PUBLISHED ON : அக் 14, 2018
* மழை காலத்தில் சளிப்பிடிப்பது ஏன்?
மழை காலங்களில் மழை பெய்யும் போது குடிநீரும், அசுத்தமான நீரும் கலக்க வாய்ப்புள்ளது. தேங்கி இருக்கும் நீரில் கொசுக்கள், ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும். இதனால் கொசுக்கள், ஈக்களால் நோய்கள் அதிகமாக வரும். தேங்கி இருக்கும் நீரினில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் தங்க வசதி உள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் தான் மழை காலத்தில் மூக்கடைப்பு, சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. வயிற்று போக்கு, டைபாய்டு, காலரா போன்றவையும் வரும். மழை காலத்தில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலமும், உண்ணும் உணவுகள் மற்றும் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதன் மூலமும் மழைக்கால நோய்களை வராமல் தடுக்கலாம். முக்கியமாக தெருவில் நாம் நடந்து போகும் போது வேகமாக செல்லும் வாகனங்களால் தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீர் சிதறி நம் உடல், கண், வாயில் தெளிக்க வாய்ப்புள்ளது. எனவே பெரும்பாலான நேரங்களில் ஏதாவது ஒரு வேலையின் காரணமாக, அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம். வாகனங்களால் நம் உடல் மீது தெருத்தண்ணீர் பட்டு விட்டால் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வேண்டும்.
* மழை காலத்தில் குழந்தை பராமரிப்பு எப்படி?
குழந்தைகளை மழையில் நனையாமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் குடிநீர் ,பால், பால் பவுடர் போன்ற உணவுகளுக்கு கொதிக்க வைத்து பின் இளஞ்சூடான தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகளை குறைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் பள்ளி செல்லும் போது தகுந்த காலணி மற்றும் ஷூக்களை அணிவித்து சாக்ஸ், ஷூக்களில் ஈரம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மழை காலத்தில் ஷூவில் தேள் மற்றும் சின்ன சின்ன பூச்சிகள் உள்ளே இருக்க வாய்ப்புண்டு. எனவே, ஷூக்களை அணிவதற்கு முன் அதை தரையில் தட்டியும், ஷூக்களின் உட்புறத்தை நன்றாக கவனிக்க வேண்டும். அதன் பின்பே குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். குடையை பயன்படுத்தும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். முக்கியமாக சுகாதாரமற்ற மிட்டாய்கள், ஈ மொய்த்த பண்டங்கள், மிட்டாய்கள் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.
* மழை காலத்தில் முதியோர் பராமரிப்பு எப்படி?
பெரும்பாலும் முதியோர்களுக்கு மூட்டு தேய்மானம் அதிகமாக இருக்கும். எனவே, ஈரத்தில் நடக்கும் போது அவர்கள் தவறி விழ வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் தோல் வியாதிகளும் அதிகமாக வர வாய்ப்புள்ளது. முதியோர் அதிக மழையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குளிர் தாங்கும் தன்மை வயது முதிர்ந்தோருக்கு குறைவாக இருக்கும். சுத்தமான தகுந்த போர்வைகள் பயன்படுத்த வேண்டும். கண் பார்வை குறைவாக இருப்பவர்கள் தெருவில் நடந்து செல்லும்போது சில நேரங்களில் குழிக்குள் விழ வாய்ப்புள்ளது. எனவே, மேடு பள்ளங்களை பார்த்து நடக்க வேண்டும். கைத்தடி பயன்படுத்த முதியோர் பலர் வெட்கப்படுகின்றனர். கைத்தடியை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை.
* மழை கால பொது அறிவுரை?
பொதுவாக மாடியில் ஏறி நின்று மழையில் நனையக்கூடாது. மாடியில் நிற்கும் போது மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் படிக்கட்டில் நடக்கும் போது ஈரம் இருக்க வாய்ப்புண்டு. எனவே, மாடியில் ஏறும் போது சற்று கவனமாக ஏற வேண்டும். காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர் ஷூ போன்ற சரியான காலணிகளை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். சில மின் ஒயர்கள் முதல் நாள் இரவு பெய்த மழையில் அறுந்து கிடக்கலாம். மரம், செடிகள் மின் ஒயரில் விழுந்து கிடக்கலாம். எனவே ஜாக்கிரதையாக நடை பயிற்சி செய்ய வேண்டும்.
- டாக்டர் ஜெ.சங்குமணி
சர்க்கரை நோய் நிபுணர், மதுரை.
sangudr@yahoo.co.in
