PUBLISHED ON : ஜூன் 03, 2012

ரத்தம் என்பது உடலுக்கு இன்றியமையாத ஒன்று. அது பாதிக்கப்பட்டால், நம் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் மிகவும் சோர்ந்து விடுவோம். இன்று மக்களிடையே இதுபற்றி விழிப்புணர்வு இல்லாமல், அதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்கின்றனர்.
நம் நாட்டில் மிக அதிகமாக மக்களைத் தாக்கும் நோய், ரத்த சோகை தான். பெண்களில், 50 சதவீதம் பேரும், குழந்தைகளில், 75 சதவீதம் பேரும், இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். ரத்தச் சோகை நோய்க்கு முக்கியமான காரணங்கள், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, உடலுழைப்பு, உணவில் உப்பு, புளி, காரம் அதிகமாகப் பயன்படுத்துவது மது அருந்துவது, மண்ணைத் தின்பது, பகலில் தூக்கம், உஷ்ணமான உணவு மற்றும் மருந்துகள் உட்கொள்வது.
இப்படிப்பட்ட உணவு பழக்க வழக்கங்களால், உடலில் பித்தம் சீற்றமடைந்து, ரத்தம் பாதிக்கப்படும். இதனால் ரத்தத்தின் அளவு குறைந்து, தன்மை மாறுவதனால் ரத்தச்சோகை என்ற நோய் உருவாகும். ரத்தம், நம் உடலுக்கும், உயிருக்கும் முக்கியமான ஆதாரம். ஆதலால் ரத்தம் பாதிக்கப்பட்டால், உடலும் பலவீனமாகி, எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து காணப்படுவர்.
இந்த வியாதி, சிறு வயதினருக்கு வரும் போது அவர்கள், மற்ற குழந்தைகள் போல் விளையாட முடியாது. சிறிது நேரம் விளையாடினால் கூட, மிகவும் சோர்ந்து விடுவர். சிறு வயதிலேயே கால்வலி, தலைவலி, பசியின்மை, ஜுரம், எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகளைக் காணலாம்.
சுரேஷ் என்கிற எட்டு வயது சிறுவன், விடுதியில் தங்கிப் படிக்கிறான். 'அவன் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறான். மற்ற பிள்ளைகளைப் போல் சுறுசுறுப்பாக இல்லை. சிறிய வேலை செய்தால் கூட, மூச்சு வாங்குகிறது. அடிக்கடி தலைவலி, இதய படபடப்பு போன்ற தொந்தரவுகள் இருக்கிறது' என, அவனை அழைத்து வந்த ஆசிரியர்கள் கூறினர். அவனுடைய உணவுகளைப் பார்த்தால், அளவுக்கதிகமான காரம், புளிப்பு, தயிர், மோர் போன்ற உணவுகளாக இருந்தன. முதலில், அவனுடைய உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டன.
புளிப்பு, காரம், தயிர் போன்றவை, அறவே நிறுத்தப்பட்டன. ரத்த சோகைக்காக, ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குப் பிறகு அவனுடைய ஆசிரியர், அவன் இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறான் என்றும், முன்புபோல் எப்போதும் தூங்குவதில்லை என்றும், தொலைபேசி மூலம் தெரிவித்தார். அந்த மருந்தை, ஒரு மாதம் தொடர்ந்து எடுக்குமாறு அறிவுறுத்தினோம். ஒரு மாதம் கழித்து அவனுக்கு பழைய தொந்தரவுகள் எதுவும் இல்லை மிகவும் நன்றாக இருப்பதாக நன்றி தெரிவித்தார்.
டாக்டர் பி.எல்.டி., கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்
63 காமராஜ் அவென்யு முதல் தெரு,
அடையாறு, சென்னை - 20.
sanjeevanifoundation@gmail.com
எங்கள் வைத்திய சாலையில் இருந்து ஏழைக் குழந்தைகள் தங்கிப் படிக்கும் விடுதிக்கு, ரத்தச்சோகைப் பற்றி கணக்கெடுக்கச் சென்றோம். அங்கு 50 குழந்தைகளில், 35 குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒரு பள்ளியின் கணக்கெடுப்பில், இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர் என்றால், இந்தியாவில் எத்தனை குழந்தைகள் இருப்பர் என்பது, வேதனை.
ரத்தம் என்பது உடலுக்கு இன்றியமையாத ஒன்று. அது பாதிக்கப்பட்டால், நம் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் மிகவும் சோர்ந்து விடுவோம். இன்று மக்களிடையே இதுபற்றி விழிப்புணர்வு இல்லாமல் அதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து, அதற்கு தீர்வு கூட கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். ஆயுர்வேதத்தில் இதற்கு, நல்ல, நிரந்தர தீர்வு உண்டு.

