PUBLISHED ON : ஜூலை 15, 2012
* இந்திரஜித், மேலவளவு: நமது சட்டைப் பையில் இடதுபுறம் உள்ள பாக்கெட்டில் மொபைல் போனை வைப்பதால் இதய பாதிப்பு வருமா?
மொபைல் போனால் ஏற்படும் கதிர்வீச்சால் இதயத்திற்கு பாதிப்பு வராது. இதய நோயாளிகள் தாராளமாக மொபைல் போனை பயன்படுத்தலாம். சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், 'பேஸ்மேக்கர்' என்னும் கருவி பொருத்தப்பட்டவர்கள், மொபைல் போனை சட்டைப் பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் போன் தொழில்நுட்பம், 'பேஸ்மேக்கருக்கு' பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே, மொபைல் போனை சட்டைப்பையில் வைப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
ஆனால், 'பேஸ்மேக்கர்' பொருத்தியவர்கள் பேசுவதற்கு மொபைல் போனை பயன்படுத்தலாம். அவர்களுக்கு, 'பேஸ்மேக்கர்' மார்பின் இடதுபுறம் பொருத்தி இருந்தால், மொபைல் போனை வலது காதிலும், 'பேஸ்மேக்கர்' மார்பின் வலதுபுறம் பொருத்தி இருந்தால், மொபைல் போனை இடது காதிலும் வைத்துப் பேச வேண்டும்.
* பி.குமரப்பன், தேனி: எனது வயது 64. கடந்த மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. தற்போது அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. இது எதனால்?
ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி உள்ளதென்றால், முதலில் அவரது ரத்த அழுத்தத்தை அறிய வேண்டும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஆகவே, முதலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதாவது, 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவிற்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகும் தலைவலி தொடர்ந்தால், வேறு ஏதாவது காரணம் உள்ளதா என கண்டறிய வேண்டும். குறிப்பாக, மூளை மற்றும் நரம்பு பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.
* சி.என்.ஆர்.கிருஷ்ணன், மதுரை: என் வயது 78. எட்டு ஆண்டுகளுக்கு முன், என் இதயத்தில், 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டது. சில நாட்களாக மாடிப்படி ஏறி இறங்கினால் மயக்கம் வருகிறது. நான் என்ன செய்வது?
'பேஸ்மேக்கர்' பொருத்தியவர்கள் அவசியம் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை, 'பேஸ்மேக்கரை' சரி பார்த்துக் கொள்வது நல்லது. இதில், 'பேஸ்மேக்கரின்' செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என அறியமுடியும். இது தவிர, ரத்தம், சிறுநீர், எக்கோ பரிசோதனையும் செய்யப்படும். எனவே, நீங்கள் உங்கள் இதய டாக்டரிடம் சென்று, இந்த பரிசோதனைகளை செய்து கொண்டு, எதனால் மயக்கம் வருகிறது என அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.
டாக்டர் விவேக்போஸ், மதுரை.