PUBLISHED ON : ஜூலை 24, 2022

தலைவலியில் நிறைய வகைகள் உள்ளன. 50 - 60 வகையான தலைவலிகள் இருக்கின்றன. மன அழுத்தம் அதிகமானால், போதுமான துாக்கம் இல்லாவிட்டால், சளி பிடித்தால், டென்ஷன் வந்தால், மாதவிடாய் வருவதற்கு முன், பின் வரும் தலைவலிகள் பொதுவானவை. 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி, குறிப்பிட்ட பருவ நிலையில், சூழ்நிலையில் சில பேருக்கு வரும்.
வழக்கமான வலியாக இருந்தால், மாத்திரை போட்டால் சரியாகும். தாங்க முடியாமல் வலி இருந்தால், சிகிச்சை பெற்று தான் ஆக வேண்டும். இது, பெண்களுக்கு அதிகம் பாதிக்கும். எந்த தலைவலியாக இருந்தாலும், அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. தலைவலியோடு எந்த வேலையும் செய்ய முடியாது.
சைனஸ் தலைவலி
தலையின் எலும்புக்கு உள்ளே, இரண்டு பக்கத்திலும் தலா நான்கு என்று எட்டு சைனஸ்கள் அதாவது காற்று பைகள் உள்ளன. இவை, தலையில் கனத்தை குறைக்கவும், பேசும் போது குரல் கணீரென்று வெளிப்படவும், வேறு பல காரணங்களுக்காகவும் இயற்கையிலேயே அமைந்தன.
இவற்றில் சளி அடைத்துக் கொண்டால் தலைவலி வரும். மூச்சு குழலில், உணவுக் குழாயில் எப்போதும் ஒரு திரவம் சுரக்கும். இந்த திரவம் அதிகமானால், அதை அலர்ஜி என்றும், இந்த திரவத்தில் தொற்று ஏற்பட்டால் சளி என்றும் சொல்வோம்.
இதில் அனைத்திலுமோ அல்லது ஒன்றிரண்டு சைனசிலோ சளி அடைபடலாம். இதனாலோ, வேறு ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலோ தலைவலி வரலாம். சிலருக்கு காலை எழுந்ததும் வரலாம். சிலருக்கு மாலையில் வரலாம். சைனசில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு ஏற்ப தலைவலி மாறுபடலாம். சைனஸ் பிரச்னைகளால் வரும் தலைவலிக்கு காது, மூக்கு, தொண்டையான, இ.என்.டி., டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
மூளையில் கட்டி, ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் தலைவலி வரும். அதற்கு நரம்பியல் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கட்டியின் அளவு ஒரு அளவுக்கு மேல் பெரிதானால், தலைவலி தாங்க முடியாமல் இருக்கும். இதற்கு காரணம், தலைக்குள் மூளைக்கு மட்டுமே இடம் உள்ளது; வேறு எதுவும் இருக்க முடியாது.
புதிதாக கட்டி வளர்ந்தால், அதற்கு இருக்க இடம் கிடைக்காது. கட்டியுடன், வீக்கமும் சேர்ந்தே வரும். இதனால் ஏற்படும் அழுத்தத்தால் தலைவலி வருகிறது. இது போன்ற தலைவலி அதிகாலையில், 2:00 - 3:00 மணிக்கு வரும். துாக்கத்தில் தலைவலியுடன் எழுந்திருப்பர்.
இந்த நேரத்தில் வரும் தலைவலிக்கு வேறு காரணங்கள் இருந்தாலும், மூளையில் கட்டி இருப்பதும் ஒரு காரணம். வலியுடன் சேர்ந்து, வாந்தி வரும். வாந்தி எடுத்தவுடன் தலைவலி குறையும். தலைவலி அதிகமாக இருக்கும் சமயங்களில், கண்கள் மங்கலாகத் தெரியலாம். சிலருக்கு முழுமையாக பார்வை மறைக்கலாம்.
மூளையில் இரண்டு வகை கட்டிகள் வரலாம். சாதாரண கட்டியை அகற்றி விட்டால் பிரச்னை இருக்காது. கேன்சர் கட்டியை அகற்றினாலும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது தவிர, மூளை நரம்புகளில் ஏற்படும் ரத்தக் கசிவாலும் தலைவலி வரும். ரத்த குழாய் வீங்கி பட்டென்று வெடித்து விடும்; இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இது மாதிரியான நிலையில் மூன்றில் ஒரு பகுதியினர், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே உயிரிழப்பதும் உண்டு. 'இது போல ஒரு வலியை என் வாழ்க்கையில் அனுபவித்தது இல்லை' என்கிற அளவுக்கு மோசமாக இருக்கும்.
ஒரு வாரம் அல்லது மூன்று நாட்களுக்கு முன், இதற்கான அறிகுறிகளாக தலைவலி மிதமாக வரலாம்; வராமலும் போகலாம். இந்த நிலையில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும்.
சரியான நேரத்தில் சிகிச்சை தந்து உயிரைக் காப்பாற்றி விட்டால், ரத்தக் கசிவு நின்று விடும். ஆனால், சிறிது காலத்திற்கு பின் மீண்டும் ரத்தக் கசிவு வரலாம். ரத்த அழுத்தம் அதிகரிப்பு, கண்களில் நீர் வடியும் தலைவலி என்று, என்ன காரணத்தால் தலைவலி வருகிறதோ, அதற்கான மருந்துகள் சாப்பிட்டால் சரியாகி விடும். தலைவலி என்றில்லை.
உடலில் எங்க வலி வந்தாலும், உள்ளே ஏதோ சரியில்லை என்பதற்கான எச்சரிக்கை அறிகுறி. தோளில், இடுப்பில் வலி வந்தாலும், ஏன் வலிக்குது என்று கவனிப்போம். வலி வந்தால் கவனிக்க வேண்டும் என்பது இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட நியதி.
வலியை உணர்வதற்கான நரம்புகள் உள்ளன. நரம்பு விரியும் போது தலைவலி வருகிறது. தலைக்கு போகும் நரம்புகள் விரிவதால் வருவது மைக்ரேன் தலைவலி. காபி குடித்தால், ரத்தக் குழாய் சுருங்கும். எனவே, காபி குடித்த சிறிது நேரத்தில் தலைவலி சரியாகும். வலி நரம்புகள் துாண்டும் போது தலைவலியாக தெரியும்.
டாக்டர் விஜய் சங்கரன்,
நரம்பியல் சிறப்பு மருத்துவர்,
சென்னை.
