தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தை பருவ உடல் பருமனை தவிர்க்கலாம்

குழந்தை பருவ உடல் பருமனை தவிர்க்கலாம்

குழந்தை பருவ உடல் பருமனை தவிர்க்கலாம்


PUBLISHED ON : டிச 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரோக்கிய உணவை குழந்தைகளுக்கு பழக்குவது எப்படி?

நடத்தை, விருப்பு, வெறுப்பு, பழக்க, வழக்கங்கள் போன்றவற்றை, குழந்தைகள் எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதற்கு, சர்வதேச அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும், பெற்றோரைப் பார்த்தே கற்றுக் கொள்கின்றனர். அவர்களின் நடத்தை, பழக்க, வழக்கங்கள் மட்டுமல்ல, என்ன உணவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும், பெற்றோரை பார்த்தே பின்பற்றுகின்றனர். அதனால், பெற்றோரின் உணவுப் பழக்கம் முதலில், ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

இதற்கு நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்?

'கன்ட்ரோல் மாடல், மாடலிங்' என, இரு முறைகள் உள்ளன. கன்ட்ரோல் மாடல் என்பது, இதைச் செய்யக் கூடாது அல்லது இதைச் செய்தால், இதைத் தருவேன் என்பது.அதாவது, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, சில உணவுகளை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பெற்றோர், காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லி, 'இந்த பழம் முழுவதையும் நீ சாப்பிட்டால், உனக்கு சாக்லெட் தருகிறேன்... காய்கறி சாலட் சாப்பிட்டால், கேக் தருகிறேன்' என, உற்சாகப்படுத்துகின்றனர். இது, குழந்தைகளை ஊக்கப்படுத்தும் என, நம்புகின்றனர். ஆனால், பொதுவாகவே, குழதைகளுக்கு சாக்லெட் பிடிக்கும். பிறந்ததில் இருந்தே அவற்றைக் கொடுத்து, அதில் உள்ள இனிப்பு சுவைக்கு அடிமைப்படுத்தி இருக்கிறோம். இப்போது, இதைச் சாப்பிட்டால் அதைத் தருகிறேன் என்று சொல்லும் போது, காய்கறிகளை விடவும், சாக்லெட் நல்லது என, குழந்தைகள் தவறாக புரிந்து கொள்வர்.

மாடலிங் என்பது, குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டுமோ, அதையே பெற்றோரும் சாப்பிட்டு, முன்னுதாரணமாக இருப்பது. குழந்தைகளின் தட்டில் என்ன பரிமாறுகிறோமோ, அது தான் பெற்றோர் தட்டிலும் இருக்க வேண்டும். அதைவிடுத்து, கேக் சாப்பிடக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தால், பெற்றோருக்கு தெரியாமல், அதை அதிகம் சாப்பிடவே தோன்றும்.

குழந்தைகள் அதிகம் கவனிக்கும் விஷயங்கள்?

பெற்றோரின் ஒவ்வொரு அசைவையும், குழந்தைகள் கவனிக்கவே செய்வர். அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை வாங்குகிறோமா, கீரைகளை அதிகம் சமைக்கிறோமா, முளை கட்டிய பயிர் வகைகளை சிற்றுண்டியாக தருகிறோமா, மைதா, ரவை, வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல், கோதுமை, அரிசி, சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்துகிறோமா என, சமையலில் தினசரி பயன்படுத்தும் எல்லா விஷயமும், குழந்தைகளின் மனதில் ஆழப் பதியும். அதிலும், பெண் குழந்தைகளுக்கு, அம்மா, பாட்டியின் பாதிப்பும், ஆண் குழந்தைகளுக்கு, அப்பா, தாத்தாவின் பாதிப்பும் அதிகம் இருக்கும்.

விளம்பரங்களின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்துமா?

இதைத் தவிர்க்க முடியாது. ஆனால், முறையான உணவுப் பழக்கத்திற்கு குழந்தைகளை பழக்கிவிட்டால், விளம்பரங்களில் வரும் உணவுகள், அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. விளம்பரங்களைக் காட்டிலும் அதிகம் பாதிப்பது, மற்ற குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தான்.'அவன், 'சிப்ஸ்' சாப்பிடுறான்; நான் ஏன் கேரட் சாப்பிடணும்? எனக்கும், அது தான் வேண்டும்' எனக் கேட்பர். எல்லா பெற்றோரையும் அழைத்து, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இந்த விஷயத்தை எளிதாக கையாள முடியும்.

குழந்தை பருவ உடல் பருமனை தவிர்க்க?

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பது தான் நல்லது எனக் குழந்தைகளிடம் கூறும் பெற்றோர், தாமும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அம்மாவும், அப்பாவும் அதிக உடல் எடையுடன் இருந்து, அது தவறு என்று சொன்னால், குழந்தைக்கு குழப்பம் தான் ஏற்படும். பொதுவாக பெண்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது, மிகவும் குறைவாகவே உள்ளது. குறைந்தபட்சம், வீட்டில் இருந்தபடியே செய்யும் யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை, பெண்கள் தினமும் செய்யலாம்.அதிகாலையில் எழுந்தோ அல்லது மாலை வேளைகளிலோ இவற்றை தவறாமல் செய்தால், குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியின் மேல் ஆர்வம் வரும்.

ஆண்களும், நடைபயிற்சி, 'ஜிம்' செல்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வது, உடற்பயிற்சி மீதான ஆர்வத்தையும், தினசரி பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தையும் புரிய வைக்கும். உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு பழக்கம் இருந்தாலே, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உடல் பருமனை தவிர்க்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us