PUBLISHED ON : ஆக 07, 2020

''பெரும்பாலானவர்கள் முழுமையாக சுவாசிப்பதில்லை. அதனால் உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடலில் உயிர் சக்தியும் குறையும்,'' என்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் எமி.
இயற்கை மருத்துவத்தின்படி, அல்சர் பிரச்னை ஏன் ஏற்படுகிறது?
தினசரி வாழ்க்கையில் கோபம், வெறுப்பு, குழப்பமான மனநிலை, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, சரியான நேரத்துக்கு சாப்பிடாமல், துாங்காமல் இருப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளால், வயிற்றில் ஆசிட் அதிகமாகி, குடலில் புண்(அல்சர்) ஏற்படுகிறது. பாஸ்ட் புட் முக்கிய காரணம். இதனால் செரிமான உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.
அல்சரை குணமாக்க, இயற்கை மருத்துவத்தில் என்ன தீர்வு இருக்கிறது?
அல்சர் குணமாக, காலையில் வெள்ளை பூசணி ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம். முருங்கை கீரையை வேக வைத்து அரைத்து, தயிரில் கலந்து சாப்பிடலாம். வஜ்ஜிராசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இன்று பலர் ஜீரண பாதிப்பால், அவதிப்படுவது ஏன்?
இட்லி மாவை நான்கு நாட்களுக்கு மேல், சிலர் பிரிஜ்ஜில் வைத்து, டிபன் செய்கின்றனர். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறியை, பிரிஜ்ஜில் வைத்து சமைக்கின்றனர். பாலிஷ் செய்த அரிசி, பிராசஸ் செய்த கோதுமை மாவு... இப்படி எல்லாமே பாக்கெட் ஐட்டங்களைதான் உணவுக்கு பயன்படுத்துகிறோம். இதையேதான் ஓட்டல்களிலும் செய்கின்றனர். இதை சாப்பிடுவதால் வயிற்றின் ஜீரணத்தன்மை கெடுகிறது. அல்சர், மூட்டுவலி எல்லாம் வந்து விடும். உணவு பொருட்கள் இயற்கை தன்மையில் இருக்கும் போதுதான், உணவு தயாரித்து சாப்பிட வேண்டும்.
பழங்கள் சாப்பிடுவதால், உடலில் குளூக்கோஸ் அளவு அதிகரிக்குமா?
கொழுப்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இருப்பது போல், சர்க்கரையிலும் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை உள்ளது. பழங்களில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரை, அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு கூடும். அதனால் பெரிய பாதிப்பு எதுவும் வராது. ஆனால், அவர்கள் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?
உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் நம் மனநிலையையும், உடல் நிலையையும் தீர்மானிக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கும் போது, உடலில் உண்டாகும் ஹார்மோன்கள் உடலை பாதிப்பதில்லை. சோகமாகவும், கோபமாகவும் இருக்கும் போது, உண்டாகும் ஹார்மோன்கள் பாதிக்கிறது. கெட்ட ஹார்மோன்களால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
யோகா பயிற்சி செய்யும் போது, மனநிலை சீராகி உடல் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மூச்சு பயிற்சி செய்வதால், கிடைக்கும் நன்மைகள் என்ன?
பெரும்பாலானவர்கள் முழுமையாக சுவாசிப்பதில்லை. அதனால் உடலுக்குள் முழுமையாக ஆக்சிஜன் செல்வதில்லை. குறிப்பாக, கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறைவு. ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடலில் உயிர் சக்தி குறையும். இயற்கை உணவும், யோகா பயிற்சியும் உயிர் சக்தியை அதிகரிக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

