PUBLISHED ON : ஜன 03, 2016
இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்; நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால், ஆலிவ் ஆயிலைப்பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலை தூளில், எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் கறுத்துப் போகாமல் இருக்கும்.
குண்டாக இருப்பவர்கள், எடையை குறைக்க, தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில், ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால், எடை குறையும். நகங்களை வெட்டும் முன், நகங்களில் எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
