PUBLISHED ON : ஜூன் 18, 2017

நோய்களுக்கு மூல காரணமாக உள்ள அதிகளவு கொழுப்பை, அன்றாட உணவில் செய்யும், சில வகை மாற்றங்களால் குறைக்க முடியும். பால் பொருட்கள், அதிகளவு கால்சியம் சத்துள்ள பொருட்களை உண்ணுவதால், உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கலாம். கால்சியம் சத்துக்கு, உடலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி யை குறைக்கும்.
ஆப்பிள், உடலில் கொழுப்புச்சத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஆப்பிள் தோலில் காணப்படும், 'பெக்டின்' என்ற உட்பொருள், உணவிலிருந்து கொழுப்பு உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துகிறது. அதோடு நீர் தன்மையால், கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.
வால்நட்ஸ்களில், ஒமேகா 3 உடலில் உள்ள கொழுப்புச்சத்தை கரைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது. ஆரோக்கியமான முறையில், உடல் எடையை குறைக்க, வால் நட்ஸ்கள் உதவுகின்றன.
பீன்ஸ், குறைந்த கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து கொண்டது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த புரதச்சத்து உணவாகும். ஓட்ஸ் உணவு, மெதுவாக செரிமானம் ஆவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பை கரைய வைக்கிறது. ஓட்ஸ் மெதுவாக செரிமானமாகும் தன்மையினால், உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு, இது பொருத்தமான உணவாகும்.
கிரீன் டீ, உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவை. தினமும் ஒன்று முதல், இரண்டு டம்ளர் கிரீன் டீ குடிக்கலாம். கொழுப்பு கரைப்புக்கு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். பொதுவாக அவரவர் உடலின் எடை, கொழுப்பு ஆகியவற்றை கண்டறிந்து, தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, உடல் எடையை குறைக்கலாம்.

