கனவு தவிர்... நிஜமாய் நில்! - மின் காந்த அலைகளுக்கு நடுவில்...!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - மின் காந்த அலைகளுக்கு நடுவில்...!
PUBLISHED ON : பிப் 24, 2019

ஆண்களுக்கு ஆன்ட்ரோபாஸ் என்பது, 55 வயதிற்கு மேல் தான் வருகிறது. ஆனால், பெண்களுக்கு, சமீப ஆண்டுகளில், 35 வயதிலேயே மெனோபாஸ் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மொபைல் போன் உட்பட மின் காந்த அலைகள் வெளிப்படும் சாதனங்களை பயன்படுத்துவது முக்கிய காரணம். இவை கருக்குழாயை பலவீனப்படுத்துகிறது.
ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை அதிகப்படுத்துகிறது. கருக்குழாயில் நீர்க்கட்டிகள் வருவதற்கான, முக்கிய காரணமும் இது தான்.
எண்பதுகளில் நான் மருத்துவப் பயிற்சி துவக்கிய போது, கருக்குழாய் நீர்க்கட்டி பிரச்னையுடன் வரும் பெண்ணைப் பார்ப்பது அரிது. இன்று, பொது மருத்துவ ஆலோசனையின் போதே, தினமும் இரண்டு பெண்களை பார்க்க முடிகிறது.
பல மணி நேரம் கம்ப்யூட்டர், லேப் - டாப், மொபைல் உடன் இருப்பதால், 60 சதவீதத்திற்கும் மேல், இந்தப் பிரச்னை உள்ளது. கம்ப்யூட்டர், லேப் - டாப், மொபைல் போன்ற மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும், மின் காந்த அலைகளால் ஏற்படும் பாதிப்பே இதற்கு காரணம்.
இனப்பெருக்க உறுப்புகளை பாதிப்பது ஏன்?
நிற்கும் காரைத் தள்ளுவது சிரமம்; லேசாக நகரும் காரை, சுலபமாக தள்ளலாம். நம் உடம்பில், அதிகபட்ச, செல் பிரிதல் நடக்கும் இடம் இனப்பெருக்க உறுப்புகள்.
அதனால், வெளிக் காரணிகளால் ஏற்படும் பாதிப்பு இந்த உறப்புகளில் அதிகம். லட்சக்கணக்கில், செல் பிரிதல் தினமும் நடக்கும் இடம் என்பதால், பாதிப்பும் அதிகம். அதிலும், இளம் வயதில், இது மிக அதிகமாக இருக்கும்.
தண்ணிக்குள் இருப்பதைப் போலவே, மின்காந்த அலைகளுடனேயே வாழ்கிறோம். இருபாலருக்கும் மலட்டுத் தன்மை பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கும், மின் காந்த அலைகள் முக்கிய காரணம்.
டாக்டர் டி.எஸ்.ஆர்.மோகன் செல்வன்
பொது மருத்துவர், சென்னை.
மொபைல்: 98411 75385
