PUBLISHED ON : பிப் 12, 2021

கடந்த ஆறு மாதங்களில், உடல் எடை அதிகரிப்பு, அதன் விளைவாக ஆர்த்ரைடீஸ் எனப்படும் முழங்கால், மூட்டுகளில் ஏற்படும் வலி, முதியவர்களிடையே அதிகரித்து உள்ளது. கழுத்து வலி, முதுகு வலி தொடர்பான பிரச்னைகளால், இளம் வயதினர் அதிகம் வருகின்றனர்.
இதற்கு என்ன காரணம்?
சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பொதுவான உடல் பிரச்னைகள் இருக்கும் முதியவர்கள், தொற்று அச்சத்தில் வீட்டிற்கு உள்ளேயே இருந்தனர். போதுமான உடற்பயிற்சி இல்லை; இதனால், உடல் வலி அதிகம் இருப்பது, சூரிய ஒளி படாததால், வைட்டமின் டி குறைபாடும் அதிகரித்து விட்டது.
இளம் வயதினர்...
வீட்டில் இருந்தே அலுவலக வேலை என்பதால், படுக்கை மீது அமர்ந்து, நாற்காலியில் உட்கார்ந்து, படுத்துக் கொண்டு என்று வேலை செய்யாததால், கழுத்து, முதுகு வலி அதிகரித்து உள்ளது.
முதியவர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு?
வைரஸ் தொற்று மற்ற தொற்றுகளைப் போன்று இனி இருக்கவே செய்யும். உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அல்லது தடுப்பு மருந்து போட்டு கொள்வது தான் இதற்கு தீர்வு. கூட்டம் உள்ள இடங்களை தவிர்த்து, முக கவசம் அணிந்து, வழக்கமான வேலைகளை செய்ய துவங்க வேண்டும். தினமும், 45 நிமிடங்கள் காலை அல்லது மாலை சூரிய ஒளி உடலில் படும்படி நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
உடற்பயிற்சி
போர்வையை உருளை போன்று மடித்து, படுத்த நிலையில், முழங்காலுக்கு அடியில் வைத்து, கால்களை துாக்காமல், முழங்காலில் அழுத்தம் தர வேண்டும். 10 வினாடிகள் கழித்து, 2 வினாடி ஓய்வுக்கு பின் மீண்டும் அழுத்த வேண்டும். இது போன்று, 60 முறை தினமும் செய்தால், தொடை தசைகள் வலுப்பெற்று, ஆர்த்ரைடீஸ் வருவதை தவிர்க்கலாம்.
முழங்காலை, தனித்தனியே, 20 முறை மடக்கி நீட்டுவது, முட்டியை மடக்காமல், 20 முறை மேலும் கீழும் கால்களைத் துாக்குவது. கால்களை வலுப்படுத்தும் பயிற்சிகள். பெண்கள் இதை தவறாமல் செய்ய வேண்டும்.
என்ன காரணம்?
மாதவிடாய் நின்ற பின், ஹார்மோன் சுரப்பு குறைவதால், ஆர்த்ரைடீஸ், 45 வயதிலேயே வந்து விடுகிறது. மிதமாக இருக்கும் பிரச்னை, ஆண்களுக்கு தீவிரமாக, 15 ஆண்டுகள் ஆகிறது. பெண்களுக்கு, 5 ஆண்டு களிலேயே தீவிரமாகி விடுகிறது.
உடல் எடை
நாற்பது வயது வரையிலும், எவ்வளவு உடல் எடையில் இருக்கிறோமோ, அதற்கு உடல் உள் உறுப்புகள் பழகி விடும். அதற்கு ஏற்றார்போல தான், உடலின் உள் செயல்பாடுகள் இருக்கும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரித்தால், முழங்கால் மூட்டு வலி வரும். நடைப்பயிற்சி உடல் எடையை சீராக வைக்க உதவும்.
வீட்டில் இருந்தே வேலை
ஒரே இடத்தில் தொடர்ந்து, 8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதற்காக நம் உடல் அமைப்பு இல்லை. நடப்பது, கை, கால்களை அசைப்பது என, இயங்கியபபடியே இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தசைகள் இறுகி கழுத்து வலி, முதுகு வலி வந்து விடும். வைரஸ் தொற்றுக்கு இணையாக கழுத்து, முதுகு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாற்காலியில் அமர்ந்து, லேப் - டாப்பை முதுகு தண்டு நேராக, கழுத்து குனியாமல் கண்களும், திரையும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்று வைத்து வேலை செய்ய வேண்டும். கீ - போர்டு மடியில் வைத்து, முன்பக்கம் முதுகை வளைக்காமல், 'டைப்' செய்ய வேண்டும்.
இரண்டு கைகளுக்கும் அழுத்தம் கொடுக்காமல் இருப்பது முக்கியம். முடிந்த வரை மொபைல் போன் தேவையை குறைத்துக் கொள்வது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடப்பது, நடக்கும் போது, தோள் பட்டை உயரத்திற்கு, கைகளை வீசி நடந்தால், கழுத்து பகுதியில் உள்ள தசைகள், 'ரிலாக்ஸ்' ஆகும்.
அறிகுறிகள் மிதமாக தெரியும் போதே கவனித்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தால், மருந்து, மாத்திரை இல்லாமல், எளிதாக சரிசெய்து விடலாம்.
டாக்டர் எஸ்.செந்தில் குமார்,
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,
தி இந்து மிஷன் மருத்துவமனை,
சென்னை. 044 - 2226 2244
