PUBLISHED ON : ஜூலை 15, 2012

தயிர், பால், புதிதாக அறுவடையான தானியங்கள், இனிப்பு தின்பண்டங்கள், மீன், கோழி, ஆட்டு மாமிசம் போன்றவை, கபத்தை உடலில் அதிகப்படுத்தும். இந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால், உடலில் கப தோஷமானது அதிகரித்து, சர்க்கரை வியாதிக்கு அஸ்திவாரம் போடுகிறது.
சஞ்சீவனிக்கு ஆயுர்வேத சிகிச்சையை நாடி வரும் பெருவாரியான நோயாளிகளுக்கு, சர்க்கரை வியாதி காணப்படும். உதாரணமாக ஒருவர், தலைவலி அல்லது வயிற்றுப்போக்கு என, சிகிச்சைக்கு வரும் போது, தங்களுக்கு சர்க்கரை வியாதியும் உண்டு என்றும், அதற்கு மருந்து சாப்பிட்டு வருவதாகவும் கூறுவர்.
அதில் பலருக்கு, மருந்து சாப்பிட்டும், சர்க்கரை நோய் கட்டுப்பாடின்றி காணப்படும். இந்தியாவில் முக்கியமாக, நகர்புறத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, புள்ளி விவரங்களில்இருந்து தெரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக, சர்க்கரை வியாதிக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி ஆராய்வோம்...
முழு நேரமும் சுகமாக உட்கார்ந்திருப்பதும், பகல் தூக்கம் அல்லது அதிகப்படியான உறக்கம் கொள்வதும், உடலில் கப தோஷத்தைப் பெருக்கும் உணவும், பழக்கவழக்கங்களும் தான், சர்க்கரை வியாதிக்கு முக்கியமான காரணங்கள். உடல் அசைவின்றி நாம் உட்கார்ந்து கொண்டே இருப்பதும், அளவுக்கு மீறிய நேரம் சோம்பலுடன் தூங்கி வழிந்து கொண்டிருப்பதும், உடலில் அதிகமாகக் கபத்தை வளர்த்து விடும்.
தயிர், பால், புதிதாக அறுவடையான தானியங்கள், இனிப்புத் தின்பண்டங்கள், மீன், கோழி, ஆட்டு மாமிசம் போன்றவை, கபத்தை உடலில் அதிகப்படுத்தும். இந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால், உடலில் கப தோஷமானது அதிகரித்து, சர்க்கரை வியாதிக்கு அஸ்திவாரம் போடுகிறது.
இதோடு நாம் சோம்பலை வளர்த்து, அலட்சியமாக இருந்து விட்டால், சர்க்கரை வியாதி நம்மை தாக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. இவ்விதமாக அதிகரிக்கும் கபம், உடலில் தாதுக்களான கொழுப்பு, தசைகள், நீர் இவற்றைக் கெடுத்து, சிறுநீர்ப் பையில் சர்க்கரை வியாதி அல்லது பிரமேகம் எனும் கொடிய வியாதியை ஏற்படுத்துகிறது.
இந்த வியாதி, நம் தாய் தந்தை பரம்பரையில் இருந்தால், அது நமக்கும் உண்டாகலாம். தாயோ, தந்தையோ சர்க்கரை நோயாளியாக இருந்தால், நாம் முன் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம்.
சர்க்கரை வியாதி ஒரு மனிதனைக் தாக்குவதற்கு முன்னால், சில அறிகுறிகள் உடலில் தென்படும். அதாவது பல், கண், மூக்கு, காது போன்றவற்றின் துவாரங்களில் அதிகமாக அழுக்குப் படிவது, கைகளிலும், பாதங்களிலும் எரிச்சல், உடலில் எண்ணெய் பசை, அதிக அளவு நீர்வேட்கை, வாயில் ஒரு வித இனிப்புச் சுவை, நகம், மயிர் இவை அதிக அளவில் வளர்வது, உடம்பில் பருமனோ, கனமோ தோன்றுவது, உட்காருவதிலும், படுப்பதிலும் விருப்பம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
சர்க்கரை வியாதியில், பல வகை உண்டு. சிலவற்றை எளிதில் குணப்படுத்த இயலும்; சில வகைகளுக்குக் கடினமான சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.
சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துவதற்கு, ஆயுர்வேத முறையில் சிறந்த சிகிச்சை அளிக்கலாம். நோயைப் பொறுத்தும், நோயாளியைப் பொறுத்தும் மருந்து வேறுபடும். எனினும், சில அருமையான, எளிதான மருந்துகள் எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும். உதாரணமாக, 'நிசாமலகீ' என்ற மருந்து, சர்க்கரை நோயாளிகளுக்குச் சர்வ சாதாரணமாகக் கொடுக்கப்படும். அதாவது மஞ்சளையும், நெல்லிக்கனியையும் சம அளவில் தூள் செய்து, தேனுடன் கலந்து கொடுக்கப்படும்.
இன்னுமொரு சிறந்த மருந்து, 'சிலாஜது!' இது, மலைகளின் பாறைகளிலிருந்து வெடித்து வரும் ஒரு பொருள். சர்க்கரை வியாதிக்கு அருமையான மருந்து இது.
நமக்குள் ஒரு பெரிய குழப்பம், சாப்பாட்டைப் பற்றித் தான். இந்த நோயாளிகள் கேழ்வரகு, பாசிப்பயறு, கம்பு, தினை, சோளம், யவம் போன்ற தானிய வகைகள், கசப்பான கீரைகள், காய்கறிகள், நாவல் பழம், தர்ப்பை சேர்த்துக் காய்ச்சிய நீர், தேன் கலந்த நீர், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், வறட்சியான பகுதிகளிலுள்ள விலங்கின் மாமிசம் போன்றவற்றை, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தயிர், பால், மாமிசம், இனிப்பு போன்ற உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். பழைய அரிசியில் வடித்த சாதத்தை உண்ண வேண்டும். பொதுவாகக் கூறினால், வறட்சியைக் கொடுப்பதும், உடலில் சிறுநீரையும், கபத்தையும் அதிகரிக்க விடாததுமான ஆகாரத்தை உட்கொள்வதும், மிகவும் குளிர்ச்சியான வீரியமுடைய ஆகாரத்தைத் தவிர்ப்பதுமே, சர்க்கரை நோயாளிக்கு உகந்தது.
பிரமேகத்திற்கு முக்கியமான சிகிச்சை, உடலுக்கு வேலை கொடுப்பது. உடல் உழைப்பை அதிகப் படுத்தினால், அது உடலில் கபத்தைக் குறைத்து, வியாதியைக் குணப்படுத்தும். இதற்கான சிறந்த வழி, யோகாசனப் பயிற்சி முறை. யோகாசன முறையில், தினந்தோறும் பயிற்சி செய்பவர்களை, இந்த நோய் தாக்காது என்பதில் சந்தேகம் இல்லை.
டாக்டர் பி.எல்.டி., கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்
63, காமராஜ் அவென்யு முதல் தெரு,
அடையாறு, சென்னை - 20.
sanjeevanifoundation@gmail.com

