தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அலோபதி: சினைப் பை புற்று: ஒளிந்திருக்கும் எமன்

அலோபதி: சினைப் பை புற்று: ஒளிந்திருக்கும் எமன்

அலோபதி: சினைப் பை புற்று: ஒளிந்திருக்கும் எமன்


PUBLISHED ON : செப் 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

மனித இனத்தின் ஆதார பெட்டகமாக, இனப் பெருக்கத்தின் அடிப்படையாக திகழ்வது, சினைப் பைகள் (ணிதிச்ணூடிஞுண்). பெண்களின் கர்ப்பப் பைக்கு இரு பக்கவாட்டிலும், பாதம் பருப்பு வடிவத்தில் இருக்கும் சினைப் பையில், மாதம் ஒரு முறை உற்பத்தியாகும் சினை முட்டை, கருக்குழாய் வழியாக பயணம் செய்து, ஆண் உயிரணுவுடன் கலக்கக் காத்திருக்கிறது. உயிரணு கிடைத்தவுடன், இந்த பூவுலகில் புதிய உயிரை படைக்கிறது. குழந்தைகளை உருவாக்க, மூலக் காரணமாக இருக்கும் சினைப் பையின் ஆரோக்கியத்தில், பெண்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை. இதுவே, சினைப் பையில், நீர் கட்டி முதல், புற்று நோய் கட்டி வரை உருவாகக் காரணமாக அமைந்து விடுகிறது. இந்தியாவில், 2 சதவீத பெண்கள் சினைப் பை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப் பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



மார்பகப் புற்று, கர்ப்பப் பை புற்று, கர்ப்பப் பை வாய் புற்று, குடல் புற்று என, இவை ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. மார்பகப் புற்று, கர்ப்பப் பை வாய்ப் புற்றுக்கு அடுத்து, சினைப் பை புற்று நோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் அறிகுறிகளே இல்லாமல், நோய் முற்றிய நிலையில் அறிகுறிகள் வெளிப்படுவதால், ஒளிந்திருந்து தாக்கும் எமன் என, புற்றுநோய் அழைக்கப்படுகிறது.



யார் யாருக்கு வரும்?



* அம்மா, பாட்டி, சகோதரி உட்பட குடும்ப வழி பாரம்பரிய காரணம்.

* உடல் பருமன், குழந்தை பேறின்மை.

* தாமத திருமணம், குழந்தை பேறின்மைக்காக தொடர்ந்து சிகிச்சை எடுப்பவர்கள் ஆகியோருக்கு, சினைப் பை புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சினைப் பை புற்று நோய், 4 நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. பெரும்பாலும் முதல் நிலையில், நோய் கண்டுபிடிக்கப்படுவது இல்லை. நோய் முற்றிய நிலையிலேயே, அறிகுறிகள் தெரிகின்றன.



அறிகுறிகள்:



முதல் நிலையில் அறிகுறிகள் தெரியாது. இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலையில் -



* வயிற்றில் கடும் வலி

* முதுகு வலி

* அஜீரண கோளாறுகளை போன்று வயிறு வீக்கம்

*வாயுத் தொல்லை

*பசியின்மை

* மலச் சிக்கல்

*திடீர் பேதி.



பெரும்பாலானோர் அஜீரண கோளாறு எனக் கருதி, கை மருந்து சாப்பிடுவது அல்லது பொது மருத்துவரிடம் சென்று வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டு, நாட்களை கடத்தி விடுவர். இதனால், நோய் முற்றி விடுகிறது. வயிறு வலி, அஜீரண கோளாறுக்கான அறிகுறிகள், நீண்ட நாட்களுக்கு நீடித்தால், சினைப் பை புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது என சந்தேகித்து, அதற்குரிய பரிசோதனைகளை செய்ய வேண்டும். கர்ப்பப் பை புற்று, கர்ப்பப் பை வாய் புற்று, குடல் புற்றுக்கு ரத்த கசிவு இருக்கும். ஆனால், சினைப் பை புற்றுக்கு, முற்றிய நிலையில் தான், ரத்த கசிவு இருக்கும்.



பரிசோதனைகள்:



புற்று நோயை உருவாக்கும் மரபணுக்கள் உள்ளனவா என கண்டுபிடிக்க, 'பிஆர்சிஏ 1, பிஆர்சிஏ 2' என, இரு பரிசோதனைகள் உள்ளன. குடும்பத்தில் யாருக்காவது புற்று நோய் இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உடலிலுள்ள புற்று கட்டிகளை கண்டுபிடிக்கும், 'சிஏ 125' ரத்த பரிசோதனை மூலமும், சினைப் பை புற்று நோயை கண்டுபிடிக்கலாம். இதுதவிர 'அல்ட்ரா ஸ்கேன்' பரிசோதனை, 'டிரான்ஸ்வெஜைனல் ஸ்கேன்' எனப்படும், இனப் பெருக்க உறுப்பு வழியாக செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை மூலம் சினைப் பை புற்றை தெரிந்து கொள்ளலாம்.

சிசிச்சை என்ன?: எல்லா புற்று நோய்களையும் போல், சினைப் பை புற்று நோயையும் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், பெரும்பாலானோர் முற்றிய நிலையில் வருகின்றனர்.



புற்று நோய் சினைப் பையில் மட்டும் பரவியிருந்தால், அறுவை சிகிச்சை மூலம் சினைப் பையை அகற்றிவிட்டு, கீமோதெரபி என அழைக்கப்படும், மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். மற்ற உறுப்புகளுக்கு பரவி விட்டால், சிகிச்சை பெரிய அளவில் பயன் தராது. சிலருக்கு ஒரு சினைப் பையில் மட்டும் புற்றுநோய் இருந்தால், அதை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை தேர்வு செய்வது அவசியம்.



டாக்டர் டி. தமிழ் செல்வி,

மகளிர் நோய் மற்றும் மகப்பேறு மருத்துவர், ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us