சென்னை, டில்லியில் சர்க்கரை கோளாறை அதிகரிக்கும் காற்று மாசு
சென்னை, டில்லியில் சர்க்கரை கோளாறை அதிகரிக்கும் காற்று மாசு
PUBLISHED ON : நவ 14, 2023

சர்க்கரை நோய் பாதிப்பு நம் நாட்டில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். இதில், பெரிய நகரங்களில் சர்க்கரை கோளாறு அதிகம் உள்ளது; கிராமங்களில் குறைவாகவே உள்ளது. இது ஏன் என்று பல ஆண்டுகளாக நாங்கள் ஆய்வு செய்தோம்.
நகரங்களில் இருப்பவர்கள் பொருளாதார வசதியுடன் வாழ்கின்றனர்; காரில் செல்கின்றனர்; உடல் உழைப்பு கிடையாது; எல்லா வகை உணவுகளும் சுலபமாக கிடைக்கின்றன; கலோரி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர். கார்போஹைட்ரேட் உணவு அதிகம் சாப்பிட்டு, உடல் எடையை கூட்டுகின்றனர். இதனால் சர்க்கரை கோளாறு வருகிறது என்று நினைத்தோம்.
சி.ஏ.ஆர்.ஆர்.எஸ்., - சென்டர் பார் கார்டியோ வாஸ்குலர் ரிஸ்க் ரிடெக் ஷன் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையிலும், டில்லி யிலும் ஆய்வு நடத்துகிறோம். இதில் சர்க்கரை கோளாறு, ரத்தக் கொதிப்பு, கொழுப்பு, இதய நோய்கள் என்று பலவற்றையும் ஆய்வு செய்துள்ளோம். சுற்றுச்சூழல் மாசால், 'டைப் - 2' சர்க்கரை கோளாறு வரும் என்ற வெளிநாட்டு ஆய்வு முடிவுகளை பார்த்த போது, நாங்களும் அதே கோணத்தில், 'பார்ட்டிகுலேட் மேட்டர்' என்ற பெயரில் ஆய்வை தொடர்ந்தோம். 10 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை கோளாறு இல்லாமல் இருந்தவர்கள், தற்போது டைப் - 2 சர்க்கரை கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தொழிற்சாலைகள், வாகனங்கள் உட்பட பலவிதங்களிலும் புகை, மாசுக்கள் வெளிவந்து காற்றில் கலக்கும் போது, அதில் நுண்ணிய துகள்கள் சேர்ந்தே வரும். இதன் அளவு 2.5 மைக்ரானுக்கு அதிகமாக இருந்தால், அந்த காற்றை சுவாசிக்கும் போது, பல உடல் கோளாறுகள் வரலாம். துாசு அதிகம் உள்ள இடத்தில் இருந்ததால், இருமல், சளி, டி.பி., ஆஸ்துமா, கேன்சர் உட்பட பல நுரையீரல் கோளாறுகள் வரும் என்று தெரியும். இதற்கு முன் செய்த ஆய்வில், மாசு நிறைந்த சூழலில் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் வரும் என்று தெரிந்தது. தற்போது செய்த ஆய்வில், சுற்றுச்சூழல் மாசில் உள்ள நுண்ணிய துகள்கள், தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல், கணையம் போன்ற நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கிறது என்று உறுதியாகி உள்ளது. இதில், கணையம் சுரப்பது இன்சுலின் ஹார்மோன்.
டைப் - 2 சர்க்கரை கோளாறில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பது குறையும் அல்லது திசுக்கள், கல்லீரலுக்கு செல்லும் இன்சுலின் வேலை செய்யாது. இதற்கு இன்சுலின் எதிர்ப்பு என்று பெயர். மாசு அதிகம் இருந்தால், கணையம் சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்து, இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகி, சர்க்கரை கோளாறு வருகிறது. எங்கெல்லாம் மாசு அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் சர்க்கரை கோளாறும் அதிகரிக்கும்.
இத்தனை நாட்களாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னையாக சர்க்கரை கோளாறு இருந்தது. தற்போது சுற்றுச்சூழல் மாசால் பாதிப்பு என்பதால், இது தனிநபரின் பிரச்னை இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் நாம் ஒவ்வொருவரும் இணைந்து முயற்சி செய்தால், சுற்றுச்சூழல் மாசை எளிதாக கட்டுப்படுத்தலாம்; சர்க்கரை கோளாறின் பாதிப்பின் எண்ணிக்கையும் குறையும்.
டாக்டர் வி. மோகன்
சர்க்கரை கோளாறு மருத்துவ ஆலோசகர்,சென்னை