PUBLISHED ON : ஜூன் 18, 2023

குழந்தைகளுக்கு வரும் பொதுவான சிறுநீரகக் கோளாறு என்பது, பிறவியிலேயே வரக்கூடிய சிறுநீர் பை, குழாய் இவற்றில் ஏற்படும் பிரச்னைகள். இதில், சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல், சிறுநீர் சொட்டு, சொட்டாக போகும்; இயல்பாக இல்லாமல் மிக மெதுவாக கழியும். இது போன்ற பிரச்னை, ஆண் குழந்தைகளுக்கே பொதுவாக வரும்.
சிறுநீர் பையில் இருந்து சிறுநீர் வெளியில் வர வேண்டும். அப்படி இல்லாமல் திரும்பவும் நீர் மேல் நோக்கி சிறுநீரகங்களுக்கே சென்று விடும். இதனால் அடிக்கடி தொற்றுகள் ஏற்படும். இது பெண் குழந்தைகளை பாதிக்கும் பிரச்னை.
இதில், சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல், காய்ச்சல், முதுகு வலி போன்ற உபாதைகள் வரலாம். பொதுவாகவே இந்த அறிகுறிகள் இருந்தால், அடிக்கடி தொற்று ஏற்படுகிறது என்று அர்த்தம். இவை, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 'நெப்ராடிக் சிண்ட்ரோம்' என்ற பிரச்னை வரும். இதில், முகம், கை, கால் வீங்குவது, சிறுநீர் அளவு மிகக் குறைவாகவோ, அளவுக்கு அதிகமாகவோ கழிப்பது, இளஞ்சிவப்பு அல்லது அடர்த்தியான நிறத்தில் சிறுநீர் கழிப்பது, நுரைத்துப் போவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம். துாங்கி எழுந்ததும் முகம், கண்களைச் சுற்றி வீக்கம் இருக்கும்.
இந்த குழந்தைகளுக்கு சிறுநீரில் புரதச் சத்து வெளியேறுவதால், இது போன்ற பிரச்னைகள் வருகின்றன.
சிறுநீரகங்களின் வேலை வடிகட்டியாக செயல்படுவது. தேவையற்ற பொருளை வெளியில் அனுப்பி, தேவையானதை தக்க வைக்க வேண்டும். இப்பிரச்னையில் தேவையான புரதத்தை வெளியில் அனுப்பி விடுகிறது. பதிலாக, அதிக அளவில் புரதம் கொடுப்பதால் பிரச்னை தீராது. சிகிச்சை தந்தால் தான் பலன். இதை சரி செய்ய நல்ல சிகிச்சைகள் உள்ளன.
சில குழந்தைகளின் வளர்ச்சி, வயதிற்கு ஏற்ற வளர்ச்சியுடன் இருப்பது போன்றவை சிறுநீரகக் கோளாறாக இருக்கலாம்.
ரத்தம், சிறுநீர் பரிசோதனையிலேயே, 70 சதவீதத்திற்கு மேற்பட்ட சிறுநீரகக் கோளாறு களை கண்டறிய முடியும். மேற்கொண்டு தேவைப்பட்டால், 'அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்', அரிதாக சிறுநீரக 'பயாப்சி' செய்வோம்.
நோய் முற்றிய நிலையில் சிறுநீரகங்கள் முழுமையாகவே செயல் திறனை இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பல சிறுநீரகக் கோளாறுகள் ஆரம்ப நிலையில் எந்த பிரச்னையும் தராது. இரண்டு சிறுநீரகங்களும் சுருங்கிவிட்டால், பெரியவர்களுக்கு செய்வது போன்று டயாலிசிஸ், மாற்று சிறுநீரகம் பொருத்துவது தான் வழி.
டாக்டர் எம்.நவிநாத்,
குழந்தைகள் நல சிறுநீரக கோளாறுகள் மருத்துவ ஆலோசகர்,
சென்னை

