PUBLISHED ON : மே 11, 2025

மார்ச் - ஜூன் மாதம் வரை சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்கள் அதிக உஷ்ணத்துடன் இருக்கும். இதன் காரணமாக நம் உடலில் கபம் குறைந்து வாயு அதிகமாகிறது. கபம் குறைவதால், உடலில் எண்ணெய் பசை குறைந்து வறட்சியாக காணப்படுகிறது.
அதிக உஷ்ணமான கதிர்களால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, அதிக சக்தியை இழந்து அசதியுடன் காணப்படுகிறோம். கோடைக் காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய்களுக்கு, குறிப்பாக செரிமான சக்தி குறைய காரணம்.
தவிர, நீர்ச்சத்து வியர்வையாக வெளியேறுவதால் உடல் சோர்வு, தாகம், நாக்கு வறட்சி, வியர்க்குரு, சிறுநீர் குறைவாக கழிதல், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல், ஆசனவாய் கடுப்பு, கண் எரிச்சல், தோல் நோய்கள் என பல்வேறு பிரச்னைகளால் எல்லா வயதினரும் பாதிக்கப்படுகின்றனர்.
நன்கு பசித்த பின், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு சாப்பிடுவது, இனிப்பு, திரவ உணவுகள், நெய் தினசரி உணவில் சேர்ப்பதால், உடல் வறட்சியை தவிர்க்க முடியும். அதிக உடலுழைப்பு, உடற்பயிற்சியை தவிர்ப்பதும் நல்லது.
மதிய நேரத்தில் சிறிது நேரம் உறக்கம், நிழல் அதிகம் உள்ள பகுதி, நீர் நிலைக்கு அருகில் அமர்வதால் உடல் உஷ்ணம் குறையும். சந்தனம், கற்றாழை தேய்த்து வெட்டிவேர் கலந்த நீரில் குளிப்பதும் குளிர்ச்சியை தரும். வெளியில் செல்வதற்கு முன், கற்றாழையை உடலில் தேய்ப்பது சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு தரும்.
டீ, காபி குடிப்பதை தவிர்த்து, பித்தத்தை குறைக்கும் விதமாக பாலில் ஏலக்காய், சீரகம், தனியா விதை சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, கசப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். வாரம் இரு முறை உணவில் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி சேர்க்கலாம். பப்பாளி, சப்போட்டா போன்ற கல்லீரலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.
நீர்ச்சத்து அதிகரிக்க வெள்ளரி பிஞ்சு, முலாம் பழம், தர்பூசணி, மாதுளை, நெல்லி, வில்வம் பழங்களை தினமும் சாப்பிடலாம். பழச்சாறாக குடிக்காமல், முழு பழமாக சாப்பிட வேண்டும்.
அடர்த்தியான நிறங்களில் உடை அணிவதை தவிர்த்து, மெல்லிய, வெள்ளை நிற பருத்தி ஆடைகளை அணிவது, வெயிலில் இருந்து உடலை பாதுகாக்கும்.
மதிய நேரத்தில் சிறிதளவு இஞ்சி, மல்லி தழை, உப்பு சேர்த்த நீர் மோர் குடிப்பது, உஷ்ணத்தில் இருந்து பாதுகாப்பு தரும்.
வெட்டிவேர், சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீர் பருகலாம். இதனால், உடல் உள்ளுறுப்புகள் குளிர்ச்சி அடையும். அதிக உடல் சோர்வு உள்ளவர்கள், எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து பகல் நேரங்களில் பருகலாம். பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், உடலுக்கு உஷ்ணத்தை விளைவிக்கின்றன; அவற்றை தவிர்ப்பது நல்லது.
டாக்டர் சு. திவ்யஸ்ரீ,தோல் நோய் சிறப்பு மருத்துவர், உதவி பேராசிரியை, ராமா ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி, கான்பூர், உத்தர பிரதேசம்.87540 93365dhivyasundar98@gmail.com

