PUBLISHED ON : ஜன 25, 2020

விமான நிலையம் உட்பட, சென்னையின் பொது இடங்கள் பலவற்றில், சுவர்களில் ஓவியம் வரைந்திருப்பது, பொது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல், காவேரி மருத்துவமனையின் சுவர்கள் முழுவதும், 'மகிழ்ச்சி' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன.
மருத்துவமனை சுவர்களில், ஓவியம் எதற்கு?
மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலே, பரிசோதனை முடிவுகள் என்னவாக இருக்குமோ, டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பதற்றம் பொதுவானது.மருத்துவமனைக்கு செல்கிறோம் என்ற உணர்வே, அவர்களையும் அறியாமல், பதற்றத்தை உருவாக்கி விடும். அதிலிருந்த வெளிவந்து, அமைதியான மனநிலையை தர வேண்டும் என்பதற்காகவே, இதைச் செய்தோம்.
ஓவியங்களை பார்ப்பதால், மனம் அமைதியாகுமா?
நாம் அமர்ந்திருக்கும் அறையின் சுவர் முழுவதும் வெள்ளை வெளேர் என்று இருந்தால், சிறிது நேரத்தில் நமக்கு, அயர்ச்சியை ஏற்படுத்தும். அதே சுவரில், இயற்கை காட்சியோ, பறவை, விலங்குகளின் ஓவியமோ இருந்தால், பார்த்தவுடன் நம்மை மறந்து, மகிழ்ச்சியான உணர்வு வரும்.இதை அனைவரும், ஏதோ ஒரு நிலையில் அனுபவித்து இருப்போம். ஓவியம் என்றில்லை... இசை, நடனம் என்று எந்த கலையாக இருந்தாலும், அதை உருவாக்கும் கலைஞர், எந்த அளவு ஈடுபாட்டுடன், நேர்மறை உணர்வை வெளிப்படுத்துவாரோ, அதே உணர்வு, பார்க்கும் நமக்கும் ஏற்படும்.யதார்த்தத்தை மறந்து, மகிழ்ச்சியான மனநிலைக்கு, நம்மையும் அறியாமல் சென்று விடுவோம். 'ரிலாக்ஸ்' செய்து கொள்ள, இதுபோன்ற கலை வடிவங்கள், பெரிய அளவில் உதவுகின்றன. 'டோபமின், எண்டார்பின்' போன்ற, மகிழ்ச்சியான உணர்வை தரக்கூடிய ஹார்மோன், நம்மையும் அறியாமல் அதிகளவில் சுரக்கிறது.
நோயாளிகளின் மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்?
'டிமென்சியா' என்ற மறதி நோய் உட்பட, எந்த மாதிரியான மனநல பாதிப்புகள் ஏற்பட்டாலும், சிகிச்சை, லோசனைகளுடன், ஏதேனும் ஒரு கலையை கற்றுக் கொள்ள சொல்கிறோம். ஓவியம் வரைவது, பெயின்டிங் செய்வது இன்னும் நல்லது.ஒரு கலையை உருவாக்கும் போது, மூளையின் மொத்த பகுதியும் துாண்டப்படுகிறது. குறிப்பாக, எந்த மாதிரி நிறங்களை பயன்படுத்தலாம் என்பது உட்பட திட்டமிடுதலை செய்வது, மூளையின் முன் பகுதி. தவிர, ஈடுபாட்டுடன் செய்யும் போது, கைகள், கண்களின் இணைந்த செயல்பாடு என்று, அனைத்து அவயங்களும் துாண்டப்படுகின்றன.
ஓவியங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலர், ஓவியங்கள் வரைந்து தருவர். அதை மாட்டியிருக்கிறோம். தவிர, ஆர்வமுள்ள குடும்பத் தலைவிகள், சிஷ்யா பள்ளி மாணவர்கள் வரைந்தவற்றை வைத்திருக்கிறோம்.மறதி நோயாளிகளுக்கான ஆதரவு குழு உருவக்கியுள்ளோம். அவர்களை, புதியதாக ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்கள் வரைந்ததை பயன்படுத்துகிறோம்.வரைவதில் ஆர்வம் உள்ள டாக்டர்களும், வரைந்து கொடுக்கின்றனர். இதனால், மருத்துவமனைக்கு வருபவர்கள், புதிதாக என்ன ஓவியம் இருக்கிறது என்று, எதிர்பார்ப்புடன் பார்க்கின்றனர். வளரும் ஓவிய கலைஞர்களுக்கு, இது சிறந்த களமாக இருக்கிறது. 'ஆட்டிசம்' பாதித்த குழந்தை ஐஸ்வர்யா. அவளுக்கு, வலிப்பு நோயும் உள்ளது. புதிர்களை விடுவிப்பதில், அபார திறமை உடையவள். அவள் போட்ட புதிர்களையும், ஓவியமாக மாட்டியுள்ளோம்.
கலைகளில் ஈடுபட்டால், நோய் விரைவில் குணமாகுமா?
அறிவியல் பூர்வமாக, இது பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், கலை ஒரு வடிகாலாக இருக்கிறது. எல்லா நேரமும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். 'ஐயோ... எனக்கு இப்படி வந்து விட்டதே' என்ற யோசித்தால், சுய இரக்கம் தான் வரும். அதை விடுத்து, இது போல் புதிய விஷயத்தை செய்தால், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.எந்த புதிய விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும், வயது தடையே இல்லை. அது போல், உடல் கோளாறும் தடையில்லை.
டாக்டர் புவனேஷ்வரி ராஜேந்திரன்
நரம்பியல் மருத்துவர்,
காவேரி மருத்துவமனை,
சென்னை.
90942 20777
