PUBLISHED ON : செப் 08, 2013
என் வயது 42. இருபது ஆண்டுகளாக எனக்கு, இளைப்பு தொந்தரவு உள்ளது. நிறைய மருந்து எடுத்துள்ளேன். இப்போதும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை, 'டெக்கட்ரான்' மருந்தை எடுக்கிறேன். இம்மாத்திரையை எடுக்கக் கூடாது என சிலர் கூறுகின்றனர். இதனால் என்ன தொந்தரவு ஏற்படும்?
இளைப்புக்கு நீங்கள் எடுக்கும் 'டெக்கட்ரான்' மாத்திரை, சரியான தீர்வு கிடையாது. அதுமட்டுமல்ல, இவ்வகை மருந்துகளை, 'லாங் ஆக்டிங் ஸ்டீராய்டு' என்பர். இம்மருந்துகளை தற்போது, எந்த மருத்துவரும் பரிந்துரைப்பது கிடையாது. இவ்வகை 'ஸ்டீராய்டு' களை தொடர்ந்து உபயோகிக்கும் போது, சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இதை உடனடியாக நிறுத்துவதுதான் சரியான தீர்வு. நீங்கள் உடனே மருத்துவரின் ஆலோசனை பெற்று, உங்களுக்கு ஏற்ற 'இன்ஹேலரை' பயன்படுத்துவதே நல்லது.
நெஞ்சின் நடுப்பகுதியும், முதுகின் பின்புறமும் சேர்ந்து, ஒரே நேரத்தில் வலித்தால் என்ன பிரச்னை? இருதய சிகிச்சை டாக்டரை பார்த்த போது, அவர் 'இருதயத்தில் தொந்தரவு எதுவும் இல்லை' என, கூறிவிட்டாரே?
இது உங்கள் இரு நுரையீரலுக்கும் நடுவில் இருக்கும், 'மீடியாஸ்டைனம்' என்னும் பகுதியில் ஏற்படும் தொந்தரவாக இருக்கலாம் அல்லது உங்கள் வயிற்றில் இருக்கும் ஒருவகை அமிலம் நெஞ்சு பகுதிக்கு வருவதால் ஏற்படும், 'ரெப்ளக்ஸ் ஈஸோபைஜிடிஸ்' என்ற தொந்தரவாக இருக்கலாம். அப்படி இல்லை எனில், முதுகுத்தண்டு வடத்தில் ஏற்படும் தொந்தரவால், இதுபோன்ற வலி ஏற்படும். தொந்தரவுக்கான காரணத்தின் மூலமாகவே, பிரச்னை என்னவென்று கண்டறிய முடியும்.
என் வயது 45. பத்து ஆண்டுகளுக்கு முன், 'டி.பி.,' நோய் இருந்ததால், மருந்து சாப்பிட்டேன். இப்போது, 'மீண்டும் டி.பி., உள்ளது' என, டாக்டர் மருந்து கொடுக்கிறார். ஆனால், இதே மாத்திரையை முன்பைவிட அதிகளவு கொடுக்கிறார். இது ஏன்?
உங்களுக்கு டி.பி.,க்கு மருந்து கொடுக்கும் முன், உங்கள் உடல் எடையை கவனிக்க வேண்டும். ஏனெனில், உங்கள் உடல் எடைக்கு ஏற்றவாறே டி.பி., 'டோஸ்' (அளவு) உபயோகிப்பது அவசியம். நீங்கள் பத்து ஆண்டுக்கு முன், இப்போது உள்ள எடையைவிட குறைவாக இருந்திருப்பீர்கள். அப்போது உள்ள மருந்தின் அளவை, இப்போது பயன்படுத்த முடியாது. எடைக்கு ஏற்ப, மருந்துகள் எடுக்கவில்லை எனில், 'டிரக் ரெசிஸ்டென்ஸ் டி.பி.,' வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதாவது, உங்கள் உடலில் இருக்கும் டி.பி., கிருமியை அழிக்க, அதைவிட சக்திவாய்ந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும். இல்லை எனில், டி.பி, கிருமி மாத்திரையின் பலனை அழித்து, அது வலிமையாகிவிடும். பின்பு இதை குணப்படுத்துவது கடினம். மருத்துவர்கள் பரிந்துரைப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அளவை குறைக்காதீர்கள்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147