PUBLISHED ON : மே 04, 2025

எண்பது வயது முதியவர் எதிர்பாராத விதமாக கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்தார்; கருப்பாக மலம் கழித்தார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, எல்லா பரிசோதனையும் செய்திருக்கிறார்; எந்தக் கோளாறும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டு நாட்கள் பார்க்கலாம் என்று டாக்டர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். நிலைமை இயல்பானது.
என்ன காரணமாக இருக்கும் என்று தொடர்ந்து அவரை கண்காணித்த போது தான் உண்மை தெரிந்தது.
இருமல், தொண்டை கரகரப்பு வந்தாலும், இருமல் மருந்தை வாயில் ஊற்றிக் கொள்கிறார். இப்படி ஒரு நாளில் பல முறை செய்வது தான் பிரச்னைக்கு காரணம்.
இளம் வயதினர் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது. இருமல் மருந்து என்பது தற்காலிக தீர்வு. இந்த மருந்தில் 'ஆன்டி ஹிஸ்டமைன்' என்ற ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும் வேதிப்பொருள் உள்ளது. இது, துாக்க கலக்கத்தை தரும்.
சிலருக்கு நுரையீரலில் சளி இருக்கும்; வெளியில் வராது. சிலருக்கு வறட்டு இருமலால் சளி வெளியில் வராது.
சளி வெளியில் வருவதற்காகவும் இதை உபயோகிக்கிறோம். இருமல் மருந்தில் உள்ள கோடின் என்ற வேதிப்பொருள், உடல் வலியை குறைக்கும். இதனுடன் மயக்க மருந்தும் சிறிதளவு கலந்திருக்கும்.
அதனால், இருமல் மருந்தை குடித்தவுடன் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை போன்ற உணர்வு வரும். அதே நேரத்தில் இது மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
டெக்ஸ்ட்ரோமெட்டோபின் என்ற இன்னொரு வேதிப்பொருள், துாக்கம், மயக்கம், கவனமின்மை, நினைவுத்திறன் குறைபாட்டை ஏற்படுத்தும். இளம் வயதினர் பாட்டில் பாட்டிலாக வாங்கி இதை குடிக்கின்றனர். மதுவை போன்று இருமல் மருந்துக்கும் அடிமையாகி விடுகின்றனர். மதுவில் கிடைக்கும் போதை இதிலும் கிடைக்கிறது.
இதனால் தான், நம் நாட்டில் டாக்டர் பரிந்துரை இல்லாமல், எந்த இருமல் மருந்தையும் விற்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
ஒரு நாளைக்கு 5 மி., குடிக்கலாம் என்றால், யாரும் அளந்து குடிப்பதில்லை. அப்படியே பாட்டிலோடு வாயில் ஊற்றுகின்றனர். தினசரி பழக்கத்தால் நாளடைவில் பக்க விளைவுகள் வர ஆரம்பிக்கும். ஒரே நாளில், ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் என்று குடித்து மூச்சு திணறல், மயக்கம், கோமா நிலைக்கு செல்லக்கூடிய அபாயத்தில் வருபவர்களும் உண்டு.
இருமல், சளியுடன் காய்ச்சலும் வருவதால், பல இருமல் மருந்துகளில் பாராசிட்டமால் மருந்தையும் கலக்குகின்றனர். எவ்வளவு குடிக்கிறோம் என்பது தெரியாமல் குடிப்பதால், கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஒவ்வொரு ஸ்பூன் இருமல் மருந்திலும், ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்திருக்கும். குடித்தவுடன் ரத்த சர்க்கரையின் அளவு உயரும். சிலருக்கு குமட்டல், செரிமானக் கோளாறு வரலாம்.
இருமல் மருந்தை குடித்து, துாக்க கலக்கத்துடன் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களும் உண்டு. அதிகப்படியாக இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால், முதியவர்களுக்கு இருமல் வரலாம்.
இருமல் மருந்து குடித்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும் போது, அவ்வப்போது குடித்து சற்று நிவாரணம் கிடைத்ததும், அவ்வப்போது குடிக்கின்றனர்.
முழுமையாக இதற்கு அடிமையாகி, மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களும் உள்ளனர்.
கிளனிகல்ஸ் குளோபல் மருத்துவமனை, சென்னை& 79967 89196 ) info@gleneeaglesglobalhospitals.com

