தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இளம் வயதினரையும் தாக்குது மார்பக புற்றுநோய்

இளம் வயதினரையும் தாக்குது மார்பக புற்றுநோய்

இளம் வயதினரையும் தாக்குது மார்பக புற்றுநோய்


PUBLISHED ON : அக் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில், குணப்படுத்துவது கடினம். இது ஆண்களையும் பாதிக்கும்

1. ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் ஏன்?

மார்பக புற்றுநோய், உலகளவில், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில், முதன்மையான இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் உலக அளவில், 14 மில்லியன் பெண்களும்,

இந்தியாவில், 1.15 லட்சம் பெண்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு, 72 ஆயிரத்து 500 பெண்களும், இந்திய அளவில், 53 ஆயிரத்து 500 பேரும், மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர். அதாவது, 73 சதவீதம். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு இருக்கும் அளவுக்கு, மார்பக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு இல்லை. எனவே, அதற்கான அவசியம் ஏற்பட்டு உள்ளது.

2. மார்பக புற்றுநோய் வர காரணம் என்ன?

குடும்பத்தில், முன்னோரில், ஏதேனும் ஒரு நபர், மார்பக புற்றுநோயால் பாதிப்பட்டிருத்தல், குழந்தை பேரின்மை இல்லாத நிலை, 12 வயதுக்கு முன் மாதவிடாய் தொடங்குதல், 54 வயதிற்கு பிறகும் மாதவிடாய் நிற்காதது, மரபணு மாற்றங்கள், கதிர்வீச்சுக்கு உட்படுதல் போன்றவற்றால், மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது.

3. எந்த வயதில் இந்த நோய் பாதிக்கும்? ஆண்களையும் பாதிக்குமா?

பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு வரும். தற்போது, இளம் வயது பெண்களுக்கு, குறிப்பாக, 30 வயதிலேயே பாதிப்பு வருகிறது. ஆண்களுக்கு வராது என்று கூற முடியாது. ஒரு சதவீத ஆண்களுக்கு, இந்த நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

4. நோய்க்கான அறிகுறிகள் என்ன? பாதிப்பை உணர முடியுமா?

ஆரம்ப நிலையில், மார்பக புற்றுநோய், எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. ஆனால், நோய் வளர வளர, மார்பகத்தின் தோற்றம் மாறுபடுவதும், தொடுதலின்போது வித்தியாசத்தையும் உணர முடியும். தாக்கம் அதிகரிக்கும்போது, மார்பகம், அக்குள் களில் வீக்கம் ஏற்படுதல், மார்பின் மேலுள்ள தோலில் ஏற்படும் மாற்றங்கள், காம்புகளில் ரத்தத்துடன் கூடிய திரவம் கசிதல், சாதாரண திரவம் வெளியேறுதல், மார்பு காம்புகள் உட்புறமாக திரும்பிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

5. எந்த மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?

மார்பக புற்றுநோய் கட்டிகளை, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றலாம், கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. புற்று நோயை மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறையே கீமோதெரபி எனப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின், 21 நாட்களுக்கு ஒருமுறை, 6 முதல் 8 தவணைகளில், கீமோதெரபி தரப்படும்.

6. மார்பக புற்றுநோயை, முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில், குணப்படுத்துவது கடினம்.

7. கீமோ தெரபியால் பக்க விளைவுகள் அதிகம் எனக் கூறப்படுகிறதே?

கீமோ தெரபியின்போது, வாந்தி, முடி உதிர்தல், அசதி மற்றும் ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். வாந்தி, அசதி போன்றவை, ஓரிரு நாட்களில் நின்றுவிடும். கீமோ தெரபி முடிந்ததும், முடி உதிர்வதும் நின்றுவிடும். யாரும் பயப்பட வேண்டாம்; முடியை விட உயிர் முக்கியம்.

8. தற்காத்துக் கொள்ள என்ன வழி?

ஆண்டுதோறும் உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தம் சம்பந்தமான உறவினருக்கு, மார்பக புற்று நோய் இருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனை அவசியம்.குடும்பத்தில், பலருக்கு புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள், எச்சரிக்கையுடன் டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.

மாதவிடாய் அதிகப்படியாக போனால் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவைத் தவிர்ப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மன அழுத்தத்தில் சிக்கிவிடக் கூடாது. அதற்கேற்ப, வேலைகளை திட்டமிடுதல், எளிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம், எளிய உடற்பயிற்சிகள் செய்வதும் நல்லது.

டாக்டர் கே.கலைச்செல்வி,

புற்றுநோய் மருந்தியல் துறைத் தலைவர்,

சென்னை அரசு பொது மருத்துவமனை.


செய்ய வேண்டிய பரிசோதனைகள்?

சுய பரிசோதனை இதன்படி, 20 வயதுக்குட்பட்ட பெண்கள், மாதம் ஒரு முறை, தங்கள் மார்பகங்களை தாங்களே, கையால் அழுத்திப் பார்த்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சொன்னது போல், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், உடனே டாக்டரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேமோகிராம் மார்பக திசுக்களை ஆராய, மார்பகத்தை, எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் பரிசோதிப்பதே, மேமோகிராம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், ஆரம்ப நிலை

மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை, மேமோகிராம் பரிசோதனை செய்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us