PUBLISHED ON : செப் 09, 2015

ராஜனின், மகன் முகிலுக்கு இரண்டு வயது தான் ஆகிறது. ஆனால், பெரிய மனிதர்களுக்குரிய கிரகிக்கும் சக்தி உண்டு. குழந்தையிலேயே, சாதாரண அலைபேசி முதல், 'ஸ்மார்ட்' அலைபேசி வரை, எல்லா வகையான அலைபேசிகளாக இருந்தாலும், நொடியில் அதை முகில் இயக்குவது குறித்து, பெற்றோர் பெருமைப்பட்டனர்.
அதனால், அவன் விளையாடும் போது, சாப்பிடும் போது அலைபேசியை அவனது கையில் கொடுக்க துவங்கினர். ஒரு கட்டத்தில், குளிக்க செல்லும் போது கூட, அலைபேசியுடன் செல்ல துவங்கினான் முகில். அலைபேசி அவனது ஆறாவது விரலானது. ஆரம்பத்தில், இதை ராஜன் தம்பதி ரசித்தாலும் பின் வெறுப்படைய ஆரம்பித்தனர். முதல் குழந்தை என்பதால் செல்லமாய் வளர்க்க ஆசைப்பட்டு, அவன் அழும் போதெல்லாம் அவன் அழுகையை நிறுத்த அலைபேசி கொடுத்ததன் விளைவு, அவனுக்கு எல்லாமே, 'ஸ்மார்ட்' அலைபேசி தான் என்றாகி விட்டது.
அதிலும் தொடுதிரை அவனது கவனத்தை மிகவும் ஈர்த்தது. குழந்தைகளுக்கு, நிறங்கள் மிகவும் பிடிக்கும். முகிலுக்கும், 'ஸ்மார்ட்' அலைபேசியின் தொடுதிரையில் தோன்றும் நிறங்களில் ஈடுபாடு அதிகரித்தது.
ராஜனும், அவரது மனைவியும், ஆசையாக பெற்ற மகனை செல்லம் கொஞ்ச நினைத்து அவனை தூக்கும் போதெல்லாம் முகிலின் கவனம் அலைபேசியிலேயே இருக்கும். ஒருகட்டத்தில், ராஜன் தம்பதி பயந்து போய் குழந்தையை என்னிடம் அழைத்து வந்தனர். யார் முகிலுக்கு அலைபேசியை அறிமுகப்படுத்தியது என நான் கேட்டபோது, ராஜன் தன் மனைவியை குற்றம்சாட்ட துவங்கினார்.
அவரது மனைவி, வீட்டு வேலை செய்யும் போது அலைபேசியை முகிலிடம் கொடுத்துவிட்டு தன் வேலைகளை செய்திருக்கிறார். அதுவே அவனுக்கு பழக்கமாகி விட்டது.
சரி. முகிலை எப்படி சரி செய்வது?
அவன் பள்ளியில் சேரும் முன், அலைபேசியை கட்டாயம் மறக்க வேண்டும். அதனால் என்ன செய்வது என்பதை நான் தீர்மானித்தேன்.
முதலில், 'கிண்டர் கார்டன்' எனப்படும், சிறுவர் விளையாட்டுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். காரணம், மற்ற குழந்தைகளுடன் சேர்த்து விளையாடும் போது அலைபேசியை மறக்க வாய்ப்புள்ளது.
மாலை வேளைகளில் பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டான். அவனது கவனம், வலுக்கட்டாயமாக அலைபேசியில் இருந்து, மற்ற செயல்களுக்கு திருப்பி விடப்பட்டது.
குழந்தைகளை தொடர்ந்து அலைபேசியில் விளையாடவிட்டால் கண் பார்வை நரம்புகள் பாதிக்கப்படும்; தலைவலி வரும்; கண் கோளாறுகள் ஏற்படும்.
இதோடு பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அலைபேசியிலிருந்து வெளிப்படும் கதிர்களால் முக்கியமான மூளை நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அதோடு, எந்நேரமும் அலைபேசியை கையாள்வதால் கைவிரல் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு, கேங்களின் எனப்படும் பிரச்னையும் ஏற்படுகிறது. அதாவது, மணிகட்டில் இருக்கும் எலும்புகளின் இணைப்பிலுள்ள திசுக்கள் வெளிவந்துவிடுகின்றன. இத்திசுக்கள் அதிகளவில் வெளியேறி இருந்தால், அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் அலைபேசியில் விளையாடுவதால் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இதனால் உடல் உழைப்பு ஏற்படாமல் பல உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
எனவே, பெற்றோர் குழந்தைகளுக்கு அலைபேசியை அறிமுகப்படுத்தாமல் இருப்பதே நல்லது. முகிலின் விஷயத்தில் அவனது பெற்றோருக்கு தலைவலி போய் திருகுவலி ஆரம்பித்துவிட்ட கதையானது.
குழந்தைகளுக்கு, 5 வயது வரை, பெரிய அளவில் மருந்துகளோ, மற்ற சிகிச்சைகளோ கொடுக்க முடியாது. முகிலுக்கும் இதுதான் நிலைமை. இப்போது விளையாட்டு பள்ளிக்கு சென்று வரும் முகில், தன் மழலைக் குரலில் சில பாடல்களை பாட துவங்கி உள்ளான்.
தெ.சத்யமூர்த்தி,
மனநல ஆலோசகர்.
கேளம்பாக்கம் சென்னை,
dr.t.sathyamurthi@gmail.com

