PUBLISHED ON : அக் 01, 2017

இயற்கை நமக்கு அளித்துள்ள அருமருந்துகளில் முக்கியமானது சோற்றுக்கற்றாழை. நம் முன்னோர், அதை பல்வேறு மருத்துவ தேவைகளுக்கும் பயன்
படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சில வருமாறு:
உடற்சூடு குறைய: சோற்றுக் கற்றாழை சோற்றை எண்ணையிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர, முடி வளர்வதுடன் நல்ல உறக்கமும் உண்டாகும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் கற்றாழை சோறு ஊற வைத்து, அரைத்த வெந்தயம், அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் இறக்கி, வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்கு போகுமுன் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும்.
கூந்தல் வளர: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப்பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிகாரத் தூளைத் தூவிவர, சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணை கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.
கண்களில் அடிபட்டால்: கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
கற்றாழைச் சோற்றில் சிறிது படிகாரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர் சொட்டுவதைச் சேகரிக்க வேண்டும். அதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு: மூலிகைக் குளியல் எண்ணை தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப்பகுதியை அரை கிலோவுடன், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில், 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையை கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகிவிடும்.
வயிற்று கோளாறுக்கு: சோற்றுக் கற்றாழையின் சோறு, 10 முறை கழுவியது; 1 கிலோ, விளக்கெண்ணைய், 1 கிலோ பனங்கற்கண்டு, அரை கிலோ வெள்ளை வெங்காயச் சோறு ஆகியவற்றைக் கலந்து சிறுதீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
அதை இரண்டுவேளை, 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, ரணம், புளியேப்பம், இருமல் ஆகியன குணமாகும். இதுமட்டும்
அல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை, தண்டு வலி, அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச்சூடு தணியும்.

