PUBLISHED ON : ஜூலை 22, 2012

எனக்கு சமீபத்தில் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் கடையில் கிடைக்கும் ரத்த அழுத்த உபகரணத்தை வாங்கி பயன்படுத்தலாமா?
ரத்தஅழுத்தத்தை அளவிட தற்போது நவீன உபகரணங்கள் உள்ளன. இவற்றை 'டிஜிட்டல் அப்பேரட்டஸ்' என்று குறிப்பிடுவர். இவை, ரத்த அழுத்தத்தை மிகத் துல்லியமாக, எளிமையாக அளவிடுகின்றன. இவை, 2,000 அல்லது 3,000 ரூபாய் விலையில், தரத்துக்கு ஏற்ப கிடைக்கின்றன. ஒரு உபகரணத்தை வாங்கியவுடன், டாக்டரிடம் சென்று, அதன் செயல்பாடுகளை அறிந்து, நீங்களே உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, கால அட்டவணைப்படி, நேரத்துடன் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து உங்கள் டாக்டரிடம் செல்லும்போது அதை காண்பித்தால், உங்கள் ரத்தக் கொதிப்பின் தன்மையை, அவரால் சரியாக அளவிட முடியும்.
அனைத்து ரத்தக் கொதிப்பு நோயாளிகளும் இதை செயல்படுத்தினால் நல்லது. ரத்த அழுத்தத்தின் அளவு, எந்த வயதிலும், எந்த தருணத்திலும், 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.
டாக்டர் விவேக்போஸ், மதுரை.