PUBLISHED ON : ஜூன் 03, 2012
* ஆர். ரங்கராஜன், மதுரை: என் வயது, 65. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு இல்லை. இதுவரை, நடை பயிற்சியும் செய்ததில்லை. தற்போது வாழ்வியல் மாற்றங்களை கடைபிடிப்பதால் பயனுண்டா?
வாழ்வியல் மாற்றங்களை செய்ய, வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதிலும் அதை துவக்கலாம். சரியான உணவுப் பழக்கம், நிம்மதியாக மனதை வைத்துக் கொள்வது, தினமும், 7 மணி நேர தூக்கம் அவசியம். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை எந்த வயதில் நிறுத்தினாலும், அதற்கு தகுந்த பலனுண்டு. உடற்பயிற்சியை பொறுத்தவரை, நீங்கள் இந்த வயதில் அதை துவக்கும் முன், ஒரு இதய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன்பின் மெதுவாக துவங்குவதே சிறப்பு. கடுமையான உடற்பயிற்சியை இவ் வயதில் துவங்குவது நல்லதல்ல. எந்த வயதில் உடற்பயிற்சி துவக்கினாலும், சர்க்கரை நோய் வரும் நாள் தள்ளிப் போடப் படுகிறது என்பதே உண்மை.
* கே. முத்துக்குமார், திண்டுக்கல்: என் நண்பருக்கு, சில ஆண்டுகளாக ரத்தஅழுத்தம், 180/100 என்ற அளவில் உள்ளது. ஆனால், அதை அவர் கண்டு கொள்வதே இல்லை. டாக்டரை பார்த்து மருந்து எடுத்துக் கொள்வதும் இல்லை. இது சரிதானா?
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒருவருடைய ரத்த அழுத்தம், எந்த வயதிலும், எந்த நேரத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்றளவில் இருந்தாக வேண்டும். 180/100 என்பது மிக அதிகமான ரத்தஅழுத்தம். இது ஒரு, 'டைம்பாம்' போன்றது; எப்போது வெடிக்கும் எனக் கூற முடியாது. உடல் உள்ளுறுப்புகளை பாதிப்பது, பலருக்கு வெளியில் தென்படாமல் இருக்கும். திடீரென மூளை, சிறுநீரகம், இதயம், ரத்தக் குழாய்கள், கொடூரமாக பாதிக்கும். எனவே, நீங்கள் நல்ல நண்பராக செயல்பட்டு, அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்று, ரத்த அழுத்தத்தை சரியான அளவிற்கு கொண்டு வர வலியுறுத்துவதே நல்லது.
* எம். பாலகிருஷ்ணன், அருப்புக்கோட்டை: கடந்த நான்கு ஆண்டுகளாக, இதய நோய் உள்ளது. இதற்காக, 'Betaloc' என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது அம்மாத்திரை கிடைக்கவில்லை. நான் என்ன செய்வது?
'Betaloc' என்பது, Beta Blocker என்ற மருந்து வகையை சார்ந்தது. இது ரத்த அழுத்தம், இதய நோய்க்கு தரப்படும் மருந்து. இது கிடைக்கவில்லை என்றால், 'Metaprolol Succinate' என்ற மருந்தை அதே அளவில் எடுப்பது நல்லது. பல்வேறு கம்பெனிகள் இம்மருந்துகளை தயாரிப்பதால் தாராளமாக கிடைக்கிறது.
டாக்டர் விவேக்போஸ்,
மதுரை.

