PUBLISHED ON : ஜன 25, 2020

அடுத்த இரண்டு மாதங்களில், பள்ளி பொது தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நெருங்கினால், இயல்பாகவே மாணவர்களுக்கு, குழப்பம், அழுத்தம் வரும். தேர்வை எதிர்கொள்ள அவர்களுக்கு தேவையானது தன்னம்பிக்கை. இது, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது. தன்னம்பிக்கை இல்லாதவர்கள், படித்ததை மறந்து விடுவோம் என்ற அவநம்பிக்கையால், படித்ததை நினைவில் கொண்டு வருவதற்கு சிரமப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது?
செய்ய வேண்டிய காரியத்தை, செய்வதால் மட்டுமே, தன்னம்பிக்கை வளரும். அதாவது, ஒரு மாணவன், தான் படிக்க வேண்டியதை மட்டும் படித்தால், தன்னம்பிக்கை வளரும். நம் முயற்சியால், தானாக அமைந்துவிடக் கூடியது தன்னம்பிக்கை. அதை குறைக்கவோ, அதிகப்படுத்தவோ முடியாது.தேர்விற்கு முறையாக திட்டமிட்டு படிப்பதற்கு, தன்னம்பிக்கை மிகவும் உதவி செய்யும். தன்னம்பிக்கை இல்லாதவர்கள், 'என்னால் சரியாக தேர்வு எழுத முடியுமா, படித்தது நினைவில் இருக்குமா, தோற்று விடுவேனா...' என்ற குழப்பத்தில் இருப்பர்.ஆனால், தன்னம்பிக்கை, எந்த முயற்சியில் ஈடுபட வேண்டுமோ, அதில் ஈடுபட உதவி செய்கிறது.
எப்படி படிக்க வேண்டும்?
தினசரி படிக்க வேண்டிய பாடங்களை திட்டமிட்டு, இலக்கை நிர்ணயித்து படிக்க வேண்டும். இலக்கு இல்லாமல் படித்தால், மனம் போன போக்கில் அமைந்து விடும். அந்த இலக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. ஒருவரின் திறனுக்கு ஏற்ப, இலக்கு இருக்க வேண்டும்.சில மாணவர்களால், அதிகமான பாடங்களை படித்து முடிக்க முடியும். சிலரால், குறைந்த அளவு பாடங்களையே படிக்க முடியும். தங்களின் திறனுக்கு ஏற்ப இலக்கை அமைத்து, தினசரி நிர்ணயித்த இலக்கை அடைந்தே ஆக வேண்டும்.'நண்பர்கள், இன்னும் படிக்கவே ஆரம்பிக்கவில்லை... அவர்கள் ஆரம்பிக்கும் போது, நாமும் படிக்கலாம், என்று இருந்து விட்டு, கடைசி நேரத்தில், எளிதாக படித்திருக்க வேண்டியதைக் கூட படிக்காமல், தேர்வில் தோற்றுப் போவோர் உண்டு.சில மாணவர்கள் நன்றாக படித்து விட்டு, 'நான் இன்னும் படிக்கவே இல்லை' என, மற்றவர்களிடம் பொய் கூறலாம். அதனால், அவற்றை எல்லாம் நம்பி படிப்பில் இறங்காமல், இன்றே இப்போதே என்ற கொள்கையை வைத்துக் கொள்ள வேண்டும்.
மூளையை புத்துணர்வாக வைப்பது எப்படி?
படிப்பதற்கு, மூளை அடித்தளமாக அமைகிறது. மூளையை அவ்வாறு சிறப்பாக வைத்துக் கொள்ள, சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.நேரத்திற்கு துாங்கி, காலையில் சீக்கிரம் விழிக்க வேண்டும். எந்த நேரம் வேண்டுமானாலும் உறங்கலாம் என்று, நடு ராத்திரியில் துாங்குவது, மூளைத் திறனை பாதிக்கும். குறைந்தது, ஏடு, எட்டு மணி நேரம் துாக்கம் அவசியம். போதிய துாக்கம் இல்லாமல் படித்தால், நினைவாற்றல் பாதிக்கப்படலாம்.
கவனச் சிதறல்களை தவிர்க்க என்ன வழி?
மாணவர்களுக்கு, தேவையற்ற சிந்தனைகள் பல இருக்கலாம். காதல், இனக் கவர்ச்சி, பகை உணர்ச்சி, வீட்டு கவலைகள் இருக்கலாம். இவை அனைத்தையும், ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.இதிலிருந்து விடுபட்டு படித்தால் மட்டுமே, கவன சக்தியை அதிகரித்து, படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.'என்னால், நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். கவனத்துடன் படிக்க முடியும்' என்ற நம்பிக்கையை, தினசரி தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டும். இது, அவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும். படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். படித்ததை புரிந்து கொள்வதற்கும், நினைவில் வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பாடங்கள் புரிந்ததும், நினைவில் இருக்கும் என்று, தவறான நம்பிக்கை வைத்து விடுவர்.எழுதிப் பார்க்கும் போது தான், ஒரு விஷயத்தை, எந்த அளவு அவர்களால் நினைவில் வைத்து கொள்ள முடிகிறது என்ற உண்மை விளங்கும்.தேர்வு எழுதும் போது, திடீரென சந்தேகம் வரலாம். படித்தது நினைவுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், சிந்தனையை ஒருங்கிணைத்தால், படித்தது நினைவிற்கு வரும்.சில மாணவர்கள், 5, 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் படித்து விட்டு, 'என்னால் எதையும் நினைவில் வைக்க முடியவில்லை' என்பர். அதிக நேரம் ஒரு வேலையை செய்யும் போது தான், அந்த வேலைக்கு உட்பட்டு, முழுமையாக ஈடுபட முடியும்.படிப்பின் மேல் மூளையை ஒருமுகப்படுத்த, முதல், 15 நிமிடங்கள் தேவை. தொடர்ந்து படிக்கும் போது தான், மூளையால் நாம் படிப்பதை புரிந்து, நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.தொடர்ந்து ஒரு மணி நேரம் படித்தால், 10 நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு, தொடர்ந்து படிப்பில் ஈடுபட வேண்டும். ஓய்வு நேரத்தில், 'டிவி, மொபைல் போன்' பார்த்தால், மூளைக்கு தேயைான ஓய்வு கிடைக்காது. மூளை புத்துண்ர்ச்சி பெறாது. கண்ணை மூடி அமர்வது, இசை கேட்பது, பெற்றோருடன் பேசுவது, மூளைக்கு புத்துணர்வு தரும். தொடர்ந்து படித்தால், நன்கு நினைவில் இருக்கும்.தனிமையில் படிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்வையில் அமர்ந்து, படிக்க வேண்டும்.
பெற்றோர் பங்கு என்ன?
குழந்தைகளை, 'படி... படி' என்று சொல்வதை விட, அவர்கள் உடன் அமர்ந்து, படிப்பதில் பங்கு எடுத்து, உதவி செய்ய வேண்டும். 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அவரவர் தகுதிக்கு ஏற்ப தேர்வை எழுத, உதவி செய்ய வேண்டும்.மாணவர்கள் படிக்கும் போது, விருந்தினர், நண்பர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். வீட்டு பிரச்னைகளை பேசாமல், அமைதியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். பெற்றோர், தாங்களும் சில புத்தகங்களை, முழு ஈடுபாட்டுடன் படிப்பதன் மூலம், மாணவர்களை ஊக்குவிக்கலாம்.அதிக மதிப்பெண் வாங்கினால், அதற்கேற்ப பலன் இருக்கும்; குறைவாக மதிப்பெண் வாங்கினாலோ, தோல்வி அடைந்தாலோ, அடுத்த முறை எழுதி வெற்றி பெறலாம் என்ற மனோபாவம் இருக்க வேண்டும். இதுவே, வெற்றிக்கு அடிப்படையாக அமையும்.
டாக்டர் ரவி சாமுவேல்
மனநல ஆலோசகர், சென்னை.
044 - 4861 3790
