PUBLISHED ON : நவ 19, 2023

தோல் நோய்களை தீர்க்கும் ஆற்றல் நம் நாட்டு மூலிகைகளுக்கு உண்டு. 'சோரியாசிஸ்' எனப்படும் செதில் படை நோய், கரப்பான், வெண்புள்ளி, அரிப்பு, தடிப்பு, ஒவ்வாமை, பூஞ்சை படை, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் நுாற்றுக்கணக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
பரவலாக காணப்படும் சோரியாசிஸ் நோயானது, மரபியல் காரணங்களாலும், நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் கோளாறு காரணமாகவும் தோல் வறண்டு போகும் போது இதன் தாக்கம் அதிகரிக்கும். எனவே, குளிர்காலங்களில் பாதிப்பு அதிகம் இருக்கும். மனக்கவலை, தவறான உணவு பழக்கங்கள், துாக்கமின்மை, புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்களாலும் பாதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு இது மூட்டு வாதத்தையும் உண்டாக்கும். இதற்கு, 'சோரியாடிக் ஆர்த்ரைடிஸ்' என்று பெயர்.
தோல் வறட்சியை தடுப்பது இந்நோயை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவத்தில் புகழ் பெற்ற வெட்பாலை தைலம் இந்நோய்க்கு ஒரு அருமையான வெளி மருந்தாகும்.
வெட்பாலை என்பது நம் தமிழகத்தில் சாதாரணமாக காணப்படும் பாலை நில மரம். இதன் இலைகளை பறித்து நன்றாக கழுவி ஈரம் உலர்ந்த பின், தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, சூரியனின் கதிர்கள் படுமாறு ஐந்து நாட்கள் வைத்தால், அழகான ஊதா நிறத்தில் எண்ணெய் கிடைக்கும். இது தான் வெட்பாலை எண்ணெய்.
இதை தினமும் பாதித்த இடத்தில் தடவி வந்தால் அரிப்பும், தடிப்பும், சிவப்பும், செதிலும் குறைவதை கண்கூடாகக் காணலாம். இது தவிர, பாதிப்புக்கு தகுந்தவாறு அருகன் தைலம், புங்கன் தைலம், நீலி அவுரி தைலம், செம்பருத்தி தைலம், குமரி தைலம் போன்ற பல வகையான எண்ணெய்களும் இதற்கு தீர்வாக இருக்கும்.
இத்துடன் பரங்கிப்பட்டை, சிவனார் வேம்பு, கரிசாலை, வெள்ளருகு, அவுரி, குப்பைமேனி, துளசி, அமுக்குரா, வில்வம், வன்னி, சோற்றுக் கற்றாழை ஆகிய மூலிகை சூரணங்களையும், பல்வேறு கூட்டு மருந்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தி நிரந்தர நிவாரணம் பெறலாம்.
மீண்டும் இந்நோய் ஏற்படாமல் இருக்கவும், விரைவில் குணமடையவும் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சைவ உணவுக்கு மாறி விடுவது நன்மை தரும்.
உணவில் புளிப்பு சுவையையும், புளிப்பான பழங்களையும் தவிர்க்க வேண்டும். மது, சிகரெட் தவிர்ப்பது அவசியம்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி
96000 10696, 90030 31796