தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி... கொஞ்சம் கேளு! - ஓடி விளையாடு; நீ ஓய்ந்திருக்கலாகாது!

குண்டு மல்லி... கொஞ்சம் கேளு! - ஓடி விளையாடு; நீ ஓய்ந்திருக்கலாகாது!

குண்டு மல்லி... கொஞ்சம் கேளு! - ஓடி விளையாடு; நீ ஓய்ந்திருக்கலாகாது!


PUBLISHED ON : பிப் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் குழந்தைகள் இல்லை என்பதை, இரண்டு விதமாக பார்க்கலாம். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல், குறைவான உடல் எடையுடன் இருந்தால், அது ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம். அதே நேரத்தில், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை விடவும் அதிகமாக இருந்தால், அது உடல் பருமன் கோளாறு.

இருபது ஆண்டுகளுக்கு முன், ஊட்டச்சத்து குறைபாடு பெரிய பிரச்னையாக இருந்தது; தற்போது, நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. குழந்தைப் பருவத்து உடல் பருமன் என்பது, கவலைக்குரிய பிரச்னையாக இருக்கிறது. சமீபத்தில், தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வே இதற்கு உதாரணம்.

மொபைல் போன்



குழந்தைகளுக்கு முறையான உடற்பயிற்சி இல்லை... பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர்... பிரச்னைக்கு இது தான் முக்கிய காரணம் என்பதை, எவ்வளவு தான் வலியுறுத்தி சொன்னாலும், பெரும்பாலும், வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த, மிகக் குறைந்த சதவீதத்தினரே முன் வருகின்றனர்.

பாரதியார் அன்றே பாடினார்... 'ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...' என்று! நேர்மறை, எதிர்மறை இரண்டு விஷயங்களையும் இந்த ஒரே வரியில் சொல்லியிருக்கிறார் பாரதியார். ஓடி விளையாடு பாப்பா என்பது நேர்மறை, ஓய்ந்திருக்கலாகாது என்பது எதிர்மறை. ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால், இப்படி இரண்டு விதமாகவும் சொல்வது வழக்கம்.'ஸ்கிப்பிங்' போடுவது, சைக்கிள் ஓட்டுவது, நொண்டி விளையாடுவது, ஓடி விளையாடுவது எதையும் குழந்தைகள் செய்வதே இல்லை.

வித்தியாசமே இல்லாமல், எல்லாக் குழந்தைகளுக்கும் கிரிக்கெட் பிடிக்கிறது. ஆனால், கிரிக்கெட்டிலும், சிலர் தான் ஓடுகின்றனர்; மற்றவர்கள் நிற்கின்றனர் அல்லது பெவிலியனில் உட்கார்ந்து இருக்கின்றனர். கால்பந்து, கபடி போன்ற விளையாட்டில், எல்லாரும் ஓட வேண்டியிருக்கும். இவற்றை யாரும் விளையாடுவதில்லை.

மொபைல் போன், 'டிவி' இருப்பதால், 'பொடேட்டோ கவுச்' என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போல, உட்கார்ந்து, எதையாவது பார்த்தபடியே சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கமாகி விட்டது.ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, திரும்ப திரும்ப பயன்படுத்தியே, பாக்கெட்டில் அடைக்கப்படும் தின்பண்டங்களை தயாரிக்கின்றனர். நீண்ட நாட்களாக ஒரு பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், 'டிரான்ஸ் பேட்டி ஆசிட்' எனப்படும், வேதி மாற்ற அமிலம் தேவை. மீண்டும் மீண்டும் சூடு செய்யப்படும் எண்ணெயில், இது அதிகம் உள்ளது.

எல்லா வகை பிஸ்கெட்டிலும் இந்த வேதிப் பெருள் இருப்பதாக கூறப்படுகிறது. பாக்கெட்டில் அடைத்த உணவு என்றில்லை; வெளியில் வாங்கி சாப்பிடும் வடை, பஜ்ஜி போன்ற, வர்த்தக ரீதியில் தயாராகும் பண்டங்களும், விலை குறைவாக இருக்கிறது என்பதால், பெரும்பாலும், பாம் ஆயில் எனப்படும் பனையிலிருந்து கிடைக்கும் எண்ணெயில் தயாராகிறது. இதிலும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது.

உடற்பயிற்சி



சாதாரணமான வெப்பநிலையில், உறையாத கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை, உறையும் தன்மை உடையதால், கெட்ட கொழுப்பு உள்ளவை. இவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். கெட்ட கொழுப்பு, அதிக அளவில் உடலில் சேரும் போது, ஒரே இடத்தில் உறைந்து, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். நல்ல கொழுப்பில், கரையும் தன்மை இருப்பதால், ஒரே இடத்தில் தங்காது; அடைப்பை ஏற்படுத்தாது.சமீபத்தில் வரும் ஆய்வுகள், பசு நெய் சாப்பிடுவது நல்லது என்று சொல்கின்றன.

எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.குழந்தை பருவத்தில் உடல் பருமனுடன் இருந்தால், பெண் குழந்தைகளுக்கு, வயதிற்கு வந்ததும், கருக்குழாயில் நீர்க்கட்டிகள் வரும். திருமணத்திற்கு பின், குழந்தையின்மை பிரச்னை ஏற்படும். பொதுவாக, குழந்தை பருவத்தில் இருந்தே, உடல் பருமனுடன் இருந்தால், 30 வயதிலேயே, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, கொழுப்பு போன்ற பிரச்னைகள் வரும்.தசைகளுக்கு போதுமான அளவு பயிற்சி கொடுத்தால் தான், தசைகள் முழுமையான வளர்ச்சி பெறும். ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தும் போது தான், அதன் செயல் திறன் நன்றாக இருக்கும்.

உடல் உறுப்புகளுக்கும் இது பொருந்தும். தொழிலாளர்களை பார்த்தாலே இது புரியும். கைகள், கால்கள் என்று எந்த உறுப்பிற்கு தொடர்ந்து வேலை கொடுக்கின்றனரோ, அந்த உறுப்பு பலமாக இருக்கும். போலியோ பாதித்தவர்களால், கால்களை பயன்படுத்த இயலாது. அவர்கள் கைகளை வைத்து, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவர்; அதனால், அவர்களுக்கு கைகள் வலிமையாக இருக்கும். உட்கார்ந்தே வேலை செய்பவர்களின் கை, கால்கள் பலமிழந்து இருக்கும்.

உழைக்கும் போது, தசைகள் எல்லாம் நன்கு வேலை செய்து, வலிமையாகின்றன.குழந்தைகள் உடல் பயிற்சி இல்லாமல் இருப்பதால், அவர்களின் உடல் வலிமை குறைவாக உள்ளது.

ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை என்று, குழந்தைகளை பழக்கி, ஆரோக்கியம் இல்லாத சமுதாயத்தையே நாம் உருவாக்குகிறோம். எதிர்காலத்தில், வாழ்க்கை நடைமுறை, உணவு, உடற்பயிற்சி இவை எல்லாவற்றிலும் ஆரோக்கியம் இல்லாத நிலை ஏற்படும். உடல், மனநிலையில் ஆரோக்கியம் இருப்பது தான், உண்மையான செல்வம் என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

புள்ளி விபரம்



'ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ஸ்கூல்' என்ற தன்னார்வ நிறுவனம், நாடு முழுவதும், 250 நகரங்களில் உள்ள, 364 பள்ளிகளில் படிக்கும், 7 -17 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல் வலிமை, தசைகளின் வலிமை, கை, கால்களின் வலிமை, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்கின்றனரா என்ற ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், 14 லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 56 சதவீதம் குழந்தைகள், போதுமான உடல் வலிமையுடன் இல்லாமல், அதிகப்படியான உடல் எடையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள பள்ளி களைப் பொறுத்தவரை, 49 சதவீத ஆண் குழந்தைகளும், 46 சதவீத பெண் குழந்தைகளும், போதுமான உடல் வலிமையுடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

தனியார் பள்ளி மாணவர்களில், 47 சதவீதம் பேரும் அரசு பள்ளி மாணவர்களில், 37 சதவீதம் பேரும் ஆரோக்கியமான உடல் வலிமையுடன் இருக்கின்றனர்.ஆனால், தேசிய அளவில், இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை, ஆரோக்கியம் இல்லாமல், உடல் பருமனுடன் இருக்கின்றனர். இவர்களில் சிலர், கை, கால்களில் வலிமை இழந்து, சிலர், வயிற்றுப் பகுதியில் வலிமை இல்லாமல் உள்ளனர்.

மூன்றில் ஒரு குழந்தைக்கு, தசைகளில் தளர்வு இல்லை. மூன்றில் இருவருக்கு, இடுப்பு மற்றும் கால்களில் வலிமை இல்லை.மொத்தத்தில், 56 சதவீதம் பேர், உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். 55 சதவீதம் பேருக்கு உடம்பின் மேல் பகுதியில் வலிமை இல்லை. 63 சதவீதம் குழந்தைகளுக்கு, உடலின் கீழ் பகுதியில் வலிமை இல்லாமல் உள்ளனர்.

டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி,

தலைவர், பொது மருத்துவப் பிரிவு,

மீனாட்சி மிஷன் மருத்துவமனை,

மதுரை

0452 4263000


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us