PUBLISHED ON : நவ 12, 2023

'அல்ட்ரா புராசஸ்ட்' எனப்படும் தீவிரமாக சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்திய உணவுகள், 'ஜங்க் புட்' எனப்படும் துரித உணவுகளை சாப்பிடுவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது என்பது மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்பட்ட உண்மை.
தினமும் வீட்டில் சமைக்கும் காய்கறிகளை. அடுத்த வேளைக்கு பயன்படுத்துவதற்கு முன், 'பிரிஜ்'ஜில் வைக்கிறோம்; சாப்பிடும் சமயத்தில் சூடுபடுத்துகிறோம். மீதமிருப்பதை மீண்டும் பிரிஜில் வைத்து, மீண்டும் சூடுபடுத்துகிறோம். இதனால், அவற்றில் உள்ள சத்துகளை இழக்கிறோம்.
வீட்டில் சமைத்த குழம்பு, அவியல், பொரியலை, அடுத்த வேளைக்கு சூடுபடுத்தி சாப்பிட்டாலே சத்து இழப்பு ஏற்படும் போது, தீவிரமாக சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தும் அல்ட்ரா புராசஸ்ட் உணவுகளில், ஆண்டுக்கணக்கில் கெடாமல் வைப்பதற்கு, அதிக உப்பு, சர்க்கரை, நிறமிகள், வேதிப் பொருட்கள் என்று பலவும் சேர்க்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தில் பதப்படுத்தும் போது, முழுமையாக சத்து இழப்பு ஏற்படும் என்பதை நான் சொல்லி புரிய வேண்டியதில்லை.
சமோசா பொரிக்கும் எண்ணெயை எத்தனை நாட்களுக்கு திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர் என்று தெரியாது. எல்லா எண்ணெயையும் குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் சூடு செய்யும் போது, அதன் வேதி மூலக்கூறு அமைப்பு மாறும். இது, கேன்சர் செல்களை துாண்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு யாராவது உயிரிழந்து இருப்பதாக செய்தி படிக்கிறோமா? ஆனால் நம் ஊரில் நடக்கிறது. அதை தயாரிப்பது, இறைச்சியை முறையாக பதப்படுத்துவது என்று எந்த வழிகளையும் நம் ஊரில் முறையாக செய்வதில்லை.
தொடர்ந்து இது போன்ற இயற்கைக்கு மாறான உணவுகளை சாப்பிடும் போது நம் உடம்பில் அழற்சியை ஏற்படுத்தும்; தொற்று ஏற்பட்டு, பல உடல், மன பிரச்னைகள் வரும். இவற்றில் இருக்கும் வேதி பொருட்களுடன், துாக்கமின்மை, உடல் பருமனும் சேரும் போது, ஹார்மோன் செயல்பாடுகளில் சீரற்ற தன்மையை உருவாக்குகிறது. இது தீவிர மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுகிறது. இரண்டாவது மூளை என்று சொல்லப்படும் வயிற்றுக்கும், மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. சாப்பிடும் உணவு தான் மனநிலையை பிரதிபலிக்கும்.
உணவு பழக்கத்தை எப்படி தேர்வு செய்வது?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உணவு பழக்கம் இருக்கும். பாட்டி, தாத்தாவின் உணவு முறையை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அது போன்று ஒவ்வொரு பகுதிக்கும், நாட்டிற்கும், கலாசாரத்திற்கும் ஒரு உணவு பழக்கம் இருக்கும். அவரவருக்கு ஏற்ற உணவை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுக்கள் என்று தினசரி உணவு சமச்சீராக இருப்பதும் முக்கியம்.
முருங்கை கீரை, வாழைப் பழம், புளிக்க வைத்த இட்லி மாவு உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை தினமும் சாப்பிடுவதால், 'புரோ பயாடிக்' எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் பெருங்குடலில் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தி தரும். இவை அதிக அளவில் இருந்தால், சாப்பிடும் உணவு சீராக செரிமானமாகி, அவற்றில் உள்ள சத்துக்கள் உடலில் சேரும். மனம் ஆரோக்கியமாக இருக்கும்.
டாக்டர் யாமினி பிரகாஷ்,
உணவியல் மருத்துவ ஆலோசகர், சென்னை 044 - 4000 6000, 73387 38886