PUBLISHED ON : மே 04, 2025

கருப்பப்பை தொடர்பான பிரச்னை இன்று பெண்களுக்கு பெரிய அளவில் இருக்கிறது. இது, 13 - 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மாற்றம். குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவுகளில் பாரம்பரியமான உணவுகளை தவிர்த்து, கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளே இன்று பிரதானமாக உள்ளது.
அதிலும், 10 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் அதிகமாகி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் உடலுழைப்பும் கிடையாது.
உடலில் கொழுப்பு அதிகம் சேரும் போது, அது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு துாண்டும்.
இந்த ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால் மட்டுமே, கரு முட்டை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாதவிடாய் வரும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பில், ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகும் போது, கர்ப்பப் பை தொடர்பான பல பிரச்னைகள் வருகின்றன.
இவை தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பா மற்றும் 'கப்'களில் சூடான உணவுகளை வைக்கும் போது ஏற்படும் நச்சு, ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் கோழி, மாடு மற்றும் இவற்றின் பால், இறைச்சி, முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு உட்பட, பல்வேறு விதமாக உணவுகளில் சேரும் விஷம், பொதுவாக உடல் நலத்தை பாதிக்கிறது என்றாலும், பெண்கள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உணவுகள் வழியே பிளாஸ்டிக், கெமிக்கல்கள் உடலில் சேரும் போது, ஜீனோ ஈஸ்ட்ரோஜென்னாக மாறி உடலில் சேர்கிறது. இதுவும் கர்ப்பப் பையின் உள்ளடுக்கான எண்டோமெட்ரியத்தில், அதிகப்படியான வளர்ச்சிக்கு வழி செய்கிறது.
sakshaayaan@gmail.com

