PUBLISHED ON : ஜூன் 18, 2023

குஜராத்தைச் சேர்ந்த 41 வயது இதய அறுவை சிகிச்சை டாக்டர் கவுரவ் காந்தியின் எதிர்பாராத இறப்பு, மருத்துவ உலகை மட்டுமல்ல அனைவரையும் திகைக்க வைத்தது. காரணம், இளம் வயது, புகை, மது உட்பட எந்த கெட்ட பழக்கமும் இல்லை. தன்னுடைய மருத்துவ பயிற்சி காலத்தில், ஒரு நாளில் தொடர்ந்து 14 மணி நேரம் சுறுசுறுப்பாக வேலை செய்து, 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
இங்கு தான் பிரச்னையே துவங்கி இருக்கிறது. தொடர்ந்து பல மணி நேரம் பரபரப்பாக வேலை செய்யும் போது, அதற்கு தகுந்தாற் போல கவனமும் ஈடுபாடும் தேவை. இது இயல்பாகவே அழுத்தத்தைத் தரும். இது நேர்மறையான விஷயம் இல்லை.
இதனால் 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தத்தை உண்டாக்கும் 'கார்ட்டிசால் ஹார்மோன்' அதிக அளவில் சுரக்கிறது. நமக்கே தெரியாமல் தினந்தினம் இதயத்தை அழுத்தி, பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்னுடைய அனுபவத்தில், ஒரு மனிதனின் வாழ்நாளில் முதல் 40 ஆண்டுகள் தான் இயற்கை நமக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அடுத்து வரும் 40 ஆண்டுகள் நம் உடலையும் மனதையும் எந்த அளவு அக்கறையாக பராமரிக்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை உள்ளது.
- டாக்டர் பழனியப்பன் மாணிக்கம்.

