PUBLISHED ON : ஜூன் 18, 2017

கொண்டைக் கடலை மசாலா அல்லது சன்னா மசாலா... இதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இது ஒரு வட இந்திய உணவாக இருந்தாலும், பேதமின்றி அனைவராலும் உண்ணப்படுகிறது.
வெறும் சுவை என்பதை காட்டிலும் கொண்டைக் கடலையில் நிறைந்துள்ள ஊட்டச் சத்துக்கள் வியக்க வைக்கிறது. கொண்டை கடலையில், ஊட்டச் சத்து நிறைந்திருக்கிறது. இது, பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் உள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் கொண்டைக் கடலையில், 'கிளைசிமிக் இன்டெக்ஸ்' சத்து குறைவாக இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது. இதில் நார்ச் சத்து, அதிகப் படியான புரோட்டீன், இரும்புச்சத்துகளும் உள்ளன.
ஹார்மோன் ஏற்றத் தாழ்வை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. ஹார்மோன் குறைபாடுள்ள பெண்கள், கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் ஆற்றலும், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சமாதானப்படுத்தும் ஆற்றலும் கொண்டை கடலைக்கு உண்டு.
கொண்டைக் கடலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தும் கூட. பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்து இருப்பதால், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இதயம் ஆரோக்கியம் பெறும் என்று, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மக்னீசியம், போலேட் போன்றவை ரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ரா லை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

