'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
PUBLISHED ON : ஆக 08, 2020

'முழுமையாக தாய்ப்பால் அருந்திய குழந்தைகளே நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். குழந்தைகளை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முக்கிய தடுப்பூசி தாய்ப்பாலே' என்கிறார் சரண் மருத்துவமனையின் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு நிபுணர் மணிமேகலை.
தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., முதல் வாரம் தாய்ப்பால் வார விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, போயம்பாளையம் சரண் மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
டாக்டர் மணிமேகலை கூறியதாவது:குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இருந்து தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக இருக்க வேண்டும். அதன்பிறகு, 2 வயது வரை திட உணவோடு சேர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதுவே குழந்தைகளுக்கான முக்கிய நோய்த்தடுப்பு அரண்.
குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, கால்சியம் சத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு மார்ப்பு மற்றும் சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்ததும், தேன், சர்க்கரை தண்ணீர் கொடுக்க கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

