PUBLISHED ON : மார் 03, 2019

* குழந்தைக்கு பேசும் திறனை வளர்ப்பது எப்படி?
குழந்தைகளிடம் பேசுவதற்கு பிரத்யேகமாக நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் டி.வி., அலைபேசி, வானொலி போன்றவ்ற்றால் கவனச் சிதறல் ஏற்படும்.எனவே, குழந்தையிடம் பேசும்போது இவை போன்ற பொழுது போக்கு சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளிடம் அன்பாக, இனிமையாக, அமைதியாக, நல்ல கதைகள், கருத்துக்களை சொல்வதால் பேச்சுத்திறனை படிப்படியாக வளர்க்க முடியும்.
* நான் எனது 12 மாத குழந்தைக்கு உணவு ஊட்டும் போது அலைபேசி, டி.வியை காண்பித்து உணவு ஊட்டுகிறேன். மேலும் என் குழந்தை தானாகவே அலைபேசி, டி.வி யை இயக்குகிறது. இது சரியா?
அலைபேசி, டி.வியால் குழந்தைகளுக்கு உண்டாகும் சாதகத்தை விட பாதகமே அதிகம். மேலும் குழந்தைகள் பெரியோர், உறவுகள், நண்பர்களிடையே கற்றுக் கொள்ளும் நல்ல பழக்கங்களை இதுபோன்ற பொழுது போக்கு உபகரணங்கள் மூலம் கற்றுக் கொள்ள முடியாது. டி.வியை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது. மேலும் இது செயல் திறன், வளர்ச்சியை பாதிக்கும். 2-5 வயது வரை உள்ள குழந்தைகள் நாள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் டி.வி பார்க்க அனுமதிக்கலாம்.
குழந்தைகள் கார்ட்டூன் படம் பார்க்க அனுமதிக்கலாமா?
குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களை நாமே தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் அந்த நிகழ்ச்சிகளிலும் வன்முறைகள் மலிந்துள்ளன. அதற்கு பதிலாக புத்தகம் வாசித்தல், மற்ற குழந்தைகளுடன் விளையாடுதல், பெற்றோரிடம் உரையாடல் செய்தல் போன்றவற்றில் நேரத்தை செலவிட குழந்தைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
அலைபேசியை பொறுத்தமட்டில் தொடர்ந்து பயன்படுத்துதல் குழந்தைகளை அடிமைப்படுத்தும்.
மேலும் பிற குழந்தைகளிடம் உள்ள தொடர்பை துண்டித்து தனிமைப்படுத்தி விடும். எனவே, இவ்விரண்டு சாதனங்களையும் அளவோடு நாடுவது நலன் பயக்கும்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்
