்வை நன்றாக உள்ளதோ, மூளை அதைத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

மூளை, 'பவர்' அதிகமான கண்ணை, ஒதுக்கும். எனவே, ஒரு கண் பார்வையுடனேயே பார்ப்பதால், இயல்பாகவே குழந்தை தடுமாறும். இந்த, 'பவர்' அதிகம் உள்ளதைக் குறைக்க, சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன.

எங்களிடம் உள்ள அட்டவணையை வைத்து, குழந்தையின், '3டி' பார்வை, எந்த அளவிற்கு உள்ளது என்று பார்த்து, அதற்கேற்ப பயிற்சிகளைத் தருவோம்.

பயிற்சிகளை தொடர்ந்து கொடுத்து, '3டி' பார்வை மேம்படுகிறதா என பார்ப்போம். '3டி' என்பது, இரண்டு கண்களையும் சேர்த்துப் பார்ப்பது. நாம் பார்க்கும் பிம்பம் அனைத்திற்கும் ஒரு நீளம், அகலம், ஆழம் உள்ளது.

ஒரு பிம்பத்தின் ஆழத்தைப் பார்க்கும் திறன், கண்களுக்கு எந்த அளவு உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். சம தள தரையில் ஒரு பள்ளம் இருந்தால், '3டி' பார்வை இல்லாத குழந்தைக்கு மேடு, பள்ளத்திற்கு வேறுபாடு தெரியாது;

கால்களை மேட்டில் வைப்பது போலவே, பள்ளத்திலும் வைத்து விடும்.

அடுத்தது, பிறவியிலேயே மாறு கண் இருந்தாலும், 'பைனாகுலர்' பார்வை வராது. அறுவை சிகிச்சை செய்தாலும், சில நேரங்களில் பார்வை வராது. நிரந்தர மாறு கண்ணாக இல்லாமல், அவ்வப்போது வந்து போகும், சில வகை மாறு கண் உள்ள குழந்தைக்கு, சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், ஓரளவிற்கு இருந்த, '3டி' பார்வை, முற்றிலும் போய் விடும்.

சில நேரங்களில் பார்வை நன்றாக இருக்கும். 'எப்போதாவது தானே மாறு கண் வருகிறது' என நினைத்து, பல நேரங்களில் இந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாமதித்து விடுகின்றனர்.

'3டி' என்று ஒரு விஷயம் இருப்பதே பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. மாறுகண் அறுவை சிகிச்சை என்பது, அழகுக்காக செய்வது என்றே பலரும் நினைக்கின்றனர்.

'3டி' பார்வையின் முக்கியத்துவம் குறித்து தெரிவதில்லை.

அந்தப் பார்வை இல்லாத குழந்தைகளால், எந்த செயலையும் ஒழுங்காக செய்ய முடியாது.

'பைனாகுலர்' பார்வையின் முழுமையான, அம்சமான, '3டி' பார்வை குழந்தைகளுக்கு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பல டாக்டர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லையா அல்லது அலட்சியம் செய்கின்றனரா என தெரியவில்லை.

சமீபமாக வாசிப்பதில் குழந்தைக்கு பிரச்னை எனில், கவனக் குறைபாடு, 'ஹைபர் ஆக்டிவிட்டி' என்று சொல்கின்றனர்; ஆனால், அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை. இது, 'பைனாகுலர்' பார்வை இல்லாததாகவும் இருக்கலாம் என்று யோசிக்காமல், மனநல பிரச்னையாகவே பார்க்கின்றனர் என்பதே வருத்தமான விஷயம்.

குழந்தைக்கு இது போன்ற பிரச்னை எனில், குழந்தைகள் நல கண் மருத்துவரிடம் மட்டும் ஆலோசிக்க வேண்டும். நான்கு வயதிற்குள் வந்து விட்டால், பிரச்னையை எளிதாக சரி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

டாக்டர் மஞ்சுளா ஜெயகுமார்

குழந்தைகள் நல கண் மருத்துவர், சென்னை.

drmanjula@dragarwal.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us