PUBLISHED ON : ஜூலை 22, 2012

''தமிழகத்தில் சர்க்கரை நோய் மற்றும் நெருங்கிய உறவில் திருமணம் செய்வதால் கண் நோயால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது,'' என்று கேரளாவின் பிரபல ஆயுர்வேத டாக்டர் என்.நாராயணன் நம்பூதிரி அதிர்ச்சி தகவலை தருகிறார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளத்தில் (கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ.,) உள்ளது ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண்மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம். கண் மருத்துவத்திற்கு என்று தனியாக துவங்கிய, முதல் ஆயுர்வேத மருத்துவமனை இது. டாக்டர் என்.பி.பி. நம்பூதிரி, என்.பி.நாராயணன் நம்பூதிரியால் 1999 ல் நான்கு படுக்கை வசதியுடன் துவங்கிய இந்த மருத்துவமனையில், தற்போது 350 படுக்கை வசதி, 26 டாக்டர்கள், 270 ஊழியர்கள் உள்ளனர். இங்கு பொதுமருத்துவம், காதுநோய்கள், மனநலம் போன்றவற்றிற்கும் சிகிச்சை உண்டு.
மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் என்.நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:
இங்கு சிகிச்சை பெற வருபவர்களில் 40 சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் சர்க்கரை நோயால் பலர் கண்பாதிப்பு அடைகின்றனர். அதே போன்று மரபு வழியாக கண்நோய் பாதித்தவர்கள் அதிகமாக வருகின்றனர். நெருங்கிய உறவில் திருமணம் செய்வதே இதற்கு காரணம். ஆயுர்வேத மருத்துவ முறையில் 76 கண்நோய்கள் இருக்கின்றன. பார்வை குறைபாடு, கண் நரம்பு பாதிப்பு, கருவிழி பாதிப்பு, கண்ணில் வெள்ளைப்பகுதி பாதிப்பு, கண் இமை பாதிப்பு போன்றவை முக்கிய நோய்கள்.
காலநிலை மாற்றம், மோசமான சுற்றுச்சூழல், அருகில் இருப்பவர் புகைபிடிப்பது, எப்போதும் 'டிவி', கம்ப்யூட்டர் பார்ப்பது, சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு போன்றவற்றால் கண் உலர்தல், எரிச்சல், சிவப்பாகுதல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. தினமும் எண்ணெய் தேய்த்து குளித்தால் கண் குளிர்ச்சியாகும். சுத்தமான நீரால் கண்ணை தினமும் கழுவலாம்.
எங்கள் மருத்துவமனையில், பாரம்பரிய முறைகள் மூலம் அல்லாமல், நவீன மருத்துவ கருவிகள் மூலம் நோய்களை கண்டறிகிறோம். ஆனால் மூதாதையர்கள் அருளி எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, பாரம்பரிய ஆயுர்வேத முறையில் பக்கவிளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிக்கிறோம்.
பெரும்பாலான மருந்துகளை, இயந்திரங்கள் மூலம், ஐ.எஸ்.ஓ., தரம் பெற்ற எங்கள் உற்பத்தி கூடத்தில் தயாரிக்கிறோம். தேவையான மூலிகைகளை எங்கள் பண்ணையில் வளர்க்கிறோம்.
பார்வை முற்றிலும் இல்லாமல் வருபவர்களுக்கு, அவர்கள் மன அழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங் செய்த பிறகு சிகிச்சை அளிக்கிறோம். அவர்கள் சிறிதளவாவது பார்வை பெறுவதே எங்கள் வெற்றி. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் ஏழைகளுக்கு சிகிச்சை மற்றும் 2 வாரத்திற்கான மருந்து இலவசமாக தருகிறோம். ஏழைகள் தங்கியும் இலவச சிகிச்சை பெறலாம்.
தீவிரமான கண்புரை நோய்க்கு தற்போது அறுவை சிகிச்சையே தீர்வு. இதற்கு பதில் ஆயுர்வேதத்தில், மருந்து மூலம் குணமாக்க ஆய்வு நடத்தி வருகிறேன். இவ்வாறு கூறினார். தொடர்புக்கு 094465 24555
குழந்தை பருவத்தில் கண்ணாடி ஏன்?
இன்று பள்ளிகளில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கண்ணாடி அணிந்திருக்கின்றனர். இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறைகள் தான். பார்வை குறைபாட்டை களைய நிறைய பழங்கள், காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். 'ஜங்க் புட்' தவிர்க்கப்பட வேண்டும். கேரட், முருங்கை கீரை, பப்பாளி, ஆப்பிள், பேரிச்சை போன்றவை கண்ணிற்கு நல்லது.
உங்களுக்கு நாற்பது வயதா? முதலில் கண்ணை பாருங்க!
ஆண்டிற்கு ஒரு முறை கண்பரிசோதனை அவசியம். அதுவும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்ய வேண்டும். யோகா, மூச்சுபயிற்சி முக்கியம். உடற்பயிற்சி போன்று, 'கண் பயிற்சி' அவசியம் செய்ய வேண்டும். அதாவது கண்முன்னே ஒரு பொருளை சில வினாடிகள் பார்த்து விட்டு, முகத்தை அசைக்காமல், அப்படியே இருந்து கொண்டு கண்ணை மட்டும் இடப்பக்கம், வலப்பக்கம் திருப்பி பார்க்க வேண்டும்.